பக்கம் எண் :

354பாரதம்துரோண பருவம்

192.-திட்டத்துய்மன் துரோணனைச் சயித்தல்.

தானைகாவலனுமுந்துறப்பொருதுதரணிமன்னன்விடுசமர்முகச்
சேனைகாவலனையோடவோடபொருதெய்வவாளிகொடுசீறினான்
ஆனைதேர்புரவியாளொடுற்றெதிரணிந்தமன்னவர்களனைவரு
மேனைமன்னவர்தமக்குடைந்துமுதுகிட்டுமன்னனருகெய்தினார்.

     (இ-ள்.) தானை காவலன்உம் - பாண்டவசேனைத்தலைவனான
திட்டத்துய்மனும், முந்துற பொருது - விரைவாகப் போர்செய்து, தரணிமன்னன்
விடுசமர் முகம் சேனை காவலனை - பூமியையாளுகிற துரியோதனராசனாலே
வப்பட்டபோரின் முன்னேநின்ற சேனைத்தலைவனான துரோணனை, ஓட ஓட -
மிகுதியாய்ஓடும்படி,  ஒரு தெய்வ வாளிகொடு சீறினான் - தெய்வத்தன்மையுள்ள
ஓர்அம்பினால் (அஸ்திரத்தினால்) கோபித்து எதிர்த்தான்; (இங்ஙனமே), ஆனை
தேர்புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவர்உம் -
யானையும்தேரும் குதிரையும் காலாளுமாகிய சதுரங்கசேனையுடனே பொருந்தி
எதிரில்அணிவகுத்து நின்ற (துரியோதனன்பக்கத்து) அரசர்களெல்லாரும், ஏனை
மன்னவர்தமக்கு உடைந்து முதுகு இட்டு - மற்றை (எதிர்ப்பக்கத்து) அரசர்கட்குத்
தோற்றுப்புறங்கொடுத்து, மன்னன் அருகு எய்தினார்-துரியோதனராசனருகிலே
(சென்று)சேர்ந்தார்கள்;                                           (589)

193.-அலாயுத னென்னும் அரக்கன் துரியோதனனிடம் வருதல்.

அன்னபோதினிலநேகநூறுபதினாயிரந்திறலரக்கரோ
டின்னவாறெனவுரைக்கவேநிகரிலாததிண்டிறலலாயுதன்
கன்னசௌபலர்தமக்குநண்பனிருள்கங்குலோர்வடிவுகொண்டனான்
மன்னர்யாவரும்வெருக்கொளச்சமரின்மன்னர்மன்னனடிமன்னினான்.

     (இ-ள்.) அன்ன போதினில் - அப்பொழுது,-கன்ன சௌபலர்தமக்கு நண்பன் -
கர்ணனுக்கும் சகுனிக்கும் சினேகிதனும், இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டு
அனான் - இருண்ட இராத்திரி தானே ஒருபுருஷவடிவத்தைக் கொண்டுவந்தாற்
போன்றவனும் ஆகிய, இன்ன ஆறு என உரைக்க நிகர் இலாத திண் திறல்
அலாயுதன் - இன்னதன்மையென்று சொல்லுதற்கு ஓருவமை பெறாத
மிக்கவலிமையையுடைய அலாயுத னென்னும் அரக்கன், அநேகம்
நூறு பதினாயிரம் திறல் அரக்கரோடு - அநேகம் பத்து லக்ஷக்கணக்கான
வலியஇராக்கதர்களுடனே, மன்னர் யாவர்உம் வெரு கொள - அரசர்களெல்லாரும்
அச்சங்கொள்ளும்படி, சமரில் - போர்க்களத்திலே, மன்னர் மன்னன் அடி
மன்னினான் - இராசராசனான துரியோதனனது பாதத்திற் பொருந்தினான்
(துரியோதனனை வணங்கினான் என்றபடி); (எ - று.)

     ஹலாயுதன் - வடசொல்; ஹல ஆயுதன் - கலப்பையைப் படைக்கலமாக
வுடையவ னென்று பொருள்படும். இருள்கங்குல் -  வினைத்தொகை. இருள்
கங்குல்ஓர்வடிவுகொண்டனான் - தற்குறிப்பேற்றவணி.            (590)