பக்கம் எண் :

மூன்றாம் போர்ச்சருக்கம்95

யேனிது னக்கென மாயனு ரைத்தவ னேறிர தத்திழியா
வானதெ னக்கினி யாகவெ னத்தினி யாழியெ டுத்தனனே.

     (இ - ள்.) (அப்பொழுது), 'கான் எரி துற்று என - காட்டில் தீப்பற்றி
யெரித்தாற்போல, வீடுமன் இ படி காதிமலைத்திடஉம்-பீஷ்மன் இவ்வாறு
தாக்கிப்போர் செய்யவும், நீ-, மானம் நினைத்திலை-மானத்தை(ப் பாதுகாக்க)
எண்ணினாயில்லை; சாபம் எடுத்திலை - வில்லை(க்கையில்) ஏந்தினாயில்லை;
வாளிதொடுத்திலை - அம்பை யெய்தாயுமில்லை; உனக்கு ஏன் இது - உனக்கு
ஏன்இந்தக்குணம்?' என - என்று, மாயன் - கண்ணபிரான், உரைத்து -
(அருச்சுனனைநோக்கிச்) சொல்லி, அவன் ஏறு இரதத்து இழியா- அவ்வருச்சுனன்
ஏறியுள்ள தேரினின்று (தான்) இறங்கி, இனி எனக்கு ஆனது ஆக என-
'இப்பொழுது எனக்கு ஆனது ஆகட்டும்' என்று கூறி, தனி ஆழி எடுத்தனன் -
ஒப்பற்ற (தனக்குரிய சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதத்தை ஏந்தியருளினான்.

     இங்ஙனம் செய்தது, எதிர்ப்பவர் இல்லாமல் வீடுமன் மிகுதியாகப் பொருத
போரை நோக்கி வரம்புகடந்தெழுந்த ஆவேசத்தாலென்க. 'போரிற்படையெடேன்'
என்று முன் துரியோதனனுக்குக் கூறியிருந்த சபதம் தவறுதலால், கண்ணன் 'தனக்கு
எந்தப்பழி வந்தாலும் வருக' என்று 'ஆன தெனக்கினியாக' என்றான். கீழ்
வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கத்தில் "போரிற்படையெடா தொழிமின்"
என்று வேண்டிய துரியோதனனுக்கு ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி "நடையுடைப் புரவித்
திண்டேர் நானிவற் கூர்வ தன்றி, மிடைபடையேவிநும்மோ டமர்செயேன்வேந்த"
என்று வாக்குத்தத்தஞ்செய்ததை இங்ஙனந்தவறலாமோ வெனின்;- போரில்
ஆயுதமெடுப்பதில்லையென்று கண்ணன் கூறியதைக் கேள்விப்பட்டு வீடுமன்
கண்ணனைத் தான் போரில் ஆயுதமெடுப்பிப்பதாகத் துரியோதனனுக்குமுன்
பிரதிஜ்ஞைசெய்திருந்தனனாதலால், எம்பெருமான் 'தனதுசபதந் தவறினும் தவறுக;
தனது அன்பனாகிய வீடுமனது சபதம் பொய்க்கலாகாது' என்று தன் திருவுள்ளத்தி
லெழுந்த திருவருளால் இப்படிச்செய்தான். பரமாத்மாவாகிய கண்ணன்
விரதந்தவறினால் அகர்மவசியனும் நிரங்குசஸ்வதந்திரனுமான அவனுக்கு
வருவதொருகுற்றமில்லை; ஆத்மகோடிகளில் ஒருவனான வீடுமன்
விரதந்தவறினாலோ அத்தீவினையால் மறுமையில் தண்டனைக்கு உள்ளாவன்:
ஆதலால், தனது சிறந்தபக்தலும் பரமபாகவதர்களில் ஒருவனாக எண்ணப்
படுபவனும்ஆகிய வீடுமனை ஊழ்வினையொழித்துப் பரமபதத்துச் சேர்ப்பிக்க
வேண்டு மென்றபெருங்கருணையே இங்ஙனம் வரம்புகடந்ததற்கு ஏற்ற
காரணமாம். இதனால், தனதுவாய்மையைத் தவறியாயினும், அடியார்களுக்கு
வருகிற ஆபத்தைப் போக்கித்காத்தருளுகிற பகவானது பேரருளுடைமை
விளங்குகின்றது. பி-ம்:- மலைத்திடவே.

     இதுமுதற் பத்துக்கவிகள் - ஈற்றுச்சீரொன்று கூவிளங் காய்ச்சீரும்,
மற்றையைந்துங் கூவிளச்சீர்களுமாகிய அறுசீராசிரியச் சந்தவிருத்தங்கள். (123)