பக்கம் எண் :

34பாரதம்வீட்டும பருவம்

35.-இருபக்கத்தைச்சார்ந்த பலதேசத்துமன்னவரும் மாறுபட்டுப்பொருதல்.

கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுத ராரியர் துளுவருங்
கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும்
வங்கர் கோசலர் தமிழர் குண்டல ரொட்டர் மாளவர் மகதரும்
இங்கு மங்கு மணிந்து நின்றவ ரெதிர்மு னைந்தன ரிகலியே.

     (இ-ள்.) இங்குஉம் அங்குஉம் அணிந்து நின்றவர் - பாண்டவர் பக்கத்தும்
கௌரவர்பக்கத்தும் (ஆக இரண்டுபக்கங்களிலும்) அணியிற்பொருந்தி
நின்றவர்களாகிய, கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர்
துளுவர்உம் கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கர்உம் வங்கர்
கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதர்உம் -
இந்நாட்டுவீரர்களெல்லோரும், இகலி-பராக்கிரமங்கொண்டு, எதிர் முனைந்தனர்-
எதிர்த்துப் போர்செய்தார்கள்;

     ஸ்ரீகாளஹஸ்தி, பீமேசுவரம், ஸ்ரீசைலம் என்னும் மூன்று சிவலிங்க
ஸ்தானங்களை எல்லையாகவுடைய தேசம், திரிலிங்கதேச மெனப்படும்; அதுவே
தெலுங்கு
என மருவிற்று. தமிழ்நாட்டின் எல்லையை 'குணகடல் குமரி குடகம்
வேங்கடம், எனுநான் கெல்லையி னிருந் தமிழ்க் கடலுள்" என்றதனா லறிக.
சிங்களம்- ஸிம்ஹளம்: வடசொல். விந்தியமலைக்கும் இமயமலைக்கும் இடையிலே
கிழக்கும்மேற்கும் கடலெல்லையாகவுள்ள பூமி, ஆரியாவர்த்த மென்னப்படும்;
அதிலுள்ளவர்- ஆரியர். சிங்களம், துளுவம், கங்கம், சோனகம், சீனம் கலிங்கம்,
தெலுங்கம்,வங்கம், கோசலம், தமிழ் இவை - பதினெட்டுப் பாஷைகள்  வழங்குந்
தேயங்களினுட்பட்டவை. அணிந்து நின்றவர் - அணிவகுக்கப்பட்டு ஒழுங்குபட
நின்றவரென்க. இப்பாட்டில் முதன் மூன்று அடிகள் அடைமொழியில்லாமல்வந்தது,
ஒருஅழகாம். கோசல மென்பது-க உசல எனப் பிரிந்து, பிரமனுக்கு உல்லாசத்தை
[மகிழ்ச்சியை]த் தருவ தெனப் பொருள்படும். 'தமிழர்' எனப் பொதுப்படக்கூறியது,
சேரசோழ பாண்டியர் மூவரையுங் குறிக்கும் த்ரவிட மென்னும் வடமொழி,
தமிழெனத் திரிந்து நின்றது; இனி, தமியென்னும் வினைப்பகுதியடியாப் பிறந்து
தனக்கு இணையில்லாத பாஷையெனப் பொருள் தருவதென்பாரும், இனிமை
யென்னும் பொருளுணர்த்தும் தமிழ் என்னும் சொல் எல்லாப்பாஷைகளினும்
இனியதாகிய இப்பாஷைக்கு ஆகுபெயராய் வழங்கிற்றென்பாரும், மற்றைப் பல
பாஷைகளிலில்லாமல் தன்னிடத்தில் மாத்திரமே தனியாகவுள்ள ழகரமென்னும்
எழுத்தை யுடையதென அன்மொழித்தொகைக் காரணக்குறி யென்பாரு முளர்.

     இது முதற் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்டஎழுசீராசிரியவிருத்தங்கள்.                         (35)