பக்கம் எண் :

210பாரதம்துரோண பருவம்

அம்பிகையினிடத்தும் உடைமையால், பித்தனெனப்பெயர்; தோலுடுத்தல்,
ஆடையின்றிநிற்றல், எலும்பணிதல், பெண்சுமத்தல், கூத்தாடுதல் முதலியவற்றால்
பித்தகுணமுள்ளவன்போலக் காணப்படுபவ னென்றுமாம்.

     (7) என்றுபற்பலவுரையெடுத்துக்கூறியே
        நின்றுளநெக்குநெக்குருகிநேயமோ
        டொன்றுகண்ணருவிகளுகுத்தனோக்கியே
        யன்றுமாபதியவர்க்கருள்செய்தானரோ

     (இ-ள்.) என்று இவ்விதமாகப் பல பல துதிமொழிகளை எடுத்துச்சொல்லி,
(கண்ணனும் அருச்சுனனும் அருகில்) நின்று கொண்டு, மனம் மிகநெகிழ்ந்து
கரைந்து, பக்தியுடனே பொருந்தின ஆனந்தக்கண்ணீர்ப் பெருக்குகளைச்
சொரிதலைப் பார்த்து, அப்பொழுது, பார்வதிகொழுநனான பரமசிவன்
அவர்களுக்குப்பிரசந்நனானான்;(எ-று.)- கட்புலனாகத் 
தரிசனந்தந்தருளினனென்பதாம்.

     * (8) கண்ணன்மேலணிமலரனைத்துங்காயெரி
          வண்ணன்மேற்காண்டலுமகிழ்ந்துமேதினி
          யுண்ணுமாதவன்சிவனுருவமென்றுணர்ந்
          தண்ணலுமுடல்புளகரும்பினானரோ.

     (இ-ள்.) (அங்ஙனம் பிரதியக்ஷமானபொழுது முன்பு தான்)
கிருஷ்ணன்மேற்சாத்தின மலர்களையெல்லாம் சொலிக்கிற அக்கினி போன்ற
செந்நிறமுடைய சிவபிரான்மேல் பார்த்தவளவிலே, சிறந்தவீரனான அருச்சுனனும்
மகிழ்ச்சிகொண்டு, உலகத்தை உட் கொள்ளுகிற திருமால் சிவனது வடிவமென்று
அறிந்து உடம்பில் மயிர்ச்சிலிர்ப்பு உண்டாகப்பெற்றான்; (எ - று.)

     (9) இமையநல்வரையினிதீன்றகன்னிகை
        யுமையவள்கணவனெவ்வுயிர்க்குநாயகன்
        சமைவுறத்துதித்திடுமடியர்தம்முக
        மமைவுறுதிருவுளத்தருளினோக்கியே.

     (இ-ள்.) சிறந்த இமயமலை இனிமையாகப் பெற்ற இளமகளாகிய
உமாதேவிக்குநாயகனும், எல்லாவுயிர்களுக்குந் தலைவனுமான சிவபிரான்,-
பொருத்தமாகத்தோத்திரஞ்செய்கிற (தனது) பக்தர்களாகிய கிருஷ்ணார்ச்சுனரது
முகங்களைச்சாந்தமான (தன்) மனத்தில் மிக்க கருணையோடுபார்த்து,-
(எ - று.)- வேண்டுவது என்என' என்று மேற்கவியோடு தொடரும்.

     தக்ஷப்பிரஜாபதியினிடம் மகளாகப் பிறந்து தாக்ஷாயணி யென்றும்
சதியென்றும்பெயர்கூறச் சிறந்து வீற்றிருந்த அம்பிகை, பின்னொருகாலத்தில்
சிவாபராதியானஅம்முனிவனதுசம்பந்தமான பேரோடும் உடம்போடும் உய்ந்திருக்க
மனமியலாமல்,சிவபிரான்


    * இந்தப்பாடல் சிறிதுபாடபேதத்துடன் ஏட்டுப்பிரதிகளில் 211-ஆம் பாடலாக
உள்ளது.