வீமனது எளிதில் வெல்லு மாற்றலுக்கும், அவன்முன் பகைவரது வீரமின்மைக்கும் ஏற்ற உவமை கூறினார். சூரர்க்கெல்லாம் முதலெண்ணும்- சூரர்களெல்லாருள்ளுஞ்சிறந்த வென்றபடி. தம்பியர் - துச்சாதனன் முதலியோர். ஆரம் - ஹாரம்: பி-ம்:-காந்தாரர். (114) 6.-இருதிறத்துப்பெருவீரருஞ் செய்த கடும்போர் வருணனை. வரத்தான்மறையாற்றாம்பெற்ற வரிசாபங்கள்பிடித்ததனிக் கரத்தான்மறைந்தவரவர்தங் கடைக்கண்படைக்கண்விரைந்துவிடுஞ் சரத்தான்மறைந்ததகல்வானந் தரணிதலமச்சரந்துணித்த சிரத்தான்மறைந்ததுகுகுருதிச் சேற்றான்மறைந்ததிசைநான்கும். |
(இ - ள்.) வரத்தால் - (தேவர்கள் முதலியோர் தந்தருளிய) வரத்தினாலும், மறையால் - மந்திரத்தாலும், தாம் பெற்ற - தாங்கள் பெற்றுக்கொண்டுள்ள, வரி சாபங்கள் - கட்டமைந்த விற்களை, பிடித்த - உறுதியாக ஏந்தியுள்ள, தனி கரத்தால்- ஒப்பற்ற கையினால், அவர் அவர்தம் கடைக்கண் - அந்தந்தப் போர்வீரரதுகண்ணின்கடை, மறைந்தது-; படைக்கண் - (வில்லாகிய அந்த) ஆயுதத்தில்,விரைந்துவிடும் - துரிதமாகப் பிரயோகிக்கிற, சரத்தால் - அம்புகளினால், அகல்வானம் - பரந்த ஆகாயம், மறைந்தது-;அ சரம் - அந்த அம்புகள், துணித்த -அறுத்துத்தள்ளிய, சிரத்தால் - (பகைவர்கள்) தலைகளால், தரணி தலம் -பூமியினிடம், மறைந்தது-; உகு - (அத்தலைகளினின்று) பெருகிய, குருதி சேற்றால் -இரத்தக்குழம்பினால், திசை நான்கு உம் - நாற்றிசைகளும், மறைந்த - மறைந்தன;(எ - று.) அப்பொழுது போரில் வீரர்பலர் தாம் வரமாக அஸ்திரப்பிரயோகத்துக்கு உரியமந்திரத்தோடு பெற்றுள்ள விற்களைத் தந்தங்கையில் ஏந்தித்தம்தம் கண்ணுக்குநேராகமுன்னேபிடித்து அவற்றில் அளவிறந்த அம்புகளைத்தொடுத்து அவற்றால் எதிரிகள்தலைகளைவீழ்த்தி எங்கும் இரத்தமயமாக்கின ரென்பதாம். மறையால் என்பதற்கு -தக்கமந்திரத்தை ஜபித்த பலத்தால் என்றும், மந்திரோபதேசத்தோடு என்றுங் கருத்துக்கொள்ளலாம். ஒவ்வொருவர்க்கும் அநேகஞ் சிறந்த விற்கள் உண்மை தோன்ற,'சாபங்கள்' எனப் பன்மையாற் கூறினார். கடைக்கண் - கண்கடை:முன்பின்னாகத்தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை: இலக்கணப்போலி.படையென்னும்பொதுப் பெயர் - இங்கே சிறப்பாய் வில்லையுணர்த்தி, சுட்டுப்பெயர்மாத்திரமாய் நின்றது. மறைந்த-முற்று. பி-ம்:- திரைநான்கும். (115) 7.-கடோற்கசனம்புகளால் துரியோதனன் பிரஜ்ஞையற்று விழுதல். துவசம்பிளந்துதேரூருந் துரகம்பிளந்துசுடர்மணிப்பொற் கவசம்பிளந்துமார்பகமும் பிளந்தூடுருவக்கடோற்கசன்றான் நவசந்திரமாமுனைவாளி தொடுத்தான்றொடுத்தநாழிகையின் அவசம்பிறந்துதம்பியர்முன் விழுந்தானொருவர்க்கழியாதோன். |
|