57. | வீடுமனுமீளவொருவிற்கொடுசிவேதன் சூடுமுடிவீழவொருசுடுகணைதொடுத்தான் கோடுசிலைவாளிபலகொண்டிவனவன்றேர் நீடுகொடியாடையைநிலத்துறவிழுத்தான். |
(இ - ள்.) (அப்பொழுது), வீடுமனும்-, மீள ஒருவில்கொடு-மறுபடி ஒருவில்லை யெடுத்துக்கொண்டு, சிவேதன் சூடு முடி வீழ-சுவேதன் தரித்துள்ள கீரிடம் கீழ்விழும்படி, ஒருசுடு கணை தொடுத்தான்- உக்கிரமான ஒரு அம்பை எய்தான்; இவன் - இந்தச்சுவேதன், கோடு சிலை வாளி பல கொண்டு - வளைத்த வில்லினின்றுஎய்த பல அம்புகளால், அவன் தேர் நீடுகொடி ஆடையை - அவ்வீடுமனது தேரிற்கட்டிய உயர்ந்த (பனைக்) கொடிச்சீலையை, நிலத்துஉற - தரையிலே விழும்படி,விழுத்தான் - அறுத்துத் தள்ளினான்; (எ - று.)- நிலத்துறவழித்தான்' என்றும் பாடம். சுடுகணை - வினைத்தொகை; பகைவரை நெருப்புப்போல அழிக்க வல்ல அம்பென்க: நெருப்பில்வைத்துக்காய்ச்சிவடித்த அம்பெனினுமாம். (57) 58. | பின்னையுமவன்றனிபிடித்துவருசாபந் தன்னையுமிவன்பலசரங்கொடுதுணித்தான் மின்னையுநகும்பகழிவீடுமன்வெகுண்டாங் கென்னவமர்செய்வதினியென்றுதளர்வுற்றான். |
(இ - ள்.) பின்னைஉம் - (கொடிச்சீலையை யறுத்ததுமாத்திரமே யன்றிப்) பின்னும்,இவன்-சுவேதன், அவன் தனி பிடித்து வரு சாபந் தன்னைஉம்-வீடுமன் ஒப்பில்லாமற் கையிலேந்திவந்த அவ்வில்லையும், பல சரம்கொடு துணித்தான்- அநேகபாணங்களால் அறுத்துத்தள்ளினான்; மின்னைஉம்நகும் பகழி வீடுமன் - (ஒளியால்) மின்னலையும் இகழ்ந்துசிரிக்கும்படியான அம்புகளையுடைய வீடுமன், ஆங்கு - அப்பொழுது, இனி வெகுண்டு என்ன அமர் செய்வது என்று தளர்வு உற்றான் - 'இனிமேல் (நாம் இவனோடு) கோபித்து என்ன போர்செய்வது?' என்று சோர்வையடைந்தான்; (எ - று.) வீடுமன் இரண்டுமுறை வில்லெடுக்க, அவ்விரண்டுமுறையும் அவன் வில்லைச் சுவேதன் உடனே அறுத்ததனால், இனி இவனோடு விற்போர்செய்யமுடியா தென்று கருதி மனந்தளர்ந்து, எங்ஙனம் போர்செய்வ தென்றனன் என்பதாம். நகுதல் - பரிகசித்தல். ஆங்கு - அதனா லென்றுமாம். மின்னையும், உம்மை - உயர்வுசிறப்பு; அதன் ஒளிமிகுதியை விளக்கும். பி - ம்:-பிடித்தவரிசாபம். (58) 59.-துரியோதனன் சொல்லினால் பல அரசர் பக்கபலமாக வீடுமனைக் கிட்டுதல். தளர்ந்தநிலைகண்டுதுரியோதனனரும்போர் விளைந்ததுசிவேதனுடன்வீடுமனிளைத்தான் இளந்தலையுறாதபடியேகுமினெனப்போய்க் கிளர்ந்தமுடிமன்னர்பலர்கிட்டினர்விரைந்தே. |
|