மின்னார்வடி வேலாயிவை விதியின் செயலன்றோ வென்னாவொரு கவசந்தனை யிவன்மெய்யினி லிட்டான். |
(இ-ள்.) (ஆயினும்), மன் ஆகவம் மதியா - பெரிய போரை ஒரு பொருளாகக்கருதாத, விறல் - பாராக்கிரமத்தையுடைய, வயவன்தனை - வீரனான சயத்திரதனை,விசயன்தன்னால் - அருச்சுனனால், ஒரு பகல்ஏ - இந்த ஒரு பகற்பொழுதினுள்ளே,உயிர் தபுவித்திடல் - உயிரழித்திடுதல், ஆம்ஓ - முடியுமோ? மின் ஆர் வடிவேலாய் - மின்னல்போன்ற ஒளிபொருந்தின கூர்மையான வேலாயுதத்தையுடையவனே! இவை விதியின் செயல் அன்றோ- (அருச்சுனனாற் சயத்திரதன் இன்றைப்பகலே கொல்லப்படுதலும் படாமையு மாகிய) இவை ஊழ்வினைப்பயனல்லவோ? என்னா - என்று சொல்லி, (துரோணன்), ஒரு கவசந்தனை - ஒருகவசத்தை, இவன் மெய்யினில் இட்டான் - இத்துரியோதனனுடம்பிலே பூட்டினான்; 'சயத்திரதனை அருச்சுனன் கொல்லலாகாதபடி பாதுகாக்க உறுதிகொண்டுள்ளோம்: ஆயினும், தெய்வச்செயல் வேறாயிருப்பின் யாம் என்னசெய்யலாம்?' என்பார், 'இவைவிதியின்செயலன்றோ' என்றானென்க. இக்கருத்துப்படவே முந்தினநாளிரவிலும் கூறியமை காண்க. பி - ம் : தவிர்வித்திடலாமோ. இனி விதியின்செயலன்றோ. இவன்மேனியிலிட்டான். (462) வேறு. 66.- துரோணன் துரியோதனனுக்கு அக்கவசத்தின் சிறப்பைக் கூறுதல். பங்க யாசனன் வாசவற் களித்தது வாசவன் பயில்போரி லங்க ராவினுக் குதவிய தங்கரா வெனக்கரு ளியதிந்தத் தொங்கன் மாமணிக் கவசமெவ் வீரருந் தொழத்தகு கழற்காலாய் புங்கவாளியிற் படைகளி லொன்றினும் பொன்றிடா திதுவென்றான். |
(இ -ள்.) 'எ வீரர்உம்- எல்லாவீரர்களும், தொழ தகு - வணங்கத்தக்க, கழல்காலாய் - வீரக்கழலையணிந்த பாதத்தையுடையவனே! தொங்கல் - (வெற்றி) மாலைதரித்தற்குஉரியதும், மா மணி - சிறந்த இரத்தினங்கள் பதித்ததுமான, இந்த கவசம்-, பங்கய ஆசனன் - (திருமாலின் நாபித்) தாமரைமலரை இருப்பிடமாகவுடையவனான பிரமன், வாசவற்கு - தேவேந்திரனுக்கு, அளித்தது - முன்பு கொடுத்தருளியது: (பின்பு), வாசவன் - அவ்விந்திரன், பயில் போரில் - இடைவிடாதுசெய்யும் போரின் முடிவில், அங்கராவினுக்கு உதவியது - அங்கிரசுக்குக்கொடுத்தது: (அதன்பின்பு), அங்கரா - அந்த அங்கிரசு, எனக்கு அருளியது -எனக்குக் கொடுத்தது: இது - இக்கவசம், புங்கம் வாளியில் - கூரிய அம்புகளிலும்,படைகளில் - மற்றை ஆயுதங்களிலும், ஒன்றின்உம் - ஒன்றினாலும், பொன்றிடாது -அழிந்திடாது,' என்றான் என்று (அக்கவசத்தின் வரன்முறையையும் அழியாவலிமைச்சிறப்பையும் துரோணன் துரியோதனனுக்குக்) கூறினான்; ( எ -று.) முன்பு இந்திரன் முதலிய தேவர்கட்கும் விருத்திராசுனுக்கும் நடந்த பெரும்போரில் அசுரனாற் சிதைவு அடைந்ததேவர்கள் |