அருச்சுனன் கைலாசத்துச் சென்று தவமியற்றிப் பரமசிவனிடத்துப் பாசுபதம்முதலியனபெற்ற பின்பு அங்குவந்து அழைத்துப்போன தந்தையாகிய இந்திரனுடனேதேவலோகஞ்சேர்ந்து, அங்குத் தேவர்களதுவேண்டுகோளின்படி அவர்கட்குப்பகைவராய்ப் பலநாளாகப் பெருந்துன்ப மியற்றிவந்த கடலிடையிலுள்ள தோயமாபுரவாசிகளான நிவாதகவசரென்னும் அசுரர் மூன்று கோடிபேரையும், அந்தரத்துள்ள இரணியபுரவாசிகளான காலகேய ரென்னும் அசுரர் அறுபதினாயிரவரையும் ஆங்காங்குச் சென்று போர்செய்து அழித்தொழித்தனன் என்பது கீழ் ஆரணியபருவத்து வரலாறு. சமத்து - ஸமர்த்தசப்தபவம். பி-ம்:-1 சமத்து மிகு.' (105) 29.-அருச்சுனன் பகழிதூவிச் செல்லும்போது அரசர் கெட்டுச்சிதற வீடுமன் திகைக்க, படைஞர் தம்படைவீடுபுகுதல். வீசுபகழித்துளியின்மேகமெனவிற்கொடிவன்மேலுறநடக்குமளவிற் றேசுபடையருக்கனெதிர்மூடுபனியொத்தரசர்தேரணிகெடச்சிதறினார் மாசுணமணிக்கொடிமகீபதிபடைத்தலைவன்வார்சிலைவளைத்திலனெடும் பாசறைபுகக்கடவினார்கடகளிற்றினணிபாய்பரியணிப்படைஞரே. |
(இ-ள்.) (இவ்வாறு), வீசு பகழி துளியின் மேகம் என - நெடுந்தூரம் விரைந்தெறிகிறஅம்புகளாகிய மழைநீர்த்துளிகளையுடையதொரு மேகம் போல, வில் கொடு -காண்டீவவில்லை(க் கையில்) ஏந்திக்கொண்டு, இவன் - இவ்வருச்சுனன், மேல் உற-(பகைவர்) மேலே பொருந்த, நடக்கும் அளவில் - (போருக்குச்) செல்லுமளவில்,-தேசு உடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து - ஒளியையுடைய சூரியனுக்குஎதிரிலே மூடுபனிபோன்று, அரசர் - பகையரசர்கள், தேர் அணி கெட -தேர்வரிசைகள் அழியும்படி, சிதறினார் - (முன்நிற்கமாட்டாமற்) சிதறுண்டுபோனார்கள்; (அப்பொழுது), மாசுணம் மணி கொடி மகீபதி படை தலைவன் - பாம்பையெழுதிய அழகியதுவசத்தையுடைய துரியோதனராசனது சேனாதிபதியான வீடுமனும், வார்சிலை வளைத்திலன் - (தனது) நீண்ட வில்லை வளைக்கவும்மாட்டிற்றிலன்; (அங்ஙனந்திகைத்துநின்றிடவே), கடம் களிற்றின் அணி - மதயானை வரிசையிலும், பாய் பரி அணி - தாவிச்செல்லுந்தன்மையனவான குதிரைகளின்வரிசையிலும் (இருந்த), படைஞர் - சேனாவீரர்கள், நெடு பாசறை புக- பெரிய (தமது) பாடிவீட்டிற் செல்ல, கடவினார் - (தம்தம்வாகனங்களை ஏவிச்) செலுத்தினார்கள்; (எ - று.) தோணிகெட்டதனால், பின்பு மற்றையிரண்டணியே கூறினார். சிறந்த ஆயிரங்கிரண முடைமையால், 'தேசுடையருக்கன்' எனப்பட்டான். மூடுபனி - சூரியனெதிர்ப்படுதற்குமுன் உலகை மூடியிருந்த பனி யென இறந்தகாலவினைத்தொகை; இருந்தவிடந் தெரியாமல் எளிதில் அழிதற்கு உவமை. மணிக்கொடி - இரத்தினங்களைப் பதித்த காம்பையுடைய கொடியுமாம். மேகத்துக்கும் இந்திரவில் உள தாதலால், 'மேகமென விற்கொடு' என்றார். தேசு=தேஜஸ்: படைஞர் - அதுவீரருமாம். (106) |