பக்கம் எண் :

6பாரதம்துரோண பருவம்

அங்கு அளகையென்னுந் திவ்வியநகரியை அமைத்து அதில் புஷ்பகவிமாநம்
முதலிய பெருவிபவங்களுடன் வாழ்ந்து சிவபிரானுக்கு நண்ப னெனப்படுஞ்
சிறப்புள்ளவ னாதலால், 'மாதனத்து அளகையாளும் மன்' எனப்பட்டான். மன் -
பெருமை: அதனையுடைய மன்னவனுக்குப் பண்பாகுபெயர். பாகசாதனக்கடவுள் -
இந்திரனாகிய தேவ னென இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பாகசாஸநன் -
பாகனென்னும் அசுரனைக் கொன்றவனென்று காரணப்பொருள்; (பாகன் -
விருத்திராசுரனுடன் பிறந்தவன்.) தரணி - (பொருள்களைத்) தரிப்பது எனக்
காரணக்குறி. சேதநம் - சேதித்தல்; இனி, 'சேதனப்படைஞர்' என்பதற்கு-
அறிவுள்ளசேனைவீரரென்று உரைத்தல் சிறிதும் சிறவாது.           (4)

5.-வீடுமனில்லாத துரியோதனசேனை பொலிவிழந்திருத்தல்.   

மதியிலாவிசும்புஞ்செவ்விமணமிலாமலருந்தெண்ணீர்
நதியிலாநாடுஞ்செம்பொனரம்பிலாநாதயாழும்
நிதியிலாவாழ்வுந்தக்கநினைவிலாநெஞ்சும்வேத
விதியிலாமகமும்போலும்வீடுமனிலாதசேனை.

     (இ-ள்.) (அப்பொழுது), வீடுமன் இலாதசேனை-பீஷ்மனில்லாத
அக்கௌரவசேனை,-மதி இலா விசும்புஉம் - சந்திரனில்லாத ஆகாயத்தையும்,
செவ்வி மணம் இலா மலர்உம் - நல்ல வாசனையில்லாத பூவையும், தெள்நீர் நதி
இலா நாடுஉம் - தெளிவானநீரையுடைய ஆறு இல்லாத தேசத்தையும், செம் பொன்
நரம்பு இலா - சிவந்தபொன்போ லருமையான நரம்பின் அமைதி இல்லாத, நாதம்
யாழ்உம் - ஒலிக்கு இடமான வீணையையும், நிதி இலா வாழ்வுஉம் -
செல்லவமில்லாத குடிவாழ்க்கையையும், தக்க நினைவு இலா நெஞ்சுஉம் - தகுந்த
நல்லெண்ண மில்லாத மனத்தையும், வேதம் விதி இலா மகம்உம் -
வேதங்களிற்கூறிய விதிமுறையொழுக்க மில்லாதயாகத்தையும், போலும்- ஒக்கும் :
(எ-று.)-பொலிவிழந்திருக்கும் என்றபடி. 'போன்ற' என்ற பாடத்துக்கு-போன்றது'
என்பதன் விகார மென்னலாம்.

     'நட்சத்திரமில்லாத வானம்போலவும், காற்றில்லாத ஆகாயம் போலவும்,
பயிரில்லாத நிலம்போலவும், திருத்தமில்லாத சொற்போலவும், பலிசக்கர
வர்த்தியில்லாதஅசுரசேனைபோலவும், கணவனில்லாத மனைவிபோலவும்,
நீரில்லாத நதிபோலவும்இருந்தது, வீடுமனில்லாத குருசேனை' என்று
வியாசபாரதத்திற்கூறியுள்ளது.உபமானம் உபமேயம் உவமவுருபு என்ற மூன்றும்
விரிந்து நிற்கப் பொதுத்தன்மைமாத்திரம் தொக்கிருத்தலால், பொதுத்தன்மைத்
தொகையுவமையணி
யாம்.தெளிவானநீரின்வளமில்லாத நதி இருந்தும் பயனில்லை
யாதலால்,'தெண்ணீர்நதியிலாநாடு' எனப்பட்டது. மற்றையிசைக் கருவிகளினும்
வீணையில்ஸ்வரத்துக்குரிய அக்ஷரங்களின் உச்சாரணை நன்கு அமைதலாலும்.
செவிக்கு இனியஓசையுடைமையாலும், 'நாதயாழ்' எனப்பட்டது. பி-ம்:-
தக்கநரம்பிலா.மிக்கநினைவிலா.                                    (5)