பொர வல்லார்-(தம்வலிமையால்) அழிக்கவல்லவர், யார்-யாவர் (உளர்)? [எவருமில்லை யென்றபடி]; தன் ஆண்மை நிலை நிறுத்தி - தனதுபராக்கிரமத்தை நிலைநிற்கச்செய்து, சங்கம் முழக்கிய-(அதற்கு அறிகுறியாகத் தனது) வெற்றிச்சங்கத்தை ஊதி ஒலிசெய்த, வீரம் சிங்க சாபம் - வீரத்தன்மையையுடைய சிங்கக் குட்டிபோன்ற, என் ஆனை-எனது யானை போன்ற இளங்குமரன், இறந்து பட-அழிந்து ஒழிய இன்னம்உம்-அதன் பின்பும். நான்-, இ உயிர் கொண்டு இருக்கின்றேன்ஏ- (இறவாமல்) இவ்வுயிரை வைத்துக்கொண்டிருக்கிறேனே.! (எ-று.) இப்பாடலை நகுலன் புலம்பலாகவும், அடுத்த பாடலைச் சகதேவன் புலம்பலாகவும் கொள்ளினுமாம். மின்னல் காணப்படுதலும், இடி முழக்கங் கேட்கப்படுதலும் என்னும் இரண்டும் உண்மையில் ஒரு தொழிலின்பயனேயாயினும், மின்னற்காட்சி முன்னும் இடிக் கேள்வி பின்னுமாகி மின்னல் தோன்றுதல் இடிமுழக்கத்தை முன்னர்த்தெரிவிக்கிற அறிகுறியாகும் இயல்பைக் கருதுக. (281) 144. | எடுத்தபடையனைத்தினுக்குமெதிரில்லை யெனக்கலைக ளெல்லாமுன்னை, யடுத்ததுகண்டையாநின்னாருயிர்க்குக்கரைந்து கரைந்தையுற்றேன்யான், விடுத்தபெருந்திருத்தாதைவிழிகளிப்பப் பகைவென்றுமீளாதென்னைக், கெடுத்தனையேபிழைத்தனையென்றினியொருவர்வந்துரைக்கக் கேளேன்கொல்லோ. |
(இ-ள்.) எடுத்த-(கையில்) ஏந்திய, படை அனைத்தினுக்கு உம்- ஆயுதங்களெல்லாவற்றிலும், எதிர் இல்லை - (உனக்கு) ஓப்பு இல்லை, என - என்றுசொல்லும்படி, கலைகள் எல்லாம் - எல்லாக் கல்விகளும், உன்னை அடுத்தது-உன்னைச் சேர்ந்து அமைந்ததை, கண்டு-, ஐயா-! யான்-, நின் ஆர் உயிர்க்கு -உனது அருமையான உயிரின்பொருட்டு, கரைந்து கரைந்து ஐயுற்றேன்- மிகமனமுருகி (முன்னமே) சங்கித்திருந்தேன்; (அதற்கு ஏற்க), விடுத்த பெரு திரு தாதை-(பகைவெல்லுதற்கு உன்னை) அனுப்பின சிறந்த பெரிய தந்தையான தருமன், விழிகளிப்ப-கண்களாற் கண்டு களிக்கும்படி, பகை வென்று மீளாது - பகைவர்களைவென்று திரும்பாமல், (இறந்து), என்னை கெடுத்தனைஏ- என்னை அழித்துவிட்டாயே; இனி-, பிழைத்தனை என்று ஒருவர் வந்து உரைக்க, (நீ) பிழைத்தாயென்று ஒருத்தர் வந்து சொல்ல, கேளேன் கொல் ஓ-கேட்கமாட்டேனோ? (எ - று.) 'அதி ஸ்நேஹ: பாபஸங்கீ' என்றபடி ஒருவனுக்கு ஒருத்தனிடம் மிக்க அன்பு இருந்தால் அவனுக்கு என்ன தீங்குநேருமோ என்ற பயசங்கையே முன்னர்த் தோன்றுவது இயல்பாதலாலும், ஒப்புயர்வில்லாமல் மிக்க இளமையிலேயே கல்விமுற்றும் நிரம்பியவர் திருஷ்டிதோஷம் பட்டாற்போல அற்ப ஆயுளுடையராய் விரைவில் இறத்தல் உலக வியல்பாதலாலும், இவ்வாறு கூறினான்-கெடுத்தல் - துன்படையச்செய்தல். 'உன்னைக் கெடுத்தனையே' என்ற பாடமும் பொருந்தும்: அப்பொழுது, கெடுத்தல்- போக்கிக் கொள்ளுதல், பி-ம்: பெருந்தாதையிருவிழி. கேட்பேன் கொல்லோ, (282) |