அதிசயித்து, உருகி-மனமுருகி, புந்தியினால் - நல்லறிவோடு, மலர் பொழிந்தார்- (இவன்மேல்) பூமாரிபொழிந்தார்கள்! அந்தோ அந்தோ-!! அன்னம் நெடு துவசன் - அன்னப்பறவையின் வடிவத்தையெழுதிய பெரிய கொடியையுடைய பிரமன், இவற்கு- இந்த அபிமனுக்கு, ஆயு மிக கொடுத்திலன்ஏ-ஆயுளை மிகுதியாகக் கொடுத்தானில்லையே! அந்தோ அந்தோ-!! (எ - .று) கந்தன் - ஸ்கந்தன் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு- (சத்துருக்களை) வற்றச்செய்பவனென்பது அவயவப்பொருள்; 'சேயவன்வடிவமாறுந் திரட்டிநீ யொன்றாய்ச் செய்தாய், ஆயதனாலே கந்தனாமெனுநாமம் பெற்றான்" எனக் கந்தபுராணத்திற் கூறியபடி, (சக்திசொரூபமான உமாதேவியினால்) சேர்க்கப்பட்டவ னென்றும் பொருள்கொள்ளலாம். இவன், தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிய பரமசிவனது திருவருளால் அப்பிரானதுகுமாரனாகத் தோன்றித் தேவசேனாபதியாகிச் சூரபதுமன் முதலிய அசுரர்களை அழித்தது, பிரசித்தம். மேன்மையுடையாரது இயல்பை யுணர்ந்து அழுக்காறும் உபேட்சையுமில்லாமல் அப்பொழுதப்பொழுது கொண்டாடுதல் அறிவின்பயனாதலால். 'புந்தியினால் மலர்பொழிந்தார்' என்றார். 134. | சரமறுத்தான்வில்லறுத்தான்றேரறுத்தான்கொடியறுத் தான்சமரபூமி, யுரமறுத்தான்முதற்பொருதவுதயதினகரன்மைந்தனு டன்றுசீறிக், கரமறுத்தானடுப்பொருதகார்முகத்தின்குருவிசயன் காளைதன்னைச், சிரமறுத்தான்பின்பொருதசயத்திரதனிவன்வீரஞ் செப்பலாமோ. |
(இ-ள்.) சமர பூமி-யுத்தகளத்தில், முதல் பொருத-முதலில் எதிர்த்துப் போர் செய்த,உதய தினகரன் மைந்தன் - உதித்தலையுடைய சூரியனுக்குப் புத்திரனான கர்ணன்,உடன்று சீறி - பகைத்துக் கோபங்கொண்டு, (இவ்வபிமனது), சரம் - அம்பை,அறுத்தான்-துணித்தான்; வில் அறுத்தான்-; தேர் அறுத்தான்-; கொடி அறுத்தான்-;உரம் அறுத்தான்-வலிமையை அழித்தான்; (பின்பு), நடு பொருத - இடையிற்போர்செய்த, கார் முகத்திங் குரு - வில்லாசிரியனான துரோணன், கரம்அறுத்தான்-ஒருகையைத் துணித்தான்; பின் பொருத சயத்திரதன் - அதன்பின் இறுதியாகப் போர்செய்த சைந்தவன், விசயன் காளைதன்னை - அருச்சுனன் மகனான இவனை, சிரம் அறுத்தான் - தலை துணித்தான்; இவன் - (இங்ஙனம் ஒருவரால் எதிர்த்துப் பொருது கொல்ல முடியாமல் பலரால் ஒருங்குகூடிப் பொருதுஅழிக்கப்பட்ட) இவ்வபிமனது, வீரம் - பராக்கிரமம், செப்பல் ஆம்ஓ - சொல்லமுடியுமோ? (எ - று.)-எவராலும் முழுவதும் எடுத்துச்சொல்ல முடியாது என்பதாம். சமரபூமி, உடன்றுசீறி, விசயன்காளைதன்னை என்றவற்றை, மற்றைவாக்கியங்களிலும் எடுத்துக்கூட்டுக. உரம் என்பதற்கு - மார்பென்று பொருள் கூறுதல் பொருந்தாமையை. கீழ் 104 - ஆங் கவி நோக்கி யுணர்க. (272) |