(இ-ள்.) (இங்ஙனம் சங்கைகொண்ட தருமபுத்திரன்),- தன் துணை நின்ற சாத்தகியை கூய் - தனக்குத்துணையாகநின்ற சாத்தகியை அழைத்து,- (அவனைநோக்கி),-'வென்றிடு போரில் - சயித்திடுதற்குரிய யுத்தத்திலே, விசயன் இளைத்தால் அன்றி - அருச்சுனன் இளைப்படைந்தா லல்லாமல், ஐயன் - தலைவனான கண்ணபிரான், அதிர்வளை முழக்கான் - அதிர்ச்சியுண்டாக்கவல்ல சங்கத்தை ஊதி ஒலிசெய்யமாட்டான்; (ஆதலால்),நீ-,சென்று- (அவர்களுள்ள இடத்துக்குப்) போய், அறிகுதி - (நிகழ்ந்தசெய்தியை) அறிவாய்,' என்று,- உரைசெய்தான் - சொன்னான்; 'அதிர்வளைமுழக்கான்' என்ற சொற்போக்கினால், வெற்றிக்கு அறிகுறியாகிற சங்கொலிக்கும், இளைப்புக்கு அறிகுறியாகிற சங்கொலிக்கும் வேறுபாடறிந்து கூறினா னென்னலாம். யதுகுலத்தரசர்களில் வசுதேவனுக்கு உடன்பிறந்தமுறையாகிறவனும் சிநியென்பவனது மகனுமான சத்தியகனதுகுமாரனாகிய சாத்யகி, பிராயத்திற் கண்ணனினும் இளையவனாதலால், கண்ணனுக்குத் தம்பிமுறையாவன். ஸாத்யகிஎன்னும் வடமொழித்தத்திதாந்த நாமம், திரிந்தது. இவன், அருச்சுனனிடம் வில்வித்தையைக் கற்றறிந்த மாணாக்க னாதலால், ஆசிரியனாகிய அருச்சுனனிடத்தும்அதுசம்பந்தமாக மற்றைப்பாண்டவரிடத்தும் அன்போடு ஒழுகுவன். (494) வேறு. 98.- அதற்குச் சாத்தகி இஷ்டத்தோடு உடன்படுதல். வன்கட் டிண்டோன் மன்பலர் நிற்க வென்கட் டந்தா னின்னுரை யென்னா மன்கட் டாரோன் மலரடி வீழ்ந்தான் றன்கட் டாண்மைத் தன்முனொ டொப்பான். |
(இ-ள்.) 'வன்கண் - வலியதன்மையையும், திண் தோள் - வலிய தோள்களையுமுடைய, மன் பலர் - அரசர்கள் பலர், நிற்க-(தன் அருகிற்) காத்துக்கொண்டிருக்கவும், (தருமபுத்திரன் அவர்களில் ஒருவர்க்கும் இக்கட்டளையையிடாமல்), இன் உரை - இனிய (இவ்) வார்த்தையை, என்கண் தந்தான் - என்னிடத்திற் கூறினான்; என்னா - என்றுஎண்ணி, (மகிழ்ச்சி கொண்டு),--தன் கட்டு ஆண்மை தன்முனொடுஒப்பான் - தன துவலிய பராக்கிரமத்தில்தனதுதமையனான கண்ணபிரானோடு ஒப்பவனான அந்தச்சாத்தகி,- மன் கள்தாரோன் மலர் அடி வீழ்ந்தான் - மிகுதியான தேனுள்ள பூமாலையையுடையதருமபுத்திரனது தாமரைபோன்ற பாதங்களில் நமஸ்கரித்தான்; (எ -று.) இப்பொழுது நமஸ்கரித்தது, விடைபெற்றுச் செல்லுகையிற் செய்யும் உபசார மென அறிக, என்கண்தந்தான் - தருதல்வினை தன்மைக்கு வந்தது. பி -ம்: இவ்வுரை. இக்கவி - மூன்றாஞ்சீரொன்று விளச்சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களுமாகிய அளவடிநான்கு கொண்ட கலிவிருத்தம். (495) |