பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்335

அதுவரையிலும், காக்கின் - (சயத்திரதனைப்) பாதுகாத்தல், செரு கிளர் விசயன் -
போரிற் சிறந்த அருச்சுனன், இன்றுஏ - இன்றைத்தினமே, தீயிடை வீழ்தல் -
அக்கினிப்பிரவேசஞ்செய்து இறத்தல், திண்ணம் - நிச்சயம்; (ஆதலால்), நெருக்குபு
நின்மின்-(அச்சயத்திரதனுள்ள இடத்துக்கு அருச்சுனன் செல்லவொண்ணாதபடி
இடைவிடாது) நெருக்கிக்கொண்டு நில்லுங்கள்', என்று - என்று சொல்லிக்கொண்டு,
மருவலார் - பகைவர்கள், அந்த மருகமழ்' தொடையலானை - வாசனைவீசுகிற
மாலையைத் தரித்தவனான் அந்தச்சயத்திரதனை, நிலவறை யதனில்வைத்தனர் -
நிலத்திலுண்டாக்கிய ஓரறையினுள்ளே (மறைத்து)  வைத்தார்கள்; (எ-று.)

163.-சயத்திரதன் கட்புலனாகாமை.

நச்சளை யரவ மென்ன நடுங்கின னின்ற காலைத்
துச்சளை கணவன் றன்னைத் தோற்றமொன் றானுங் காணான்
பச்சளை முடைகொண் மேனிப் பாடிமா மகளிர் பைம்பொற்
கச்சளை புளக பாரக் கனதனங் கலந்த தோளான்.

     (இ-ள்.) பசு அளை முடை கொள் - பசிய வெண்ணெய்க்கு உரிய -
முடைநாற்றத்தைக் கொண்ட, மேனி - உடம்பையுடைய, பாடி மா மகளிர் -
திருவாய்ப்பாடியிலுள்ள அழகிய மகளிரது, பைம் பொன் - பசும்
பொன்னணிகளையணிந்தவையும், கச்சு அளை - கஞ்சுகம்பொருந்தியவையும்,
புளகம் - (மகிழ்ச்சி மிகுதியாலாகிய) மயிர்ச்சிலிர்ப்பையுடையவையுமான, பாரம் கன
தனம் - பருத்த வலிய தனங்களிலே, கலந்த - சேர்ந்த, தோளான் - தோள்களை
யுடையவனான கண்ணபிரான்,- அளை நஞ்சு அரவம் என்ன நடுங்கினன் நின்ற
காலை - வளையினுள்ளேபதுங்கிய விஷசர்ப்பம்போல (க் கொடிய சயத்திரதன்
நிலவறையினுட் புக்கு) மிக அச்சங் கொண்டு நின்றபொழுது, துச்சளை கணவன்
தன்னை தோற்றம் ஒன்றான்உம் காணான் - துச்சளையின்கணவனான அவனை
ஒருவகையாலும் வெளித்தோன்றக் காணாதவனாயினான்; (எ - று.)

     அஸ்தமிக்கிறசமயம் சமீபித்தவளவிலும் சயத்திரதன் கண்ணெதிரிலே
காணப்படாமையாலும், அவனை வெளிப்படுத்தற்கு வேறொரு
வகையில்லாமையாலும், பாண்டவசகாயனான கண்ணபிரான் மாயை செய்யலுற்றன
னென்பார், இது கூறினார். முந்தின நாட்போரிலே அபிமன்பக்கல் துரோகஞ்செய்த
சயத்திரதன் அடுத்தநாட்போரில் அருச்சுனனுக்கு அஞ்சி வெளிப்படுதலின்றி
நிலவறையினுள்ளேயே பதுங்கியிருத்தற்கு, உடனே தன்னைப் பிறர் நாடிக்கொல்வ
ரென்னும் அச்சத்தால் ஏதேனும் ஒரு மறைவிடத்தினுள்ளேபுகுந்து வெளிப்படாது
அஞ்சிக்கிடக்கும் தீண்டிய விஷநாகம் ஏற்ற உவமை. துச்சளை - துரியோதனாதியர்
தங்கை. வெண்ணெய்க்குப் பசுமை - குளிர்ச்சியும், உருக்காமையும், புதுமையும்.
கண்ணன் திருவாய்ப்பாடியில் வளர்ந்த இளமைப் பருவத்தில் அங்குள்ள
கோபஸ்திரீகள்பலரோடுங் கலந்து திருவிளையாடல்கொண்டருளின னென்பது
பிரசித்தம். பாடி - முல்லை நிலத்து ஊர். பொன் - கருவியாகுபெயர்.     (560)