பக்கம் எண் :

322பாரதம்துரோண பருவம்

     வீமன் வாயுகுமார னாதலால் தனது தந்தையின் வலிமையைத்தான் கொண்டு
அவன்போலானா னென்றும், கர்ணன் யமனுக்குத் தம்பியாதலால் தன் தமையனது
கோபத்தைத் தான்கொண்டு அவன்போலானா னென்றும் சமத்காரமான கருத்து
நிகழ. 'பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங் கொள்ளாரோ' என்றார். வீமனும்
கர்ணனும் காற்றையும் யமனையும் போன்ற வேகத்தையும் கோபத்தையும்
கொண்டிருந்தா ரென்ற சிறப்புப்பொருளை, 'பிறப்பிலே துவக்குளோர் குணங்களுங்
கொள்ளாரோ' என்ற பொதுப் பொருள்கொண்டு சாதித்ததனால்,
வேற்றுப்பொருள்வைப்பணி. யமன் சூரியனுக்கு ஸம்ஜ்ஞை யென்னும்
மனைவியினிடத்து முன்புபிறந்த மகனாதலாலும், கர்ணன் சூரியனுக்குக்
குந்திதேவியினிடம் பின்பு  பிறந்த புத்திரனாதலாலும், கர்ணனை 'யமனுக்குத்
தம்பி'என்றது. கழனிகளிலே ஆமைகள் நீர்வளச்சிறப்பைநோக்கி அங்குச்சென்று
வாழ்தற்பொருட்டு வாய்க்கால்களின்  வழியாய் வந்துசேர, அது கண்ட உழவர்கள்,
உழுபடைகளில் அவை அகப்பட்டு அழிந்திடா வண்ணம் ஓட்டும்படி முத்துக்களை
யெடுத்து எறிகின்றன ரென வர்ணனையின் போக்குக் காண்க. வீமனை 'குருநாடன்'
என்றது அப்பொழுது குருநாடுமுழுவதுக்கும் உரியவனாய் அரசாள்கிற
துரியோதனனைக் கொன்று அந்நாட்டின் அரசாட்சியுரிமையைக் கைப்பற்றும்
வல்லமை யுடைய னாதலால். நாட்டுக்குக்கொடுத்த அடைமொழியில், அந்நாட்டு
வீரர்தமது தொழிலுக்கு இடையூறாக வருமுயிர்களைக் கையிலகப்பட்ட சிறந்த
கருவிகளைக்கொண்டு விலக்கும் ஆற்றலுடையா ரென்ற கருத்துத் தோன்றுதல்
காண்க.                                                    (532)

136.-வீமன் கர்ணனெதிரில் வீரவாதஞ்செய்தல்.

தேறல்வண்டிமிர்தெரியலான்றினபதிசிறுவனைமுகநோக்கி
யாறல்வெஞ்சமத்தென்னுடன்முனைந்தனைமுனைந்தனையானாலும்
வேறலென்கடனின்னைமன்னவையின்முன்விளம்பிவசனத்தாற்
கோறலெம்பிதன்கடனெனவரிசிலைகுனித்தனன்கொடித்தேரோன்.

     (இ-ள்.) தேறல் வண்டு இமிர் தெரியலான்-தேனில் வண்டுகள்
மொய்த்தொலிக்கப்பெற்ற மலர்மாலையையுடையவனாகிய, தினபதி சிறுவனை -
பகற்பொழுதுக்குத் தலைவனான சூரியனது  குமரானாகிய கர்ணனை, முகம்
நோக்கி-முகத்தைப்பார்த்து,-'(நீ), என்னுடன்-,ஆறுஅல் வெம்சமத்து-நியாய
வழியல்லாதகொடிய போரிலே, முனைந்தனை - வீராவேசங்கொண்டாய்;
முனைந்தனைஆனால்உம்-(அங்ஙனங்கொண்டு) போர்தொடங்கினையானாலும்,
நின்னை -உன்னை, வேறல் - வெல்லுதல்மாத்திரமே, என் கடன்- எனது கடமை,
மன்அவையில் - ராஜசபையில், முன் விளம்பிய - முன்பு சொன்ன, வசனத்தால் -
சபதவார்த்தைப்படி, கோறல் - (உன்னைக்) கொல்லுதல், எம்பிதன் கடன் - எனது
தம்பியின் கடமை,' என- என்றுசொல்லி, கொடி தேரோன்-(சிங்கக்) கொடி கட்டிய
தேரையுடையவனான வீமன், வரி சிலை குனித்தனன் - கட்டமைந்த வில்லை
வளைத்தான்; (எ - று.)