பக்கம் எண் :

370பாரதம்துரோண பருவம்

217.- அருச்சுனன் வைரங்கொண்டு துரோணனை வெல்லுதல்.

மாமனைமகுடந்துணித்தனனெவரும்வணங்குதாண்முனியென
                                      வயிர்த்துக்
காமனையழகுங்கந்தனைவிறலுங் கவர்ந்தவெங்கார்முகவீரன்
சோமனைவகிர்செய்தனையவெம்முனையதொடைகளாற்சுரும்
                                     புசூழ்கமலத்
தாமனைமுதுகுகண்டனன்முன்னந் தயித்தியர்முதுகிடத்தக்கோன்.

     (இ-ள்.) எவர்உம் வணங்கு தாள் முனி-யாவரும் வணங்கும்
பாதங்களையுடைய துரோணசாரியன், மாமனை மகுடம் துணித்தனன்- (தங்கள்)
மனைவிதந்தையான துருபனைத் தலைதுணித்திட்டான், என - என்று, வயிர்த்து-
வைரங்கொண்டு,- காமனை அழகு உம்  கந்தனை விறல்உம் கவர்ந்த
வெம்கார்முகம் வீரன் - மன்மதனது அழகையும்சுப்பிரமணியனது
பராக்கிரமத்தையும்தனதாகக்கொண்ட கொடிய காண்டீவவில்லையுடைய வீரனும்,
முன்னம் தயித்தியர்முதுகு  இட தக்கோன் - முன்பு (நிவாதகவசர் காலகேயர்
என்னும்) அசுரர்கள்முதுகிடும்படி செய்தவனுமான அருச்சுனன்,- சோமனை வகிர்
செய்து அனையவெம்முனைய தொடைகளால்-சந்திரனைப் பிளவுசெய்தாற்போன்ற
கொடியகூர்நுனியையுடைய அம்புகளினால் [அர்த்தசந்திரபாணங்களால்], சுரும்புசூழ்
கமலம் தாமரை முதுகு கண்டனன்-வண்டுகள் சூழ்ந்துமொய்க்கப்பெற்ற
தாமரைமலர்மாலையையுடையவனான அந்தத்துரோணசாரியனை முதுகிடும்படி
வென்றான்; (எ - று.)                                            (614)

218.-துரியோதனன் சாத்தகியினால் வெல்லப்படுதல்.

பூத்தகிக்குலமுமால்வரைக்குலமும்புகரிபக்குலங்களும்புகழக்
காத்தகிலமுந்தன்குடைநிழற்படுத்துங்காவலர்நீதியைக்கடந்தோன்
சேத்தகில்புழுகுசந்தனங்கமழுந்திருப்புயத்தணிதருந்திருத்தார்ச்
சாத்தகிமுனைச்சென்றம்முனைக்காற்றாதரியெதிர்கரியெனத்
                                     தளர்ந்தான்.

     (இ-ள்.) அகி குலம்உம் - மகாநாகங்களின் வர்க்கமும், மால் வரை குலம்உம் -
பெரிய குலபருவதங்களின் வர்க்கமும், புகர் இபம் குலங்கள்உம் -
(உத்தமவிலக்கணமாகிய) செம் புள்ளிகளையுடைய திக்கஜங்களின் வர்க்கங்களும்,
பூத்து புகழ - பொலிவுபெற்றுக் கொண்டாடும்படி, அகிலம்உம்- உலக முழுவதையும்,
காத்து - பாதுகாத்து, தன்குடை நிழல் படுத்தும் - தனது வெண்கொற்றக்குடையின்
நிழலிலே பொருந்தச்செய்கிற (தனதுதனியரசாட்சியின்கீழ்ப்படுத்துகிற,) காவலர்-
அரசரது, நீதிபதி - நீதிவரம்பை, கடந்தோன் - கடந்தொழுகியவனான
துரியோதனன்,-சேத்துஅகில்-செந்நிறமுடையஅகில்தேய்வையும், புழுகு சந்தனம்-
கஸ்தூரிப்புழுகு கலந்த கலவைச் சந்தனக்குழம்பும், கமழும்-பரிமளிக்கப்பெற்ற, திரு
புயத்து-அழகிய தோள்களில், அணிதரும்-தரித்த திரு தார் - அழகிய
மாலையையுடைய, சாத்தகி-சாத்தகியினது, முனை - எதிரிலே,  சென்று-போய், அ
முனைக்கு ஆற்றாது - அவனதுபோருக்கு ஈடு கொடுக்கமாட்டாமல், அரி எதிர் கரி
என தளர்ந்தான் சிங்கத்தை யெதிர்த்த யானைபோல மிகத்தளர்ச்சியடைந்தான்;-
(எ -று.)