பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்81

மேவலர் விதம் படையும் வீடுமன்உம் உட்கும் வகை - பகைவர்களது
பலவகைச்சேனைகளும் (அச்சேனைத்தலைவனான) பீஷ்மனும் அஞ்சும்படி,
பூவலயம் முற்றுஉம் எழுகாலம் இறுதி பரவை போல்- பூமண்டலமுழுவதிலும்
பொங்கிப்பரவுகிற கல்பாந்தகாலத்துப் பிரளயப் பெருங்கடல்போல [யாவரையும்
அழிக்குமாறு], இகல் விளைத்த பொழுதில் - போரைச்செய்தசமயத்தில், சர்ப்ப
துவசம் காவலன்-பாம்புக் கொடியையுடைய துரியோதனராசன், கூவலின்
நிலைபுனல்உம் மீது எழுவது ஒத்தது ஒரு கோபமொடு - கிணற்றினுள் நின்ற நீர்
மேற்கிளம்புவதைப் போன்ற [உள்ளிருந்து வெளிக்கிளம்பின] ஒரு
பெருங்கோபத்துடனே, உரைப்ப - (முனைந்துசெல்லும்படி) கட்டளை கூற, காவலர்
எனை பலர்உம் - அரசர்களெல்லோரும், இருவோரைஉம் வளைத்தனர்கள் -
(வீமனும் அபிமன்யுவு மாகிய) அவ்விரண்டுபேரையுஞ் சூழந்துகொண்டார்கள்.

     வீமனும் விறற்புதல்வனும் - அன்புடைமைபற்றி, தம்பிமகனை அவன்
மகன்போலக் கூறியது. புனலும், உம் - அசை; இழிவு சிறப்புமாம். பரவை -
பரவியது. 'கூவலினிலைப்புனலுமீதெழுவ தொத்ததொரு கோபம்' என்பதற்கு -
கிணற்றுநீருங் கொதித்து மேற்கிளம்பத்தக்கதாகிய கடுங்கோபமென்று
உரைப்பாருமுளர். பி-ம்: கோபமொடுமத்தினபுரிக்.                (104)

28.-அருச்சுனன் வீமஅபிமன்யுக்களைக் குறுகுதல்.

தானவர்சமத்துமிருதோள்வலியுமற்றுமுனைதானைபுறகிட்டழியவே
வானவர்துதிக்கவயவாகைபுனையக்கடவுள்வாழ்வினிதளித்துவருவோன்
மீனவனெனத்தகையகாளையொடெடுத்தகதைவீமனவளைத்தனரெனக்
கூனல்வரிவிற்பகழிதூவியிரதத்தின்மிசைகூவியவரைக்குறுகினான்.

     (இ - ள்) தானவர் - (நிவாதகவசரும் காலகேயரு மாகிய) அசுரர்கள்,
சமத்துஉம்  இருதோள் வலிஉம் அற்று - (தங்கள்) சாமர்த்தியமும் இரண்டு
தோள்களின்பலமும்ஒழிந்து, முனை - போர்க்களத்திலே, தானை -
சேனைகளுடனே, புறகு இட்டு -(முன்னே) முதுகுகொடுத்து, அழிய - (பின்பு)
அழிந்திடவும்,-வானவர் துதிக்க-தேவர்கள் புகழவும்,-வய வாகை புனைய-
வெற்றிக்குரிய வாகைப்பூமாலையைச்சூடவும், கடவுள் வாழ்வு இனிது அளித்து
வருவோன் - (இந்திரன் முதலிய)தேவர்களுக்கு வாழ்க்கையை இனிமையாகக்
கொடுத்து தன்மையனாகியஅருச்சுனன்,- 'மீனவன் என தகைய காளையொடு-
மீன்வடிவமெழுதியகொடியையுடைய மன்மதனென்று (அழகிலும் பேராற்றலிலுஞ்)
சொல்லத்தக்க(தன்மகனான) அபிமனுடனே, எடுத்த கதை வீமனை-ஏந்திய
கதாயுதத்தையுடையவீமனையும், வளைத்தனர்-(பகையரசர்களெல்லோரும் ஒருங்கு)
சூழ்ந்தார்கள்,' என -என்று அறிந்து, கூன் நல் வரி வில் பகழி தூவி - வளைந்த
சிறந்த கட்டமைந்த(தனது காண்டீவமென்னும்) வில்லினின்று அம்புகளைத்
தொடுத்து, கூவி-(அவ்வரசர்களைப் போருக்கு) அழைத்துக் கொண்டு, இரதத்தின்
மிசை - தேரின்மீது,அவரை குறுகினான் - அந்த அண்ணனையும் புதல்வனையும்
சமீபித்தான்;  (எ -று.)