பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்305

போர்ச்சல மில்லாப் புகர்மலை யோடு
மேற்சல மெய்தி வெங்கன லானான்.

     (இ-ள்.) தார் போர்மாலையையுடைய, சலசந்தன்-அந்தச் சலசந்தனானவன்,-
சாத்தகி என்னும் கார் செலவு ஆய-சாத்தகியென்கிற மேகத்தினின்று
வெளிப்பட்டுவந்தனவான, கணை மழையால் - பாணவர்ஷத்தால்,-போர் சலம்
இல்லா புகர் மலையோடு-போரிற்கலங்குதலில்லாத முகச்செம்புள்ளிகளையுடைய
மலைபோன்ற யானையுடனே, மேல் சலம் எய்தி - மிக்ககலக்கத்தையடைந்து,
வெம்கனல் ஆனான்-வெவ்வியநெருப்புப் போன்றவனானான்; (எ - று.)

     சலசந்தனிடத்து நெருப்பின் தன்மையையும், அவன்யானையினிடத்து
மலையின் தன்மையையும், சாத்தகியினிடத்து மேகத்தின் தன்மையையும், அவன்
பிரயோகிக்கிற அம்புத்தொகுதியினிடத்து அம்மேகம் சொரிகிற மழையின்
தன்மையையும் ஏற்றிக்கூறினார்; உருவகவணி, 'மேற்சலமெய்து வெங்கனலானான்'
என்றபாடம் மேலே நீர்வந்துவிழப்பெற்ற கடுநெருப்புப்போலாயினானென
இனிதுபொருள்படும்.                                          (500)

வேறு.

104.-துரியோதனன் தம்பியர் நால்வரைச் சாத்தகி வெல்லுதல்.

நாட்ட மில்லா நரபதி மைந்த
ரீட்ட மாக வீரிரு வோர்கள்
கூட்டம் பெய்யக் கொடுமுனை வென்றான்
வேட்டம் போன வெங்களி றொப்பான்.

     (இ-ள்.) நாட்டம் இல்லா நரபதி மைந்தர்-கண்களில்லாத அரசனான
திருதராஷ்டிரனது புத்திரர்கள், ஈர்இருவோர்கள்-நாலுபேர், ஈட்டம் ஆக-
ஒருதிரளாக(வந்து), கூட்டு அம்பு எய்ய-தொகுதியாகப் பாணங்களைப்
பிரயோகிக்க,-வேட்டம்போன வெம் களிறு ஒப்பான்-வேட்டையாடச் சென்ற
கொடிய ஆண்யானையைப்போன்றவனான சாத்தகி, கொடு முனை வென்றான் -
கொடிய (அவர்கள்) போரைச்சயித்தான்; (எ - று.)

     கூட்டு அம்பு எய் அ கொடு முனை என்று பிரித்து, தொகுதியான
அம்புகளை யெய்கிற அந்தக் கொடியபோர்க்களத்து என்றுமாம்.பி-ம்:நாட்டமிலாத,
ஈட்டமதாக.இதுவும், அடுத்தகவியும், 98 - ஆங்கவிபோன்ற கலிவிருத்தங்கள்.
                                                      
(501)

105.-இங்ஙன்பொருதுசெல்லுஞ் சாத்தகியைத் துரோணன் பார்த்தல்.

யாரும் போரி லெளிவயர வீரஞ்
சாருஞ் சாபந்  தன்னொடு நேமித்
தேருந்  தானுஞ் சென்றிடு வோனைக்
கூருஞ் சாபக் குருவெதிர் கண்டான்.