(இ-ள்.) விசயன் - அருச்சுனன், வேர்த்து - கோபங்கொண்டு, எதிர் வென்ற -எதிர்த்துச் சயித்த, களத்தில் - போர்க்களத்திலே, ஆர்த்து எதிர் வந்தார் -ஆரவாரஞ்செய்துகொண்டு அவனெதிரில் வந்தவர், ஆர்கொல் பிழைத்தார் - யாவர்பிழைத்தவர்? ஏத்திய - சிறப்பித்துச்சொல்லப்படுகிற, பதினெண் பூமியின் - சிங்களம்முதலிய பதினெட்டுநாடுகளிலுமுள்ள, எண்ணும் - நன்குமதிக்கப்படுகிற, பார்த்திவர் -அரசர்கள், பல்பல் ஆயிரர் - பலபல ஆயிரம்பேர், பட்டார் - அழிந்தார்கள்; (எ-று.) இது முதல் ஆறு - கவிகள் பெரும்பாலும் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் விளச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (489) 93. | தம்பியருந்துச்சாதனன்முதலோ ரம்பிலழிந்துதமாருயிருய்ந்தார் எம்பெருமானன்றெரிகணையேவ வம்பரமுற்றதனைவருமுற்றார். | (இ-ள்.) துச்சாதனன் முதலோர் - துச்சாசனன் முதலியவர்களான, தம்பியர்உம்-, அம்பில் அழிந்து - அருச்சுனனம்புகளால் வலியழிந்து, தம் ஆர் உயிர் உய்ந்தார் - (அரிதில் தப்பித்) தங்களுடைய அரிய உயிர் பிழைத்தார்கள்; அனைவர்உம் - மற்றும்எல்லாரும், எம்பெருமான் அன்று எரி கணை ஏவ அம்பரம் உற்றது உற்றார் - எமது தலைவனான திருமால் அந்நாளில் [முன்பு ஒருகாலத்தில்] ஆக்நேயாஸ்திரத்தைப் பிரயோகிக்க (அதனாற்) கடல் பட்ட பாட்டை யடைந்தார்கள்; ( எ -று.)- திருமாலின் திருவவதாரமான இராமபிரான் இலங்கைக்குச் செல்லும்போது அடங்கியொழுகாத கடலின் செருக்கை யடக்குதற்கு ஆக்நேயாஸ்திரந்தொடுக்கத் தொடங்கவே கடலரசன் தவிப்படைந்து அடங்கியொடுங்கின னென்க. (490) 94. | மாரதர்வீழ்ந்தாரதிரதர்மாய்ந்தார் சாரதிகளும்வன்றலைகளிழந்தார் நாரதன்முதலோர்நாகரநேகர் பாரதமின்றேபற்றறுமென்றார். |
(இ-ள்.) (அப்பொழுது அருச்சுனனா லழிக்கப்பட்டு), மாரதர் - மகாரத வீரர்கள், வீழ்ந்தார் - (இறந்து) கீழ்விழுந்தார்கள்; அதிரதர் அதிரதவீரர்கள், மாய்ந்தார் - இறந்தார்கள்; சார திகள்உம்- தேர்ப்பாகர்களும், வல் தலைகள் இழந்தார் - வலிய (தம்தம்) தலைகளையிழந்தார்கள்; நாரதன் முதலோர் நாகர் அநேகர் - (வானத்தில் நின்று போர்விநோதம் பார்த்துக்கொண்டிருந்த) நாரதன்முதலிய தேவர்கள்பலரும், பாரதம் இன்றுஏ பற்று அறும் என்றார் - பாரதயுத்தம் இன்றைக்கே முற்றமுடிந்திடுமென்றுசொல்பவரானார்கள். பாரதம்- பரதவம்சத்ததாருள் நிகழும் போர். வீழ்ந்தார், மாய்ந்தார், தலைகளிழந்தார்- பொருட்பின்வருநிலையணி. (491) |