பக்கம் எண் :

376பாரதம்துரோண பருவம்

வதச்சருக்கம் "ஈரேழ்விஞ்சைத்திறனுமீன்றோன்றன்பாலெய்தி, நிரேழென்னயாவு
நிறைந்தகேள்வி நெஞ்சன்" (33) என்றது நினைக்கத்தக்கது, நாற்புறத்துஞ் சூழ்ந்த
நால்வகைச் சேனைக்கும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு அம்பாக நான்கு அம்புகள்
ஒவ்வொருமுறையிலுஞ் செலுத்தப்பட்டன வென்க.                     (623)

7.-குந்திபோசன் துரோணனுடன் எதிர்த்தல்.

புந்திகூர்துரோணனுக்கியாவரும்புறந்தரக்
குந்திபோசனெண்ணிலாயிரங்குறித்ததேர்களோ
டுந்திமீளமுடுகியந்தமுனிவனோடுடன்றபோ
தந்தினவானமொத்தம்மவமர்புரிந்தவாகவம்.

     (இ-ள்.) புந்தி கூர் துரோணனுக்கு-ஞானம் மிக்க துரோணாசாரியனுக்கு,
யாவர்உம் புறம் தர-எல்லாரும் (இப்படி) முதுகு கொடுக்க,-குந்தி போசன்-, எண்
இல்ஆயிரம் குறித்த தேர்களோடு-கணக்ககில்லாத (மிகப்பல) ஆயிரங்களாகக்
குறிக்கப்பட்ட தேர்களுடனே, மீள  உந்தி-மறுபடி சென்று, முடுகி-விரைந்து, அந்த
முனிவனோடு-அந்தத் துரோணசாரியனுடனே, உடன்ற போது-பகைத்து எதிர்த்த
பொழுது,-அமர் புரிந்த ஆகவம் -  போர்செய்த அந்தயுத்தகளம், அந்தி வானம்
ஒத்தது-(இரத்தப் பெருக்கினால்) மாலைச்செவ்வானம் போன்றது; (எ - று.)-ஒருதரம்
புறங்கொடுத்தமைபற்றி, 'மீளவுந்திஎன்றார்.-பி-ம்: அவர்புரிந்த  வாகவம். அம்ம
என்பது - ஆகவம் செவ்வான்போன்றமையைப் பற்றிய வியப்புக்குறிக்கும்,  (624)

8.-சல்லியன் நகுலனோடும், மாளவன் சாத்தகியோடும் பொருதல்.

குருவொடுற்றடர்ந்துகுந்திபோசன்விற்குனிக்கவே
வருசமத்துமத்திரன்றன்மருகனோடுமுடுகினான்
முரண்மிகுத்தகோபவங்கிமூளவந்தமாளவன்
கருநிறத்தனந்தசாயியிளவலோடுகடுகினான்.

     (இ-ள்.) குருவொடு உற்று அடர்ந்து - (கௌரவபாண்டவர்க்கு)
வில்லாசிரியனான துரோணனுடனே யெதிர்த்துப் பொருது நெருங்கி,
குந்திபோசன்-,வில் குனிக்க - வில்வளைத்துப் போர் செய்ய,-வரு சமத்து-எதிர்த்துவருகிற போரில்,மத்திரன் - மத்திரநாட்டரசனான சல்லியன் தன்
மருகனோடு - தன் உடன்பிறந்தவள்மகனான நகுலனுடனே, முடுகினான்-விரைந்து
போர் செய்தான்; முரண்மிகுந்த கோபம் அங்கி மூளவந்த - பகைமையை
மிகுவிக்கிற கோபாக்கினிபற்றியெழ (எதிர்த்து) வந்த, மாளவன் - மாளவ
நாட்டரசனான இந்திரவர்மா, கருநிறத்து அனந்த சாயி இளவலோடு - கரிய
திருநிறமுடையனாய் ஆதிசேஷனிற்பள்ளி கொள்பவனான திருமாலின்
(கண்ணபிரானது) தம்பியாகிய சாத்தகியுடன்,கடுகினான்-விரைந்து போர்செய்தான்;
(எ - று.)-மாளவன் பெயர், மேல்19-ஆங்கவியால் விளங்கும்.           (625)