(இ-ள்.) செரு களம் எங்குஉம் -அப்போர்களத்தில் எவ்விடத்தும், ஆடவர்- காலாள்வீரர்கள்,- தொந்தம் ஆக - இவ்விரண்டுபேராக, அமர் விளைத்தனர் - (ஒருவரோடொருவர்) போரைச் செய்தார்கள் ; தம் தம் வீரமுடன் - தங்கள் தங்கள்பராக்கிரமத்தோடு, மிகைத்தனர் - செருக்கினார்கள்; சிங்க சாபம் என - சிங்கக்குட்டிகள்போல, உளைத்தனர்- கர்ச்சித்தார்கள்; சென்று மேல் முடுகி - எதிர்சென்று மேல்நெருங்கி உறுக்கினர்- அதட்டினார்கள்; கொண்டவார் சிலைகள் - (தாம்) ஏந்திய நீண்ட விற்களை, வளைத்தனர் - வளைத்தார்கள்; வடித்த சரங்களால்-வடிக்கப்பட்ட அம்புகளால், வென்றி கூரும் வகை - வெற்றிமிகும்படி, உழுது -(பகைவருடம்பைக்) கிளறி, திளைத்தனர் - மகிழந்தார்கள்; தொந்தம், சிங்கசாபம் - த்வந்த்வம், ஸிம்ஹஸாபம் என்னும் வடசொற்களின் திரிபுகள். சாபம் [சாபம்] என்று குட்டிக்குப் பெயர்; இதனை, மேல் பதினெட்டாம்போர்ச்சருக்கத்தில் "காண்டரிய கேசரிவெஞ்சாப மன்னார்" என்னுமிடத்துங் காண்க. சாபம் என்பது - இளமைப்பெயராவதொரு வடசொல் என்று அறியாதார், சாபச்சிங்கமென மொழிமாற்றி, வில்லையுடைய சிங்கம்போல வென்று நலிந்துபொருள்கொண்டு இடர்ப்படுவர். உழுதலென்ற வினைக்கு ஏற்ப, சரத்தைக் கலப்பையாகவும், பகைவருடலைக் கழனியாகவும், போரைப் பயிராகவும், வெற்றியை விளைவாகவும் கொள்க. திளைத்தல் - இடைவிடாது பயிலுதலுமாம். பி-ம்: திளைத்தனர் வென்றி கூருவகை. (66) 22.- யுதிட்டிரனுக்கும் துரோணனுக்கும் கைகலந்த போர். மிகைத்தனர்தும்பைமாலைமுடிமிலைச்சினரின்றுசாலுமென நகைத்தனர்தங்கடேருமெதிர்நடத்தினர்சண்டவேகமொடு பகைத்தனரங்கம்யாவுமிசைபடப்படநஞ்சுகால்பகழி யுகைத்தனரன்றையாடமரிலுதிட்டிரனுந்துரோணனுமே. |
(இ-ள்.) அன்றை ஆடு அமரில்- அன்றைத்தினத்தில் நடந்த போரில், உதிட்டிரனும் துரோணனும்-, மிகைத்தனர்-செருக்கினார்கள்; தும்பைமாலை- (போருக்குஉரிய) தும்பைப்பூமாலையை, முடி மிலைச்சினர் - (தமது) சிரசில் சூடினார்கள்; இன்று சாலும் என -இன்றைக்கு (இப்போர்) தகுமென்று, நகைத்தனர் -சிரித்தார்கள்: தங்கள் தேர்உம்- தம் தம் தேரையும், எதிர் நடத்தினர் -(ஒருவருக்கொருவர்) எதிரிற்செலுத்தினார்கள்; சண்ட வேகமொடு - கொடியஉக்கிரத்துடனே, பகைத்தனர் - பகைமை பாராட்டினார்கள்; அங்கம் யாஉம்-உடம்பினுறுப்புக்கள் எல்லாவற்றிலும், மிசை பட பட - மேலே மிகுதியாய் ஊன்றும்படி, நஞ்சு கால் பகழி - விஷத்தைச் சொரிகிற அம்புகளை, உகைத்தனர் - செலுத்தினார்கள்; (எ -று.) சண்டைவேகமொடு தேரை எதிர் நடத்தினர் என இயைப்பினும் அமையும். படப்பட- அடுக்கு, மிகுதி. பகையை யழித்தற்காக அம்பு நுனியில் விஷந்தடவுதலும் உண்டு; தவறாமற்கொல்லுங் கொடுமையால் விஷத்தன்மையை வெளியிடும் அம்பு என்றலும் |