(இ-ள்.) (அப்பொழுது),-மாருதன் புதல்வன் தொடும் அம்பினில்- வாயுகுமாரனான வீமன் பிரயோகித்த பாணங்களினால், மா இரண்டுஉம் இரண்டுஉம் விழுந்தன - (கர்ணனது தேர்க்) குதிரைகள் நான்கும் இறந்துவிழுந்தன; சோரும் வல் துவசம் தறியுண்டது-அசைந்தாடுந்தன்மையுள்ள வலிய கொடி முறிபட்டது; சூதன்உம் தலை சிந்தினன்-தேர்ப்பாகனும் தலைசிதறினான;் முந்திய தேர்உம்-முற்பட்டுவந்த இரதமும், உந்து உருள்உம்- (அதனை) நடத்துகிற சக்கரங்களும், துகள் கொண்டன- பொடிபட்டன; சேமம் வெம் கவசம் - (உடம்புக்குப்) பாதுகாவலாகவுள்ள வலிய கவசம், துளை விஞ்சியது - துளைகள்மிகப்பெற்றது; ஆரம்வெள் குடை அம்புலிஉம்- முத்துமயமான ஒற்றைவெண்கொற்றக்குடையாகிய சந்திரமண்டலமும், பிறை ஆனது - (பிளவுபட்டுப்) - பிறைச்சந்திரன்போலக் குறைவடிவாயிற்று; அஞ்சல் இல் நெஞ்சுஉம் அழிந்தது-(எதற்கும்) அஞ்சு தலில்லாத (அவனது) மனமும் மிகத்தளர்ந்தது; (எ-று.)-ஏ-ஈற்றசை;தேற்றமுமாம். (526) வேறு. 130.-கர்ணனுக்கு அவன்மகன் தன்தேரைக் கொடுத்தல். அழித்து கன்னனுங் கால்விசை யினிலிவ னம்பினுக் கெட்டாமல் வழிந்து போதல்கண் டடல்விட சேனனவ் வள்ளலுக் கெதிரோடி யிழிந்து தன்பெருந் தடாமணித் தேரின்மே லேற்றுலு மிவனேறிக் கழிந்த நீர்க்கணை கோலுவான் போலவன் கண்ணெதி ருறச்சென்றான். |
(இ-ள்.) (இவ்வாறு, கண்ணன்உம் - கர்ணனும், அழிந்து- (தேர்முதலியன) அழியப்பெற்று, கால் விசையினில் - கால்களின் வேகத்தால், இவன் அம்பினுக்கு எட்டாமல் வழிந்து போதல் - வீமனுடைய பாணங்களுக்கு இலக்காகாதபடி, (வேகமாக) நழுவியோடிச் செல்லுதலை, கண்டு-பார்த்து, அடல் விடசேனன் - வலிமையையுடைய (அவன் மகனான) விருஷசேனனென்பவன், அ வள்ளலுக்கு எதிர் ஓடி-வண்மைக்குணமுடையவனான அக்கர்ணனுக்கு எதிரிலே விரைந்து சென்று,இழிந்து-(தன்தேரினின்று) இறங்கி தன் பெருந் தட மணி தேரின்மேல் - பெருமையுள்ளதும் பெரியதுமான அழகிய தனது தேரின்மேல், ஏற்றலும்-(அவனை) ஏற்றிக்கொண்டவளவிலே, இவன்-கர்ணன் ஏறி-அத்தேரிலேறி, கழிந்த நீர்க்கு அணைகோலுவான் போல்- கடந்துசென்ற நீர்ப்பெருக்கைத் தடுப்பதற்கு அணைகட்டமுயல்பவன் போல, அவன் கண் எதிர் உற சென்றான்-அவ்வீமனது கண்களுக்கு எதிராக (மீண்டும்) சென்றான்; (எ - று.) விடசேனன் - கர்ணனது குமாரன், பெருகிச்சென்றவெள்ளத்துக்குத் தடுத்துவைத்தற்பொருட்டு பின்பு அணைகோலுதலிற்சிறிதும்பயனில்லாமைபோல, மிகமேலிட்டுவந்திட்ட வீமனைக்கர்ணன் எதிர்த்தல் சிறிதும்பயன்படாது முடிதலால், 'கழிந்த நீர்க்கு அணைகோலுவான்போல அவன் கண்ணெ திருறச்சென்றான்' என்றார்; கழிந்தநீர்க்கு அணைகோலுதல் - வடமொழியில் 'கதஜலஸேதுபந்தம்' எனப்படும். |