பக்கம் எண் :

மூன்றாம் போர்ச்சருக்கம்85

வரூதினி - நமதுசேனை, புறக்கு இடுவதுஏ - பின்னிடுவதா? நாளை
முதுகிட்டவரை- நாளைக்கு யாவராயினும் புறங்கொடுப்பராயின் அவரை, நான்-,
ஆர் உயிர்செகுத்திடுவன் - கொல்வேன்.' என-என்று, இரா- அவ்விராத்திரியில்,
உரைத்தனன் -கூறினான்; (பின்பு), விரோசனன் - சூரியன், முதல் பகலில் வீரர்
விறலைகருதி-முந்தினநாளில் (காட்டிய) அபிமன்யு அருச்சுனன் என்ற இவ்வீரரின்
போர்த்திறத்தை(ப்பார்க்க) எண்ணி, மீளஉம் உதித்தனன் - மீண்டும்
தோன்றினான்;(எ-று.)

     நான்காமடி-ஏதுத்தற்குறிப்பேற்றம். புறங்கொடுத்தலில் சேனை வீரர்க்கு
அச்சமுண்டாக்குதற்பொருட்டு, துரியோதனன், இங்ஙனம் கூறினான்; அவர்கள்
புறங்கொடுப்பது உயிராசைபற்றியே யாதலால், அதுஒழியுமாறு கூறியது. இதற்கு -
வெவ்வேறுவகையாகப் பொருளுரைப்ப தெல்லாம் சுற்றுவழியாதலின், பொருந்தா
தென விடுக்க. முதற்பகலில் வீரன்விறலைக் கருதி யென்றபாடத்திற்கு, வீரன் -
அருச்சுனனென்க:  இனி, முன்நாளில் துரியோதனன் சொன்ன பௌருஷத்தை
(மறுநாள்பார்க்க) எண்ணி யென்றும் உரைக்கலாம். புறக்கிடுவதே என்ற ஏகாரம்-
வினாவகையாற் சிறிதுந் தகுதியன் றென இழிவை விளக்கும். நாளைமுதுகிட்டவர்-
இயல்பு பற்றி, எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி.
விரோசநன்-வடசொல்; விசேஷமாக விளங்குபவ னென்றுபொருள். பி-ம்:-
உரைத்தனனரோ.                                             (109)

இரண்டாம் போர்ச்சருக்கம் முற்றிற்று.
-----

மூன்றாம் போர்ச்சருக்கம்.

1.-கடவுள் வாழ்த்து.

தந்த முறியி லவர்வைத்த தயிர்பால் வெண்ணெ யெட்டாமற்
குந்தி யுரலின் மிசையேறி யிளங்கோ வியர்முன் கூத்தாடி
நந்தன் மனையி லசோதையிரு நயனங் களிக்க விளையாடு
மைந்த னிருதா ளொருநாளு மறவா தாரே பிறவாதார்.

     (இ - ள்.) தம் தம் உறியில்-தங்கள் தங்கள் உறிகளின்மேல், அவர் வைத்த-
அந்தந்த ஆயர்மகளிர் வைத்திட்ட, தயிர் பால் வெண்ணெய்-தயிரும் பாலும்
வெண்ணெயும், எட்டாமல் - (குழந்தைப்பருவமுள்ள தனக்கு) எட்டாமையால்,
உரலின்மிசை குந்தி ஏறி-உரலின்மேலிருந்து ஏறி, இள கோவியர் முன் கூத்து
ஆடி-இளமைப்பருவமுடைய கோப ஸ்திரீகளின் எதிரில் (பலவகை) நடனஞ்செய்து,
நந்தன்மனையில்-நந்தகோபரதுவீட்டிலே, அசோதை இரு நயனம் களிக்க -
யசோதைப்பிராட்டியின் இரண்டு கண்களும் (கண்டு) களிக்கும்படி, விளையாடும்-
விளையாடின, மைந்தன்- இளம்பிராய முடையனான கண்ணனது, இரு தாள்-
உபயதிரு