யொத்த மனித ரென்க; இனி, உள்பொருளுவமையாக, (திருமால் கொண்ட) இரண்டுகால்களையுடைய நரசிங்கமூர்த்தியை யொத்த பராக்கிரமமுடையாரென்றுங் கொள்ளலாம். சிங்கம் - ஸிம்ஹ மென்னும் வடமொழித்திரிபு; (யானை முதலிய பெரியவிலங்குகளையும்) இம்சிக்க [கொல்ல] வல்லதென்று பொருள். தொடை - பிரயோகிக்குந்தரம் ஒன்று. கோளிரண்டு - எளிதில் அற்றுவிழுதற்கு உவமை. கோள்-காலத்தை அளந்து கொள்வது என்று காரணப்பெயர். குறுகார் - (தம்மோடு) சேராதவர்; பகைவர். 'சமர்' என்ற விடத்து 'சிலர்' என்றும் பாடம். (29) 30, | ஓடிமுட்டலிற்றேர்களுடைந்தன நாடிமுட்டலினாகங்கள்வீழ்ந்தன கூடிமுட்டலிற்கொய்யுளைமாய்ந்தன சாடிமுட்டலினாள்களுஞ்சாய்ந்தனர். |
(இ - ள்.) (இருபடையிலும் ஒன்றோடொன்று), தேர்கள்-, ஓடி முட்டலின்- விரைந்துசென்று தாக்குதலால், உடைந்தன-; நாகங்கள் - யானைகள், நாடி முட்டலின்- தேடிச்சென்று மோதுதலால், வீழ்ந்தன - கீழே விழுந்தன; கொய் உளை -கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகள், கூடி முட்டலின்- நெருங்கிமோதுதலால், மாய்ந்தன-இறந்தன; ஆள்கள்உம்-காலாள்வீரரும், சாடி முட்டலின்-மோதித்தாக்குதலால், சாய்ந்தனர்-அழிந்தனர்; (எ-று.)- சாய்ந்தன என்றும்பாடம். நாகம்-மலையில்வாழ்வதென்று பொருள்; வடசொல். நகம் - மலை, அசையாதது, கொய்யுளை-வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'ஆடிமுட்டலின்' என்ற பாடத்துக்கு, ஆடுதல்-போராடல். (30) 31.-தொந்தயுத்தம். பற்றிநின்றொருவன்படைவாளெதி ருற்றவன்றலைசிந்திடவோச்சினான் அற்றதன்றலைகொண்டவனுந்தனைச் செற்றவன்றலைசிந்திடவீசினான். |
(இ-ள்.) ஒருவன் - ஒருவீரன், வாள் படை பற்றி நின்று - வாளா யுதத்ை(கையில்) பிடித்துநின்று, எதிர் உற்றவன் தலை சிந்திட - எதிரிற் பொருந்தினபகைவனது தலை சிதறும்படி, ஓச்சினான்-வீசினான்; அற்ற தன் தலைகொண்டவன்உம் - (அங்ஙனம்) தன்தலை அறுபட்ட எதிரியும், தனைசெற்றவன்தலைசிந்திட-தன்னை யழித்தவனது தலை சிதறும்படி, வீசினான் - (வாளை)வீசினான்; தொந்தயுத்தமாக இரண்டுவீரர் வாளையேந்தி வீராவேசத்தோடு விரைந்து போர்செய்கையில், ஒருவன் மற்றொருவன்கழுத்தில் வாளை வீசித் தலையை யறுத்துத் தள்ள, அங்ஙனம் தலையறுகிறவனது கையில் ஓச்சின வாளும் முன் அவன்குறித்த குறிப்படி எதிரியின்கழுத்தில் விழுந்து தலையையறுத்த தென்பதாம்; |