பூப்பறித்தற்குப் போயிறங்கினபொழுது, அங்கே (முன்நீர்நிலையில் நின்று தவஞ்செய்துகொண்டிருந்த தேவலரென்னும் முனிவரது காலைப் பற்றியிழுத்து அதனாற் கோபங்கொண்ட அவரது சாபத்தால்) பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூவென்னுங்கந்தருவன் அவ்யானையின்காலைக் கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக் கொள்ளமுடியாமல் கஜேந்திரன் 'ஆதிமுலமே!' என்று கூவியழைக்க, உடனே திருமால் ஸ்ரீகருடவாகனாரூடராய் அங்கு எழுந்தருளித் தமது சக்கரத்தைப் பிரயோகித்து முதலையைத் துணித்து யானையை அதன்வாயினின்றும் விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருள்செய்தனரென்பது. (126) 18. | ஆவியழித்தனை தூணிலுதித்தட லாடகனைத்தலைநாண் மாவலியைச்சிறு மாணுருவத்துடன்வார்சிறைவைத்தனையால் ஏவிலரக்கனை வீழவடர்த்தனை யானொரிலக்கெனவோ நீவலியிற்சின மூளுமனத்தொடு நேமியெடுத்ததுவே. |
(இ - ள்.) தலை நாள் - முன்னொருகாலத்தில், தூணில் உதித்து - ஒரு கம்பத்திலே தோன்றி, அடல் ஆடகனை-வலிமையையுடைய இரணியனை, ஆவி அழித்தனை - உயிர்நீக்கினாய்; சிறு மாண் உருவத்துடன் - சிறிய பிராமசாரி ரூபத்தோடு (சென்று), மாவலியை - மகாபலிசக்கரவர்த்தியை, வார்சிறை வைத்தனை -நீண்டசிறையிலே வைத்திட்டாய்; அரக்கனை - இராக்கதராசனான இராவணனை,வீழ-இறந்துவிழும்படி, ஏவில்-அம்பினால், அடர்த்தனை-அழித்தாய்; நீ -(இப்படிப்பட்ட பேராற்றலையுடைய) நீ, வலியின்-வலிமையொடும், சினம் மூளும் மனத்தொடு - கோபம் பற்றின மனத்துடனும், நேமி எடுத்தது - (போர்செய்தற்குச்) சக்கராயுதத்தைக் கையில் ஏந்தினது, யான் ஓர் இலக்கு எனஓ - நான் (உனக்கு ஏற்ற) ஒரு லக்ஷ்யமென்று கருதியோ? (எ - று.)- ஆல், ஏ - ஈற்றசைகள். இந்திரன்முதலிய தேவர்களுட்பட மூவுலகத்தாரையும் வென்று அடக்கியாண்ட இரணியன் மகாபலி இராவணன் என்னும் இவரை முன்பு ஒவ்வொரு அவதாரத்தில் தந்திரமாக எளிதில் வென்றுஒழித்த உனது திவ்விய சக்திக்குச் சாதாரண மனிதரில் ஒருவனான யான் சிறிதும் எதிர்த்துப் பொருதற்குஏற்ற இலக்கல்ல னென எம்பெருமானது பெருமையும் தனதுசிறுமையுந் தோன்ற இங்ஙனங்கூறித் துதித்தான் வீடுமனென்க. ஆடகன் - ஹாடகனென்னும் வடமொழித் திரிபு; பொன்னிறமானவனென்று இதற்குப் பொருள்: ஹாடகம் - நால்வகைப் பொன்களுள் ஒன்று; (மற்றவை - கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் எனப்படும்.) இரணியன் இரணியகசிபு என்ற பெயர்களுக்கும் பொருள் இதுவேயாதலால், இரணியனை 'ஆடகன்' என்றார்; இரணியம் - பொன். தலைநாள் என்பதை மற்றையவற்றிற்குங் கூட்டுக. மாவலி, உரு, இலக்கு - வடசொற்சிதைவுகள். மாணியென்பது இங்கு விகாரப் பட்டு 'மாண்' என நின்றது. இனி, மாணுருவம் என்பதற்கு - |