(இ - ள்.) (வந்த வீடுமன்)-, வண்டு ஆர் அலங்கல் வலம்புரியோன் மார்பம் துளைத்த வாளி வழி கண்டான் - வண்டுகள் ஒலிக்கப்பெற்ற நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனனது மார்பை ஊடுருவின அம்புசென்ற வழியைப் பார்த்தான்; தாழ்ந்த திரு கையால் எடுத்து அணைத்து - நீண்டுதொங்குகிற அழகிய (தன்)கைகளால் (அத்துரியோதனனை) எடுத்துத் தழுவி, கால் தேரில்கொண்டான்-சக்கரவலிமையையுடைய (தனது) தேரின்மீது வைத்துக்கொண்டு, ஆவி தரும் மருந்து கொடுத்தான்-உயிரைத் தரவல்ல திவ்விய ஒளடதத்தை (அவனுக்குக்) கொடுத்தான்; உலகு ஏழ் உடையான் அவன்உம் - ஏழு தீவுகளாகிய பூமிமுழுவதையும் (தனதாக) வுடையனான அத்துரியோதனனும், கொடுத்த மருந்து உண்டான்-(வீடுமன்) தந்த மருந்தையுட்கொண்டான்; உண்ட கணத்தினில்-உட்கொண்ட அந்த க்ஷணத்தில் தானே, மீண்டு உணர்ந்தான்- மறுபடிஉணர்ச்சிபெற்றான்; (எ - று.)- மூர்ச்சை தெளிந்து முன்போலாயின னென்றபடி. (119) 11.-வீடுமன் துரியோதனனை அணியில்நிறுவியபின் வீமன் முதலியோர் பின்னிடக் கடும்போர்புரிதல். மன்னன்றனையச்சந்தனுவின் மைந்தன்பெரும்பேரணிநிறுவிப் பொன்னங்குன்றேயிவன்சிலையு மிவனேகாணு புராரியென மின்னுங்கழற்கால்வீமனுடன்வெம் போர்விளைத்துவிடலைபராய் முன்னின்றவரும்பின்னிடத்தன் முனைவாளியினால்வினைசெய்தான். |
(இ - ள்.) (இவ்வாறு தேற்றி), மன்னன்தனை - துரியோதனராசனை, அ சந்தனுவின் மைந்தன் - சந்தனுகுமாரனான அவ்வீடுமன, பெரு பேர் அணி நிறுவி-மிகப்பெரிய படைவகுப்பிலே நிறுத்தி, (பின்பு), 'இவன் சிலைஉம் பொன் அம்குன்றுஏ இவன் புர அரிஏ காணும்' என-'இவனது வில்லும் பொன்மயமான அழகியமகாமேருமலையே: இவனும் திரிபுரத்தையழித்திட்ட பரமசிவனே: பாருங்கள்' என்று(தன்வில்லையுந் தன்னையும்பற்றி அனைவருங்) கூறும்படி, மின்னும் கழல் கால்வீமனுடன் - விளங்குகின்ற வீரக்கழலையணிந்த பாதத்தையுடைய வீமசேனனும்,வெம் போர் விளைத்து விடலையர் ஆய் முன்நின்றவர்உம் - (துரியோதனனோடு)கொடியபோரைச் செய்து இளவீரர்களாய் முன்னேநின்ற கடோற்கசனும்அபிமந்யுவம், பின் இட - புறங்கொடுக்கும்படி, தன் முனைவாளியினால் வினைசெய்தான்-தனது கூரிய அம்புகளால் போர்த் தொழிலைப் புரிந்தான்; (எ - று.) நிறுவி, நிறுவு-பகுதி. பெரும்பேர்-சிறப்புணர்த்தும் அடுக்கு; இனி, மிக்க புகழையுடைய வென்றும் உரைக்கலாம். காணும் என்பதை முன்னிலையசையென்றும், தேற்றமென்றும் கொள்ளினுமாம். 12.-வீடுமன் தருமன்சேனையிற் பலரையும் கொன்றுகொண்டு திரிதல். மருமங்களினும்புயங்களினும் வதனங்களினுங்கண்களினுஞ் செருமும்படிவெங்கணைமாரி சிந்திச்சிந்திச்சிரந்துணித்துத் தருமன்சேனைப்பரவையெலாந் தானேயாகித்தலைநாளிற் பொருமந்தரமால்வரைபோலத் திரிந்தான் வெம்போர்புரிந்தானே. |
|