6.-இரண்டுபக்கத்துச் சேனாபதிகளும் தம்சேனையை அணிவகுத்தல். பகடுதேர்புரவிகாலாள்பலவகைப்பட்டசேனை சகடமாவியூகமாகவகுத்தனன்றனுநூல்வல்லான் திகடருகவுஞ்சயூகமாகவேதிட்டத்துய்மன் துகடருசாதுரங்கம்யாவையுந்தொகுத்துநின்றான். |
(இ - ள்.) (அந்நாளில்), பகடு-யானைகளும், தேர் - தேர்களும், புரவி - குதிரைகளும், கால் ஆள் - காலாள்களும் (என்னும் சதுரங்கங்களும்), பலவகை பட்ட-பலபகுப்பாக அமையப்பெற்ற, சேனை - கௌரவசேனையை, தனு நூல் வல்லான் - வில்வித்தையில் வல்லவனான துரோணாசாரியன், மா சகடம் வியூகம் ஆக - பெரிய சகட மென்னும் வியூகமாக, வகுத்தனன் - அணிவகுத்தான்; துகள் தரு-(வன்மையாக நடத்தலால்) புழுதியை மேலெழுப்புகிற, சாதுரங்கம் யாவைஉம்- (பாண்டவரது) நால்வகைச்சேனைகளெல்லாவற்றையும், திட்டத்துய்மன் - திருஷ்டத்யும்நன், திகழ்தரு - விளங்குகிற, கவுஞ்சயூகம் ஆகஏ - கிரௌஞ்சமென்னும் வியூகமாக, தொகுத்து நின்றான் - திரண்டு அமையச்செய்து நின்றான்; (எ - று.) காலாள் - வாகனமின்றிக் கால்களால் நடக்கும் ஆண்மகன்; பதாதி. தநுநூலாவது - வில்முதலிய ஆயுதங்களிற் பயிலும்வகைகளையும், பகைவெல்லுதற்குரிய மந்திரம்முதலிய பிரயோகங்களையும் அறிவிக்கிற ஆயுதசாஸ்திரம். திகழ் + தரு = திகடரு ; இப்புணர்ச்சி "பதினைந்தோடெண்ணிரண்டாய்" என்ற வீரசோழிய விலக்கண விதிப்படி அமைந்தது. இனி, 'திகழ்' என்பது ழகரளகரப்போலியால் திகள் என நிற்க, அக் குறில்செறியாத ளகரம் அல்வழியில் வந்த தகரம் திரிந்தபின் கெட்டதெனினும் அமையும் ; இச்சந்தியை மரூஉமொழியில் அடக்குதல், ஒருசாரார்கொள்கை. சாதுரங்கம் - வடமொழிப்புணர்ச்சி. யாவையும், யாவினா - எஞ்சாமை குறிக்கும் ; உம்மை - முற்றுப்பொருளது. பி-ம்:-கரிஞ்சயூகம். (6) 7.-இருசேனாபதியரும் மன்னவர் சூழநின்று இடைவிடாது அம்புபொழிதல். படையுடையிருவர்சேனாபதிகளும்பனிவெண்டிங்கட் குடையுடைநிருபர்சூழவரூதினிக்குழாங்கள்சூழ நடையுடைத்தடந்தேருந்திநாகரும்பனிக்கும்வண்ணந் தொடையுடைவாளிமாரிசோனையம்புயலிற்பெய்தார். |
(இ - ள்.) படை உடை - ஆயுதங்களையுடைய, இருவர் - (கௌரவர் பாண்டவர் என்னும்) இருதிறத்தாரது. சேனாபதிகள்உம் - சேனைத்தலைவர்களான துரோணனும் திட்டத்துய்மனும்,- பனி - குளிர்ச்சியான, வெள் - வெண்ணிறமுடைய, திங்கள் - பூர்ணசந்திரன் போன்ற, குடை உடை - (கொற்றக்) குடையையுடைய, நிருபர்- (தத்தம்பக்கத்து) அரசர்கள், சூழ - சுற்றிலும்வரவும்,- வரூதினி - சேனைகளின், குழாங்கள் - கூட்டங்கள், சூழ - சூழ்ந்து வரவும்,- நடை உடை- (விரைந்த) நடையையுடையை, தட - பெரிய, தேர் - (தம்தம்) தேரை, உந்தி - செலுத்திவந்து, நாகர்உம் பனிக்கும் வண்ணம் - (பார்த்த) தேவர்களும் அஞ்சிநடுங்கும்படி, |