190.-கர்ணனை அருச்சுனன் மீளவும் வென்று துரத்துதல். வாளமாகவில்வணக்கியும்பர்பதிமைந்தன்வாளிரவிமைந்தனைக் கோளமானகுடையிரதம்வாசிசிலைகொடிமுருக்கியமர்கொள்ளவே மீளமீளவுமழிந்தழிந்தவனொர் வேலினாலெறியவேலையுந் தூளமாகவடிவாளியாலெதிர்துணித்துவன்பொடுதுரக்கவே. |
இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) வாளம் ஆக வில் வணக்கி-வட்டவடிவமாக வில்லை வளைத்து, உம்பர் பதி மைந்தன் - தேவராசனான இந்திரனது மகனாகிய அருச்சுனன், வாள் இரவி மைந்தனை - ஒளியுள்ள சூரியனது மகனான கர்ணனை, கோளம் ஆன குடை இரதம் வாசிசிலை கொடி முருக்கி அமர் கொள்ள - வட்டவடிவமான குடையும் தேரும் குதிரைகளும் வில்லும் கொடியும் என்பவற்றை அழித்துப் போரில்வெற்றிகொள்ள,-அவன்- அக்கர்ணன், மீள மீளஉம் அழிந்து அழிந்து - பலமுறையுந் தோற்று, (பின்பு), ஒர் வேலினால் எறிய - ஒரு வேலாயுதத்தினால் வீசிமோத,- (அருச்சுனன்), வேலைஉம் - அவ்வேற்படையையும், தூளம் ஆக - பொடியாம்படி, வடி வாளியால் - கூரிய அம்புகளினால், எதிர் துணித்து-எதிரிலே துண்டித்து, வன்பொடு துரக்க-வலிமையோடு அக்(கர்ணனைத்) துரத்த,-(எ-று.)- "மத்திரத்தலைவன்மனம் முரிந்து ஓடினான்" எனவருங்கவியோடு தொடர்ந்துமுடியும், தூளம், அம் - சாரியை. (587) 191.-சல்லியனைச் சதானிகனும், அசுவத்தாமனைக் கடோற்கசனும் வேறல். முன்சதாதிமுருக்கமேருகிரிமுடிமுரிந்தெனமுரண்கொள்போர் வன்சதானிகன்வளைத்தவிற்கணையின்மத்திரத்தலைவன்மனமுரிந் தென்செய்தான்முடிவிலோடினான்விறலிடிம்பிமைந்தன்முனி மைந்தன்மேன் மின்செய்தாரையயிலேவினாவன்விரைந்துதேரின்மிசைவீழவே. |
(இ-ள்.) முன்-முன்னொரு காலத்தில், சதாகதி - வாயு தேவன், முருக்க - விசையாகத் தாக்கியதனால், மேரு கிரி-மகாமேருமலை, முடி முரிந்து என-சிகரம் ஒடிபட்டாற்போல, முரண் கொள்போர் வல் சதானிகன் வளைத்தவில்கணையின் - மாறுபாடு கொண்ட போரில் வீசிய சதாநீகன் வணக்கிய வில்லினாலெய்த அம்பு படுதலால், மத்திரம் தலைவன்-மத்திரநாட்டரசனான சல்லியன், மனம் முரிந்து- இதயம்சிதைந்து, முடிவில்-இறுதியில், என செய்தான்-யாதுசெய்தான்? (எனில்), ஓடினான்-புறங்கொடுத்து ஓடிப்போய்விட்டான்; விறல் இடிம்பி மைந்தன்- வலிமையையுடைய இடிம்பியின் புத்திரனான கடோற்கசன், முனி மைந்தன்மேல்- துரோணகுமாரானான அசுவத்தாமன்மேல், மின் செய் தாரை அயில் - மின்னலையொத்து விளங்குகிற கூர்நுனியையுடைய வேலாயுதத்தை, அவன் விரைந்துதேரின் மிசை வீழ - அவன் விரைவிலே தேரின் மேல் மூர்ச்சித்து விழும்படி,ஏவினான்-பிரயோகித்தான்; (எ - று.) எதற்குஞ்சலியாத சல்லியன் மனம்முரிந்ததற்கு, அசலமாகிய மேரு முடிமுரிந்தது உவமம். செய்-உவமவுருபு. (588) |