பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்73

பிரான் தன்மார்பில் ஏற்றுக்கொண்டன னென்பதாம். அயர்வு - மனக்கவற்சி
யென்றபொருளதா தலை, "உலகுடன் பெறினுங் கொள்ளலரயர்விலர்" என்ற
புறநானூற்றிலுங் காண்க. சக்ரதரன், உக்ரம் - வடசொற்கள் திரியாது நின்றன:
திரித்துப் பாடமோதினால், சந்தவின்பம் கெடும். பி-ம்: அளவில்     (108)

64.- பகதத்தன்வேல் ஸ்ரீகிருஷ்ணன்மார்பில் மாலையாய்விளங்கத்
தேவர்கள்புகழ்தல்.

பருமித்தகளிறுவிடுபகதத்தனெறியுமுதுபகைசெற்றுவரு
                              கொடியவேன்,
மருமத்தினிடைமுழுகுபொழுதத்திலதுபுதியமணிவற்க
                          மிகுதொடையலாய்,
நிருமித்தபடிதனது புயவெற்பின்மிசையொளிரநிகரற்ற
                           கருணை வடிவைக்கருமத்தின்முதலையிமையவர்சித்தமொடுதொழுதுகரையற்ற
                           புகழுரைசெய்தார்.

     (இ -ள்.) பருமித்த- பருமையுடைய, களிறு - யானையை, விடு -
செலுத்துகிற,பகதத்தன் -, எறியும்- வீசிய, முது பகை செற்று வருகொடிய வேல் -
பழமையானபகைவர்களை அழித்துவருகிற கொடுமையுடைய அந்தவேலாயுதம்,
மருமத்தினிடை முழுகுபொழுதத்தில்- (கண்ணபிரானது) மார்பினிடத்திலே
அழுந்தியபொழுதில், அது-, நிருமித்தபடி- (அப்பெருமான்) நியமித்தபடி, புதிய
மணிவற்கம் மிகு தொடையல் ஆய் - புதுமையான இரத்தினங்கள் மிக்கதொரு
ஆரவடிவமாய், தனது புயம் வெற்பின் மிசைஒளிர - அவ்வெம்பெருமானது
மலைகள் போன்ற தோள்களின்மேல் விளங்க, (அவ்வற்புதத்தைக் கண்டு),
இமையவர்- தேவர்கள், நிகர் அற்ற கருணை வடிவை - ஒப்பில்லாத திருவருளின்
மூர்த்தியானவனும், கருமத்தின் முதலை- (அவரவர்செய்த) வினைக்களுக்கெல்லாம்
காரணமானவனும் ஆகிய கண்ணனை, சித்தமொடு - மனக்கருத்துடனே, தொழுது-
வணங்கி. கரை அற்ற புகழ் - அளவில்லாத (அவனது) கீர்த்திகளை,
உரைசெய்தார் -எடுத்துக்கூறித் துதித்தார்கள்;

     திருமால் தந்த வேலாதலால், அது அப்பெருமானது திருவவதாரமான
கண்ணபிரானை ஒன்றும் ஊறு செய்யமாட்டாது அவனது சங்கல்பத்தின்படி ஓர்
ரத்தினஹாரவடிவமாக அவன்மார்பில் விளங்கிற்றுஎன்க. இங்ஙனம் அன்பனான
அருச்சுனன்பக்கல்வரம்பு கடந்து கருணைசெய்ததுபற்றி, 'கருணை வடிவு' என்றார்.
பருமித்த - கல்லணையையுடைய எனினுமாம். இதுவரையிலும் எப்போரிலும்
அவ்வேல் எறியப்பட்டாரைக் கொல்லாது தவறியதில்லையென்ற தன்மையை,
இப்பாட்டில் 'முதுபகைசெற்றுவரு கொடியவேல்' என்றதனாலும், கீழ்ப்பாட்டில் '
தழலுக்ரமுடையதொருவேல் என்றதனாலும் விளக்கினார். திருமால் சகல
சேதநாசேதநங்களின் உள்ளும்புறம்பும் இருந்துகொண்டு அவற்றைக்கொண்டு
தொழில்செய்தலால், 'கருமத்தின்முதல்' என்றார்: இனி, ஊழ்வினைக்கும் முதற்
காரணமானவனென்றும்; கேள்வி தவம் முதலிய சற்கருமங்களுக்கெல்லாம்
தலைவனென்றும்; கருமத்திற்கேற்ற பயனையளிப்பவனென்றும் கூறலாம்.    (109)