பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்239

விஷந்தோன்றுதற்கு இடமாயினமை : கங்காநதிக்குப்பதியாதல்- கங்கைநதியாகிய
பெண்ணுக்குக் கடல் கணவனாதலும், கடல் கங்கை நதி சேருமிடமாதலும்.
(எல்லாநதிகளுங் கடலிற்சேர்தலும், நதி சப்தமும் ஸமுத்ரசப்தமும் வடமொழியில்
முறையே பெண்பால் ஆண்பாற் சொற்களாக அமைந்திருத்தலு மாகிய தன்மைபற்றி
நதிகளை மனைவிகளாகவும் கடலை அவைகட்குக் கணவனாகவும் கூறுதல் மரபு.)
பொதுப்பட 'நதிக்கொருபதியாய்' என்றுகூறாது இங்கே 'கங்காநதிக் கொரு பதியாய்'
என்று எடுத்துக்கூறினது. அந்நதியின் ஒப்புயர்வற்ற சிறப்புப்பற்றி யென்க.
அவ்யாற்றின் மிக்க சிறப்பு, பிரசித்தம். கடலுக்குச் சிலை - ஆலங்கட்டியும்,
அம்பு -சாதாரணநீர்த்துளியு மென்க. மிக்கவலிமையும், எதற்குஞ்சலியாத உறுதியும்,
அளவிடவொண்ணாதஉயர்வும் பொருள்வண்மையும் முதலியன உடைமைபற்றி,
அருச்சுனனிடத்து மலையின் தன்மையை யேற்றிக் கூறினார். கண்ணனுக்குக்
காளமேகம் கருநிறத்தால் மாத்திரமே யன்றி உலகத்தின்தாபத்தை யொழிக்கிற
குளிர்ந்த கருணை மழையைச் சொரியுந் தன்மையாலும் அமையு மென்க.
சிவபிரானுக்கு, சந்திரனையும் விஷத்தையும் அடக்குதல் - சந்திரனைத் தலையில்
தரித்தலும், விஷத்தைக் கழுத்தில்நிறுத்தலும் ;  கங்காநதிக்கு ஒரு பதியாதல் -
கங்கையைச் சடையில் வைத்துக்கொண்டிருத்தல் ; இனி, பெண்பாலாகியகங்கை
சிவபிரானை நீங்காதுசேர்ந்திருக்குந் தன்மையென்றலுமுண்டு உபமேயமாகிய
சிவபிரான் பலதேவர்களினுஞ் சிறப்புப்பெற்று மகாதேவனென்றும் மகேசுவரனென்றும்
கருணைக் கடலென்றும் உயர்த்திக்கூறப்படுந்தன்மை தோன்ற, உபமானமாகிய
கடலை 'உயர் மகோததி' என்று விசேடித்துக் கூறின ரென்க.

     பெறுதற்கரிய பொருள்களாய்ப் பரமசிவனிடமிருந்த வில் அம்புகளை
அருச்சுனன் எளிதிற்பெற்றுப் பயன்படுத்திக்கொள்ளுதற்குக் கண்ணன் புருஷகாரமாய்
நின்று உதவியமைபற்றி, கண்ணனை 'பரமசிவனாகிய பெருங்கடலிடத்தினின்று
சிலையும் அம்பும் முகந்து பற்குணப் பொருப்பிடைப்பொழியுங் கரியபைம்புயல்'
என்றார். வில் அம்புகளோடு அவற்றிற்கு உரிய முஷ்டிநிலை என்பனவும்,
ருத்திமகாமந்திரமுங் கொடுப்பித்தமை, 'எலாம்', 'பொழியும்' என்ற சொற்களாற்
குறிப்பிக்கப்பட்டன வென்க.

     கருவிலே திருவுடைமையாவது - கருப்பத்தி லிருக்கும்பொழுதே எம்பெருமான்
தன் திருவருளால் தனதுசொரூபரூபகுண விபூதிகளைக் காட்டிக் குளிர நோக்கித்
தரிசநந்தரப்பெற்று வணங்கி அப்பயிற்சியின் நிறைவினாற் பிறந்த பின்பும் ஒருகாலும்
அப்பரமனை மறவாமல் எப்பொழுதும் பகவத் பக்தியாகிற ஐசுவரியத்தைப் பரி
பூர்ணமாக உடையராயிருத்தல். தொண்டரடிப்பொடியாழ்வார் எம்பெருமானுக்கு
அடிமைபூணாதவரை "கருவிலேதிருவிலாதீர்" என்று இகழ்ந்து
அருளிச்செய்தமைகொண்டு , இவர் இங்கு எம்பெருமானுக்கு அடிமைபூண்பவரை
'கருவிலே திருவுடையவர் ' என்றார். 'கருவிலே திருவுடையவர் ' - கர்ப்ப ஸ்ரீமாந்.
பி -ம்:கரியவண்புயலை.