பக்கம் எண் :

134பாரதம்துரோண பருவம்

82.- இரண்டுகவிகள் - வந்துபொருத யாவரும் முதுகிட்டமை கூறும்.

மேல்வந்தவேந்தன்மகனும்பலவேந்துமூழிக்
கால்வந்துவேலைக்கடறன்னைக்கலக்குமாபோல்
நூல்வந்தகொற்றச்சிலையாசுகநொய்தினேவி
மால்வந்தகைக்குன்றனையானைமுன்வந்துசூழ்ந்தார்.

     (இ-ள்.) ஊழி கால் - பிரளயகாலத்துப் பெருங்காற்று, வந்து-, வேலை
கடல்தன்னை - கரையையுடைய கடலை, கலக்கும் ஆ போல் - கலங்கச்செய்யும்
விதம்போல, (சேனாசமூகத்தைக் கலங்குவிக்கும்படி), நூல் வந்த -
தநுர்வேதமுறைப்படி பொருந்தின கொற்றம் சிலை - வெற்றியையுடைய
வில்லினாலெய்யப்படுகிற, ஆசுகம் - அம்பை, நொய்தின் ஏவி - (எதிரிகள்மேல்)
விரைவாகச் செலுத்தி, மால் கைவந்த குன்று அனையானை-திருமாலாகிய
கண்ணனது கையிற் (குடையாகப்) பொருந்திய கோவர்த்தனமலையை
யொத்தவனானஅபிமனை, மேல் வந்த வேந்தன் மகன்உம்-எதிர்த்து வந்த
துரியோதனகுமாரனானஇலக்கணனும், பல வேந்துஉம்-(மற்றும்) பல அரசர்களும்,
முன்வந்து சூழ்ந்தார்-எதிரில்வந்து வளைந்து கொண்டார்கள்; (எ - று.)

     ஊழிக்கால்-அபிமனுக்கும், வேலைக்கடல்-பகைவர்சேனைக்கும் உவமை.
கலக்குமாபோல் ஏவிஎன்க. இந்திரனேவலால் எல்லா மேகங்களுஞ் சூழ்ந்தும்
கண்ணனெடுத்த கோவர்த்தனகிரியை யாதொன்றும் ஊறுசெய்ய மாட்டாமைபோல,
துரியோதனனேவலால் மிகப்பல அரசர் சூழ்ந்தும் அபிமனை யாதொன்றுஞ்
செய்யமாட்டாமையின். இவ்வுவமை கூறினார்.                      (220)

83.முன்முன் புழுந்திப் பலரேவிய மூரிவாளி
தன்முன் புதூவு மலர்போலிரு தாளில் வீழ
வின்முன் புடையோ னொருவில்லின்வி சித்த வம்பாற்
பின்முன் புபட்ட பலகோடிபி றங்கு சேனை.

     (இ-ள்.) பலர் - அநேகவீரர்கள், முன் முன்பு முந்தி - (ஒருவரினும் ஒருவர்)
முன்பாக விரைந்துமுற்பட்டு, ஏவிய-பிரயோகித்த, மூரி வாளி-வலிமையையுடைய
அம்புகள், தன் முன்பு-அவ்வபிமனதுஎதிரில், தூவும் மலர்போல்-தூவிய
பூக்கள்போல, இரு தாளில் வீழ-இரண்டு பாதங்களிலும் வந்துவிழுந்திட,-
(அப்பொழுது), வில் முன்பு உடையோன் வில்லின்வலிமையையுடைய அபிமன்-ஒரு
வில்லின்-(தனது) வில் ஒன்றைக்கொண்டு, விசித்த-இழுத்துவிட்ட, அம்பால்-
அம்புகளால், பலகோடி பிறங்கு சேனை-அநேக கோடிக்கணக்காண விளங்குகிற
பகைவர்சேனைகள், பின் முன்பு பட்ட-பின்முன்னாகப் புறங்கொடுத்தழிந்தன;
(எ-று.)

     கீழ் அபிமனுக்குச் சிவபிரானை உவமை கூறிப்போந்தனராதலால், இங்கு,
அவன்மேலெய்யப்பட்ட அம்புகளுக்கு மலர்களை உவமை கூறினார். இருதாளில்
தூவுமலர்போல் என மொழிமாற்றினுமாம். பின்முன்புபடுதல்-மார்பு பின்பும் முதுகு
முன்னுமாக மீளுதல்.                                             (221)