அரங்களை யுடைய தென்பது தோன்ற 'அயிலாழி' என்றும், 'பகவானுக்குச் சக்கரம் முதலியன பகைவர்பார்வைக்கு அச்சஞ்செய்து ஆயுதகோடியிலும், அன்பர்கண்ணுக்கு அழகியனவாய்த் தோன்றி ஆபரணகோடியிலும், அமையும்' என்ற சாஸ்திரார்த்தம் விளங்க, ' அணியாழி' என்றும் கூறப்பட்டது. (328) 191.-வழியிடையில் அருச்சுனனுக்குநேர்ந்த அயர்ச்சியை ஸ்ரீக்ருஷ்ணன் ஆற்றுதல். ஏகியநெறியிடையிளைத்துவாசவற் காசியகுமரன்மெய்யயர்ந்துவீழ்தலும் போகியினறிதுயில்புரியுநான்மறை யோகியங்கையினணைத்துயக்கமாற்றியே. |
இதுமுதல் நான்குகவிகள் - குளகம். (இ-ள்.) ஏகிய நெறியிடை - (கிருஷ்ணஅருச்சுனர்) சென்ற வழி நடுவிலே, வாசவற்கு ஆகிய குமரன் - இந்திரனுக்குப் பிறந்த குமாரனான அருச்சுனன், இளைத்து - மெலிந்து மெய் அயர்ந்து- உடம்பு சோர்ந்து, வீழ்தலும்-(கீழே) விழுந்தவளவிலே, -போகியின் அறிதுயில் புரியும் நால்மறை யோகி - ஆதிசேஷனிடத்து யோகநித்திரைசெய்கிற நான்குவேதங்களாலும் புகழப்படுகிற யோகம்வல்ல கடவுளான கண்ணன், அம் கையின் அணைத்து - (தனது) அழகிய திருக்கைகளால் (அருச்சனனைத்) தழுவி, உயக்கம் ஆற்றி-(அவனது) தளர்ச்சியைத் தணியச்செய்து,- (எ-று.)-'ஆற்றி' என்பது, மேல் 194 ஆம் பாட்டிலுள்ள 'உரைத்தலும்' என்பதனோடு தொடரும். போகம் என்றால், பாம்பினுடல்; அதனையுடையது போகீ: இது -பாம்புக்கு வடமொழியிற் காரணப்பெயர். அறிதுயில்-எல்லாவற்றையும் அறியாநின்று செய்யுந் தூக்கம்; விழிதுயில், துயிலாத் துயில், பொய்த்துயில் எனவும் படும். யோகம்-இமயம் நியமம் முதலிய எட்டு அங்கங்களோடு செய்யும் ஒருவகைத்தவவொழுக்கம்: அதனையுடையவன், யோகீ: இது-திருமாலின் ஆயிரத்தொட்டுத் திரு நாமங்களுள் ஒன்றாம். கடவுள் சிலசமயங்களில் தான் யோகு செய்து நின்றதனாலும், பிறர்க்கு யோகநிலையை உபதேசித்திருத்தலாலும், முனிவர் முதலியோரது யோகத்துக்கு விஷய மாகுதலாலும், யோகி யென்று பெயர்: பகவத்கீதையில் "யத்ர யோககேச்வரக்ருஷ்ண," என்றவிடத்தில், கண்ணபிரானை யோகங்களுக்குத் தலைவ னென்றதுங் காண்க. கோயம் - லோகரக்ஷணசிந்தையுமாம். உயக்கம் - தொழிற்பெயர். மாற்றி என்றும் பதம் பிரிக்கலாம் (329) 192.- இதுவும், மேற்கவியும் - கண்ணன் அருச்சுனனைப் பசியும் விடாயும் நீங்க அருந்துமாறு கூறுதல். உண்டிலையடிசிலுமுண்ணுந்தீம்புனல் கொண்டிலைபசிக்கனல்கொளுந்திவீழ்ந்தனை மண்டிலைவேலினாய்மகவினன்பினாற் கண்டிலையுலகியல்காட்டக்காட்டவே. |
|