வேறு 29. தம்சேனை அழிதல்கண்டு வீடுமன் சினந்து போர்க்குச் செல்லுதல். துரகத் தடந்தேர்ந் தனஞ்சயன்கை வரிவெஞ் சாபஞ் சொரிகணையா லுரகத் துவசன் பெருஞ்சேனை யொருசா ருடைய வொருசாரிற் சருகொத் தனில குமரன்கைத் தண்டா லுடையக் கண்சிவந்து கருகித் திருகி மேனடந்தான் கங்கா நதியா டிருமைந்தன். |
(இ-ள்.) துரகம் - குதிரைகள்பூட்டிய, தட - பெரிய, தேர் - தேரையுடைய, தனஞ்சயன் - அருச்சுனனது, கை-கையிற்பிடித்த, வரி - கட்டமைந்த, வெம் சாபம் - கொடிய வில், சொரி-பொழிந்த, கணையால் - அம்புகளால், உரகம் துவசன் பெரு சேனை-பாம்புக் கொடியனான துரியோதனனது பெரியசேனை, ஒரு சார்- ஒருபக்கத்தில், உடைய - அழியவும்,-ஒரு சாரில் - மற்றொருபக்கத்தில், அனிலகுமரன் கை தண்டால் - வாயுகுமாரனான வீமனதுகையிலுள்ள கதாயுதத்தால், சருகு ஒத்து - (பெருங்காற்றிற்பட்ட) உலர்ந்த இலைகள்போல, உடைய - துரியோதனசேனைகள்) அழியவும்,- (கண்டு), கங்காரகநதியாள் திரு மைந்தன் - கங்கைநதியின் சிறந்தபுத்திரனான வீடுமன், (கோபத்தால்,) கண் சிவந்து-கண்கள் செந்நிறமடைந்தும், கருகி - முகங்கறுத்தும், திருகி - மாறுபட்டு, மேல் நடந்தான் - (எதிரிகள்) மேல் போருக்குச் சென்றான்; (எ-று.)-கருகி - மனந்தவித்து என்றுமாம். இதுமுதற் பதின்மூன்று கவிகள் - கீழ் நான்காம்போர்ச் சருக்கத்தின் இருபத்து மூன்றாங்கவிபோன்ற அறுசீர்க்ககழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள்- (312) 30.-வீடுமன்முதலோர் பாஞ்சாலர் முதலானாரோடு பொருதல். பட்டக்களிற்றுப்பாய்புரவிப்பைம்பொற்றடந்தேர்ப்பாஞ்சாலர் திட்டத்துய்மன்முதலானோர்சிகண்டியுடனேயெதிர்தோன்ற வட்டக்கவிகைவீடுமனுமன்னற்கிளையகாளையரு மெட்டுத்திக்கிற்காவலருமவரோடெய்தியிகல்செய்தார். |
(இ-ள்.) (அப்பொழுது), பட்டம் களிறு-நெற்றிப்பட்டத்தையுடைய யானைகளையும், பாய் புரவி - பாய்ந்துசெல்லுங் குதிரைகளையும், பைம் பொன் தடதேர் - பசும்பொன்னாலாகிய பெரிய தேர்களையுமுடைய, பாஞ்சாலர் - பாஞ்சாலதேசத்து அரசர்களாகிய, திட்டத்துய்மன் முதலானோர் - திருஷ்டத்யும்நன் தலியவர், சிகண்டியுடன்ஏ எதிர் தோன்ற - சிகண்டியோடு எதிரில் வர,-வட்டம் கவிகை வீடுமன்உம் - வட்டவடிவமான குடையையுடைய பீஷ்மனும், மன்னற்கு இளைய காளையர்உம் - துரியோதனராசனுக்குத் தம்பியான வீரர்களும், எட்டு திக்கில் காவலர்உம் - எட்டுத்திசையினின்றும் (வந்துள்ள மற்றும் பல) அரசர்களும், அவரோடு எய்தி இகல் செய்தார் - அவர்களோடு நெருங்கிப் போர்செய்தார்கள்;(எ-று.) (313) |