'முனியாதி வதிட்டன்' என்றும், விசுவாமித்திரன் க்ஷத்திரியசாதியில் காதியென்னும் ராசருஷிக்குக் குமாரனாய்த் தோன்றினவனாயினும் தனதுஉத்பத்திக்குக் காரணமான சருவின் [சரு - ஒருவகைச் சோறு] பேதத்தால் பிராமணத்தன்மையைப் பெற்றுப் பின்பு பலகாலம் பெருந்தவம் புரிந்து பிரமவிருடியானதனால் அவனையும் முனிவர்களுட் சேர்த்துங் கூறினார். குசனென்னுஞ் சந்திரகுலத்து அரசனது குமாரனான காதியின் புத்திரியும் கௌசிகியென்னும் மறுபெயருடையவளுமாகிய சத்தியவதியை மணஞ்செய்து கொண்ட ருசீகனென்னும்முனிவன், அந்தத் தன் மனைவிக்கும் அவள் தாய்க்கும் அவரவர் சாதிக்கு ஏற்ற சிறந்த புத்திரசந்தாந முண்டாம்படி பிரமமந்திரத்தாலும் அரசமந்திரத்தாலும் இரண்டுசருக்களை யமைத்துக் கொடுத்தான்: அவற்றில், பிரமசருவைத் தாயும், அரசர்சருவை மகளுமாக அவர்கள் மாற்றி யுண்டு, அதற்கேற்றபடி கருக்கொண்டனர்; அதனை அப்பொழுது அவரவருடம்பினொளியால் அறிந்த ருசீகன், தன் மனைவியைநோக்கி 'சருவை மாற்றி யுண்டகாரணத்தால், நீ கோபகுணமுள்ள பராக்கிரமசாலியான புத்திரனைப் பெற, உன் தாய் சாந்தகுணமடையும் புதல்வனைப் பெறுவள்' என்று கூற, அது கேட்டு வருந்திய சத்தியவதி கணவனைமிகப்பிரார்த்தித்து 'என் மகன் அங்ஙனமாகாதபடி அருள் செய்யவேண்டும்' என்று வேண்ட, முனிவன், அத்தன்மை புத்திரனுக்கு இலதாகவும் பௌத்திரனுக்கு உளதாகவும் அருள் செய்தனன்: ஆதலால் காதிமைந்தனான விசுவாமித்திரன் தவஞ் செய்தலாகிய அந்தணவொழுக்கத்தையும், ருசீகனதுமகனான ஜம்தக்நியின் குமாரனாகிய பரசுராமன் சினந்து போர்செய்யும் அரசவொழுக்கத்தையும் பூண்டன ரென வரலாறுகாண்க. இத்தன்மைகள், 'மனகுலவாதியும் அந்தணனாம் பெருமுனிதானும்' என்றவற்றாற் குறிப்பிக்கப் பட்டன. விசுவாமித்திரன்: பலவரசர்களைப் போரில் வென்றதன்றி, வேட்டைக்குச் சென்றபொழுது தனக்கும் தனதுசேனைக்கும் காமதேனுவைக் கொண்டு விசேஷமாக விருந்திட்டு உபசரித்த வசிட்டனுடன் அத்தெய்வப்பசுவைப் கவர்ந்துபோதற் பொருட்டாகப் பெரும்போர் செய்தவாறும். அப்போரில் வசிஷ்டன் தன்கைப்பிரமதண்டத்தை 'நீ எதிர்ப்பாய்' என்ற ஏவி விசுவாமித்திரன் விட்ட ஆயுதங்களை யெல்லாம் விழுங்குவித்து மற்றும் அவன் பிரயோகித்த பாசுபதாஸ் திரத்தைத் தான் விழுங்கி அவனைப் பங்கப்படுத்தினவாறும், உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றி வந்த க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றைப் பற்றறநாசஞ் செய்யும் பொருட்டு நாராயணாமிசமாய் அவதரித்த பரசுராமன், தனது தந்தையின் ஓமதேனுவைக்கவர்ந்து அவனைக்கொன்றிட்டதுகாரணமாக, (திக்குவிசயஞ்செய்த இராவணனைச் சிறையிலிட்ட) கார்த்த வீரியார்ச்சுனனையும் அவனது குமாரர்களையுங் கொன்று அழித்து, அக்காரணத்தாலேயே க்ஷத்திரியவம்சம் முழுவதன் மேலுங் கோபா வேசங்கொண்டு உலகத்திலுள்ள அரசர் பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டவாறும், பிரசித்தம். |