வீசாநின்றமாருதம்போன்மேல்வந்தடுத்தவீமனுடன் கூசாதெதிர்ந்துவெம்பகழிகோத்தார்விசும்பைத்தூர்த்தாரே. |
(இ-ள்.) (மற்றொருபக்கத்தில்), ஆசாரியன்உம்- துரோணனும், திருமகன்உம்- (அவனது) சிறந்தகுமாரனான அசுவத்தாமனும், அடல்வேல் அங்கர் பெருமான்உம்- வலிமையையுடைய வேலாயுதத்தையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான கர்ணனும், தூசுஆர் - சீலையிற்பொருந்தின, உரகம் - பாம்பின் வடிவத்தையுடைய, நெடுந்தேர்- பெரிய தேரையுடைய, துரியோதனனும்-, தம்பியர்உம் - (அவன்) தம்பிமார் பலரும்,- விசாநின்ற மாருதம் போல் மேல் வந்த அடுத்த வீமனுடன்- வீசுகிற பெருங்காற்றுப்போலத் தம்மேல் வந்து நெருங்கிய வீமசேனனுடனே, கூசாதுஎதிர்ந்து - கூச்சமில்லாமல் எதிரிட்டு, வெம் பகழி கோத்தார் - கொடிய அம்புகளைத் தொடுத்து, விசும்பை தூர்த்தார்- (அவற்றால்) ஆகாயத்தை நிறைத்தார்கள்; ( எ - று.) இவர்களுக்கு வீமனை யெதிர்க்கவல்ல ஆற்றல் இன்மைதோன்ற 'கூசாது எதிர்ந்து' என்றார்: 'விசும்பைத் தூர்த்தார்' என்றதனால், அவர் எய்த அம்புகள் வீமனை ஒன்றுஞ் செய்யமாட்டாமை தொனிக்கும்; அத்தன்மையை அடுத்த கவியில் விளங்கக் காண்க. சிவபிரானது அருளாற் பிறந்த புத்திரனாதலால், அசுவத்தாமன் 'திருமகன்' எனப்பட்டான். இங்கே வேலைக்கூறி, மற்றையபடைகளையெல்லாம் உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்; இனி, பகையைத் தவறாது அழிக்கவல்லதொரு வேற்படையைக் கர்ணன் இந்திரனிடம் பெற்றுள்ளதனால், 'அடல்வே லங்கர்பெருமான்' என்றாரெனினுமாம். (119) 75.- பகைவரெய்த அம்புகள் வீமன்மேற்படாமல் சிதறினமை. கெடுமோகெருடனுரகர்க்குக்கிரிவெஞ்சரபந்தனையரிகள் அடுமோசக்ரபாணியுடனமருந்துவரோவசுரேசர் நெடுமேருவின்முக்குவடொடித்தானேயப்புதல்வன்பேருடலிற் படுமோதொடுத்தபகழிபருப்பதஞ்சேர்மழைபோற்பாறினவே. |
(இ-ள்.) உரகர்க்கு - சர்ப்பராசர்க்கு, கெருடன்-, கெடும்ஓ- அழிவனோ? கிரிவெம் சரபந்தனை - மலையிலுள்ள கொடிய சரபத்தை, அரிகன்- சிங்கங்கள், அடும்ஓ - கொல்லமாட்டுமோ? அசுர ஈசர் - அசுரத்தலைவர்கள் , சக்ரபாணியுடன் - சக்கராயுதத்தையேந்திய திருக்கையையுடைய திருமாலுடனே, அமர் உந்துவர்ஓ- போரை முடிக்க வல்லரோ? (அவைபோல),- நெடு- உயர்ந்த, மேருவின் - மேருமலையின் , மு குவடு- மூன்று சிகரங்களை, ஒடித்தான்- ஒடித்தவனான வாயுவின், நேயம் புதல்வன் - அன்புள்ள புத்திரனான வீமனது, பேர் உடலில்- பெரிய உடம்பில், தொடுத்த பகழி - (பகைவர்) ஏவிய அம்புகள், படும்ஓ - தைக்கமாட்டுமோ? (மாட்டாமல்), பருப்பதம் சேர் மழை போல்- கல்மலைமேல் விழுந்த மழைத்துளிகள்போல, பாறின- (உள்ளிறங்குதலின்றி) வெளிச்சிதறின; (எ- று.) வீமனைப் பகைவர் வெல்லமாட்டாமைக்குத் திருஷ்டாந்தங் காட்டியதனால், எடுத்துக்காட்டுவமையணி. சரபம் - எட்டுக்கால்களை |