பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்23

கெல்லாம், நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போற், பல்லார்
பயன்றுய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே, நல்லாண் மகற்குக் கடன்" என்ற
நாலடியாரையும், "பார்கெழுபழுமரம்பழுத்தற்றாகவும்" என்ற கம்பராமாயணத்தையும்
இங்கேயறிக. வநம் - வடசொல்; இது-நீரென்றும் காடென்றும் பொருள்படுதலை
"வனமே காடும் நீரு மழகும்" என்ற திவாகரத்தாலு மறிக. தேமா-தேன்போலினிய
பழங்களைத் தருவதொரு மாமரவிசேடம்; இதன் எதிர்மொழி-புளிமா.
தேன்+மா=தேமா. முனிவனை -உருபு மயக்கம். "முன்னந்தனிவனந்திரிந்து
மீண்டோர்தானையங்கானிற் புக்கார்' என, முன்பு பலவருஷகாலங்
காட்டிலேதிரிந்து இனி வனவாசம் வேண்டாஎன்று திரும்பினவர்கள்
மீண்டுமொருகாட்டிற் பிரவேசித்தன ரென்று ஒருசமத்காரந் தோன்றக் கூறியது,
பொருத்தமின்மையணி யென்னும் அஸங்கதியலங்காரமாகும். சேனையைக்
காடென்றது, அடர்த்தியாலும் அச்சந்தருதலாலுமென்க.             (16)

17.-படையை வியூகமவகுத்தபின் பாண்டவரின்
தூசிப்படை துரியோதனன் படையுடனே எதிர்க்கச்
செல்லுதல்.

கொற்றவர் தம்மை யேழக் குரோணிவெஞ் சேனையோடும்    
பற்றுடை யசல மாகும் பான்மையால் வியூக மாக்கி
வெற்றிதந் தருள்கென் றேத்தி விந்தையை வணங்கி மாயோன்
சொற்றபின் றூசி யோடு தூசிசென் றுற்ற தன்றே.

     (இ-ள்.) மாயோன் - கண்ணபிரான், ஏழ் அக்குரோணி வெம் சேனையோடுஉம்
- ஏழு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள பயங்கரமான சேனையுடனே,
கொற்றவர்தம்மை - அரசர்களை, பற்று உடை அசலம் ஆகும் பான்மையால்
வியூகம்ஆக்கி - (ஒன்றோடொன்று) தொடர்ச்சியுள்ள மலை யென்னுந் தன்மையால்
அணி வகுப்புச்செய்து, வெற்றி தந்தருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி -
சயத்தைக் கொடுத்தருள்வாயாகவென்று துதித்துப் (போர்க்களத்துக்குரிய
தெய்வமாகிய) துர்க்கையை வணங்கி, சொற்ற பின் - (போர்செய்யும்படி)
சொன்னபின்பு, தூசி - முற்படை, தூசியோடு-(எதிரிகளுடைய) முற்படையுடனே,
சென்று உற்றது-(போருக்குப்) போய் நெருங்கிற்று; (எ-று.)-அன்றே - ஈற்றசை.

     'படைவகுப்பாவது - வியூகம்; அஃது - எழுவகையுறுப்பிற்றாய்
வகையால்நான்காய் விரியால் முப்பதாம். உறுப்பு ஏழாவன - அரம் முதல்
தோட்டியீறாயின. வகைநான்காவன - தண்டம், மண்டலம், அசங்கதம் [அஸம்ஹதம்],
போகம் என இவை. விரி முப்பதாவன - தண்டவிரி பதினேழும், மண்டலவிரி
இரண்டும், அசங்கதவிரி ஆறும், போகவிரி ஐந்தும் எனஇவை. இவற்றின்பெயர்களும்
இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும்; அவையெல்லாம் வட நூல்களுட்
கண்டுகொள்க' என்பது, திருக்குறள் பரிமேலழகருரை. அசலவியூகமாக்குதலாவது -
நால்வகைச்சேனைகளையும் மலைபோல் வடிவு அமையும்படி ஒழுங்குபடநிறுத்துவது;
சிறுசேனையைக் கொண்டே பெரியசேனையை வென்று அழிக்கவல்லதும்,
இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதும், அசலமென்று பிரசித்தமானதும், வச்சிர