பக்கம் எண் :

44பாரதம்துரோண பருவம்

18.- இதுமுதல் நான்குகவிகளால், சதுரங்கசேனைகளை
முறையே வருணிக்கின்றார்; அவற்றுள், இது -யானைவருணனை.

மதித்துமதங்களேழினுமெய்வனப்புறுகொண்டன்மானுவன
கதித்துநெடுங்கைவீசியுடுகணத்தைமுகந்துவாருவன
மிதித்துரகன்பணாமணிகள்விழித்துவெகுண்டுலாவுவன
கொதித்திருகண்களாலுமெரிகொளுத்தினகும்பவாரணமே.

     (இ-ள்.) கும்பம் வாரணம் - (அப்போர்களத்திலுள்ள) மஸ்தகத்தையுடைய
யானைகள், மதங்கள் ஏழின்உம் - எழுவகைமதங்களாலும், மதித்து - கொழுத்து,
மெய் - (கறுத்த) உடம்பினால், வனப்பு உறு கொண்டல் மானுவன - அழகு மிக்க
காளமேகத்தை யொத்திருப்பன; கதித்து - கோபித்து, நெடு தை வீசி - நீண்ட
துதிக்கையை மேல்வீசி, உடு கணத்தை - நக்ஷத்திரக்கூட்டத்தை, முகந்த வாருவன -
மிகுதியாகமொண்டு எடுப்பன; உரகன் - (கீழிருந்து பூமியைத்  தாங்குகிற)
ஆதிசேஷனது, பணா மணிகள் - படங்களிலுள்ள மாணிக்கங்களை, மிதித்து -
(கால்வலிமைமிகுதியால்) துவைத்து, வெகுண்டு- கோபங்கொண்டு, விழித்து -
(அப்கோபந்தோன்றக்) கண்விழித்து, உலாவுவன - சஞ்சரிப்பன; கொதித்து -
மனம்வெதும்பி, இரு கண்களாலும்-, எரி கொளுத்தின - தீயைச் சொரிந்தன;

     மதங்களேழ் - இரண்டுகண்கள், இரண்டுகன்னங்கள், இரண்டு
துதிக்கைத்துளைகள், ஆண்குறி என்பவற்றினின்று பாய்கின்றவை.
துதிக்கைநீண்டிருந்தால் உத்தம கஜலக்ஷண மாதலால், 'நெடுங்கை' என்றார்.
உடுகணம், பணாமணி, கும்பவாரணம் - வடமொழித் தொடர்கள். கோபமிகுதியால்
கண் மிகச்சிவந்து கொடுமையாகத் தோன்றுதலை 'கொதித் திருகண்களாலு
மெரிகொளுத்தின' என்றது. கும்பம் -குடம்; அதுபோன்ற வடிவமுடைய
மஸ்தகத்துக்கு உவமவாகுபெயர். 'மிதித் துரகன்பணாமணிகள் விழுத்தி' என்ற
பாடம்சிறந்தது; அதற்கு - தாம் மிதித்தால் ஆதிசேஷன்படத்து மாணிக்கங்களைக்
கீழ்விழச்செய்த என்ற பொருள். முதலடி உவமையணியும், மற்றையவை -
உயர்வுநவிற்சியணியுமாம் பி-ம் : பணா  முடிவுகள் விதிர்த்து.            (63)

19.- தேர்வருணனை.

வரைக்குலமென்றுகூறிடினவ்வரைக்குவயங்குநேமியில
நிரைக்குநெடும்பதாகையிலநிறத்தகொடிஞ்சியாதியில
உரைப்படவுந்துபாகரிலருகைத்ததுரங்கராசியில
விரைத்துவிரைந்துலாவலிலவெனச்செருமண்டுதேர்பலவே.

     (இ-ள்.) வரை குலம் என்று- மலைகளின்கூட்டமென்று, கூறிடின் - (உவமை)
சொல்லலாமென்றால், அ வரைக்கு - அம்மலைகளுக்கு, வயங்கும் நேமி இல -
விளங்குகிற சக்கரங்கள் இல்லை; நிரைக்கும் -  வரிசையாகநாட்டப்பட்ட, நெடு
பதாகை - நீண்ட துவசங்கள், இல -இல்லை; நிறத்த-நல்லநிறமுள்ள
வையாய்விளங்குகிற, கொடிஞ்சிஆதி - கொடிஞ்சிமுதலிய உறுப்புகள்,
இல - இல்லை;