பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்253

48.-அதுகேட்ட திருதராஷ்டிரன் கண்ணீர்வடியவாடுதல்.

முனியுநகரிற்சென்றுமுகுரானனனுக்குரைப்பக்
கனியுமன்பின்வெள்ளங்கண்ணீராகிச்சொரிய
இனியென்மைந்தர்க்குறுதியில்லையென்றென்றேங்கிப்
பனிவெண்மதியங்கண்டபங்கயம்போலானான்.

     (இ-ள்.) (அவ்வாறே), முனிஉம்-சஞ்சயனும், நகரில் சென்று-அஸ்தினபுரத்திற்
போய், முகுரானனனுக்கு உரைப்ப-திருதராட்டிரனுக்குச் செய்திசொல்ல,
(அதுகேட்டவுடனே அவன்), கனியும் அன்பின்-(வீடுமனிடத்து) நெஞ்சுருகிய
அன்பினால், கண்ணீர் வெள்ளம் ஆகி சொரிய-, இனி என் மைந்தர்க்கு உறுதி
இல்லை என்று என்று - இனிமேல் என்பிள்ளைகளுக்கு வலிமையில்லையென்று
பலமுறைசொல்லி, ஏங்கி-விசனப்பட்டு, பனிவெண் மதியம் கண்ட பங்கயம்போல்
ஆனான்-குளிர்ந்த வெண்ணிறமான சந்திரனைப் பார்த்த தாமரைமலர்போ
லாயினான் [வாடி மெலிந்தான்];

     முகுராநநன் என்ற வடமொழிப்பெயர்க்கு-கண்ணாடிபோன்ற முகமுடையவ
னென்று பொருள். முகுரம்-கண்ணாடி, ஆநநம்-முகம். கண்ணாடி தான்
பிறராற்காணப்பட்டுப் பிறரைத் தான் காணும் உணர்ச்சி யில்லாதது போல, தான்
பிறராற் காணப்பட்டுப் பிறவிக்குருடனாதலாற் பிறரைத் தான் காணாத
முகத்தையுடையவனென்றவாறு; இனி, கண்ணாடி போல விளக்கமுடைய
முகமுடையனென்றுமாம். ''வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர் பெற்ற,
முகத்தவன்'' என்றார் கலித்தொகையிலும். பி-ம்: என்றென்றிரங்கி.    (372)

49.-திருதராஷ்டிரன் பெருஞ்சோகமடைந்து கதறுதல்.

மண்மேல்விழுந்தானெழுந்தான்மானம்போனதென்றான்
கண்மேலெற்றியின்றேகண்ணுமிழந்தேனென்றான்
விண்மேலுள்ளோர்செல்வம்வீறுபெற்றதென்றான்
புண்மேலனலுற்றென்னப்புலர்ந்தான்முதல்வன்புதல்வன்.

     (இ-ள்.) (பின்பு), முதல்வன் புதல்வன் - (குருகுலத்துப்)
பெரியவனானவீடுமனுக்கு(த்தம்பி) மகனான திருதராஷ்டிரன், மண்மேல் விழுந்தான்-
தரையிலே விழுந்திட்டான்;  எழுந்தான்-; மானம் போனது என்றான் - (எனது)
பெருமையழிந்தது என்று சொன்னான்; கண்மேல் ஏற்றி-(தன்) கண்மேல் (கையால்)
மோதிக்கொண்டு, இன்றுஏ கண்உம் இழந்தேன் என்றான்-இன்றைக்கே (நான்)
கண்ணையுமிழந்தே னென்று கூறினான்; விண்மேல் உள்ளோர் செல்வம் -
தேவலோகத்திலுள்ளோரது ஐசுவரியம், வீறுபெற்றது - (வீடுமன் இனி
அனுபவிக்கப்பெறுதலால்) சிறப்புப்பெற்றது, என்றான் - என்றுஞ் சொன்னான்;
புண்மேல் அனல் உற்று என்ன புலர்ந்தான்-புண்ணின் மேல் நெருப்புப்பட்டாற்
போல மிகவருந்தினான்; (எ-று.)