சிறப்புடையரான தேவரும் துதித்தன ரென்றதனால், பிறர் துதித்தமைதானே புலப்படும். மிகப்பரந்த கடலினிடையிலே தடையற ஊடறுத்துக்கொண்டு விரைந்து செல்கிற மரக்கலம், மிகப்பரந்த சேனையினிடையிலே தடையறப் பகைதொலைத்துக் கொண்டு பெருமிதத்தோடு விரைந்துசெல்கிற அருச்சுனனுக்கு உவமை. உபமானமாகிய மரக்கலத்துக்கு ' உலம்பவோடு' என்ற அடைமொழி கொடுத்துக் கூறினதானால், அருச்சுனன் தனதுவெற்றி தோன்றச் சிங்கநாதஞ்செய்துகொண்டு வந்தனனென விளங்கும், விட்டுஎனப் பதம்பிரித்தும் பொருள் கொள்ளலாம். பி - ம்: துலக்க முற்று. (420) 24.- நான்குகவிகள்- கர்ணனும் அருச்சுனனும் பொருதலைக் கூறும். துதியினாலுயர்ந்தவண்மையுடையபானுசூனுவுங் கதியினாலுயர்ந்தமாவொடொத்ததேர்கடாவினான் மதியினாலுயர்ந்தகொற்றவலவனுந்துதேருடன் விதியினாலுயர்ந்தசாபவெஞ்சமந்தொடங்கினார். |
(இ -ள்.) (அவ்வாறு அருச்சுனன் வருதலைக் கண்டு),- துதியினால் உயர்ந்த - புகழினாற் சிறந்த, வண்மை உடைய - ஈகைக் குணத்தையுடைய, பானு சூனுஉம் - சூரியகுமாரனான கர்ணனும்,- கதியினால் உயர்ந்த - பலவகைநடைகளாற் சிறந்த, மாவொடு - குதிரைகளோடு, ஒத்த - கூடின, தேர் - (தனது) தேரை, மதியினால் உயர்ந்த கொற்றம் வலவன் உந்து தேருடன் -ஞானத்தினாற் சிறந்த வெற்றியையுடைய சாரதியான கண்ணபிரான் செலுத்துகிற (அருச்சுனனது) தேருடன்,கடாவினான் - நெருங்கச்செலுத்தினான்; (பின்பு இருவரும்), விதியினால் உயர்ந்த -(தநுர்வேதத்திற்கூறிய) விதிகளின்படி சிறந்துள்ள, சாபம் - வில்லைக்கொண்டுசெய்கிற, வெம்சமம் - கொடிய போரை, தொடங்கினார்-; (எ -று.) வண்மை - பண்புப்பெயர்: யாசகர்க்குத் தடையில்லாமலும், வரையறையில்லாமலுங் கொடுத்தல்; புகழின் காரணம் பலவற்றுள்ளும் ஈதலே சிறந்ததென்பது தோன்ற, 'துதியினாலுயர்ந்த வண்மை' என்றார். பி -ம்: கடாவிமுன்.தொடங்கினான். (421) 25. | தொடங்குபோரில்வலியினாலுமதனினுந்துலங்குமெய் விடங்கினாலும்வின்மையாலுமுவமைதம்மில்வேறிலார் விடங்கொள்வாளிமின்பரப்பிவெய்யநாணிடிக்கவே மடங்கல்போலிரண்டுவில்லுமண்டலம்படுத்தினார். |
(இ-ள்.) வலியினால்உம்- பலத்தினாலும், மதனின்உம் துலங்கு மெய் விடங்கினால்உம்- மன்மதனைக்காட்டிலும் மிகுதியாக விளங்குகிற உடம்பின் அழகினாலும், வின்மையால்உம்- விற்போர்த்திறத்தினாலும், தம்மில் உவமைவேறு இலார்- (தமக்குத் தாமேயன்றி) வேறு ஒப்புப்பெறாதவரான அருச்சுனனும் கர்ணனும், - தொடங்கு போரில் - செய்யத்தொடங்கிய யுத்தத்திலே,- விடம் கொள் வாளி - (கொடுமையில்) விஷத்தையொத்த அம்புகளாகிய, மின் - மின்னல்களை, பரப்பி - பரவச்செய்து,- வெய்ய நாண் - கொடிய வில் நாணி, |