(இ-ள்.) (பின்னும்), இரு தளத்துஉம் -இரண்டுசேனைகளிலும், நின்ற - (இறந்தவர்போக மிச்சமாய்) நின்ற, மன்னர் - அரசர்கள், இருவர் ஆக - இவ்விரண்டுபேராக, இகலி - (தம்மில்) மாறுபட்டு, ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்துநின்று - ஒருசேனையரசர்போல நெருங்கிநின்று, உடற்றினார்- போர்செய்தார்கள்; இங்ஙன் - இவ்வாறு, பொரு தளத்தில் - போர்க்களத்திலே, நின்று - நெருங்கிநின்று,போர் புரிந்த பொழுதில் - யுத்தஞ்செய்தசமயத்தில், மருத்து வீமன் மைந்தன் -வாயுகுமாரனான வீமசேனனது புத்திரனான கடோத்கசன், வரு தளத்தொடு -கூடவருகிற சேனையுடனே, உதவினான் - (பாண்டவசேனைக்குத்) துணையானான்;(எ - று.) 37.- கடோற்கசன் அபிமன் மற்றும் காவன்மன்னர் துரோணன்மேல் நடக்க, பகைச்சேனை பறத்தல். நிருதகன்னிமகனுநேமிநீலவண்ணன்மருகனுங் கருகிநெஞ்சழன்றுவந்தகாவன்மன்னர்யாவருஞ் சுருதியன்னதூமொழித்துரோணன்மேனடக்கவே பரிதிகண்டபனியெனப்பகைத்தளம்பறந்ததே. |
(இ-ள்.) நிருதகன்னி மகன்உம்- இராக்கதகன்னிகையான இடிம்பியின் புத்திரனான கடோற்கசனும், நேமி நீல வண்ணன் மருகன்உம்- சக்கராயுதத்தையுடைய நீலநிறமுள்ள கண்ணபிரானது மருமகனான அபிமந்யுவும், (மற்றும்), நெஞ்சு கருகி - மனங்கோபித்து, அழன்று வந்த - சீறிக்கொண்டுவந்த, காவல் மன்னர்யாவர்உம்- (இராச்சியத்தைக்) காக்குந்தன்மையுள்ள அரசர்களெல்லோரும், சுருதி அன்ன தூ மொழி- வேதவாக்கியத்தை யொத்த சுத்தமானசொற்களையுடைய, துரோணண்மேல்-, நடக்க- எதிர்த்துசெல்ல, பகை தளம்- பகைவரான துரியோதினாதியரது சேனை, பரிதி கண்ட பனி என - சூரியமண்டலத்தைக்கண்ட பனி போல, பறந்தது - (இருந்தவிடந்தெரியாதபடி உடனே) விரைந்து ஒடிற்று; ( எ -று.) மருகன் -மருமகன் : இங்கே, உடன்பிறந்தவள்மகன்: கண்ணனது தங்கை சுபத்திரைமகன். உண்மையானவும், வீண்படாதனவும், யாவராலும் சிறந்தபிரமாணமென்று அங்கீகரிக்கப்படுவனவும், இலக்கணமமைந்தனவும், பொருள் நிரம்பினவு மான நிறைமொழி யென்பார், 'சுருதி யன்ன தூமொழி' என்றார். (82) 38.- புறங்கொடுத்தமன்னர்யாவரும் துரியோதனனைச் சார்தல். பறந்துபோய்நெடும்பணிப்பதாகையானொடெய்தினார் பிறந்துபோய்வளர்ந்தபின்பிறப்புணர்ந்தபெருமனுந் துறந்துபோயவிதுரன்முன்றுணித்தவில்லெனத்துணிந் திறந்துபோனமன்னரன்றிநின்றமன்னரெவருமே. |
(இ -ள்.) துறந்து- (பாண்டவர் துரியோதனாதியர் என்னும் இருதிறத்தார்க்கும் உதவிசெய்தலை) விட்டு, போய - (தீர்த்தயாத்திரை) சென்ற, விதுரன்-, முன் துணித்த- முன்னே ( துரியோதனசபையில்) ஒடித்தெறிந்த, வில் என - வில்போல, துணிந்து- |