மகிபாலரும் பகதத்தனும்...மைந்தரும் களத்தூடுவிழவும், தனுவேதியும் ஒடவும் வென்றோர்களும் என்க. தகதத்த - ஒலிக்குறிப்பு. பொருளை யிழந்தாரை ' தத்தஞ் செய்துவிட்டார்' என்னும் வழக்குப்பற்றி, 'சுகதத்தம் உற' என்பதற்கு - இவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது: இனி, இன்பத்தை அளித்தருளுதலுண்டாக எனினும் அமையும்; எதிரி இரங்கி உயிரோடுவிட்டு அபயப் பிரதானஞ் செய்தருளும்படி என்று கருத்து; பகைவர்க்கு வெற்றியின்பத்தைக் கொடுத்தல் பொருந்த என்றலுமொன்று. தனுவேதியும் என்பதற்கு- வில்லாயுதத்தையுடைய விசயனும் என்றும், 'சுகதத்தமுறவோடி' என்று பாடங்கொண்டு, தத்தம் - தம்தமக்கு, சுகம்உற-சுகமுண்டாக, ஓடி என்றும் கூறினாரு முளர். (137) 93.- சந்திராஸ்தமனமும், மறுநாட் சூரியோதயமும். நிலையான வயவீர ருந்தேவ ராய்நின்ற நிலைகண்டுவெண் கலையானி ரம்புஞ்செ ழுந்திங்க ளேகக்க டைக்கங்குல்வா யலையாழி முழுநீல வுறைநின்று மாணிக்க மணியாழிபோ லுலையாத வொளிகொண்ட கதிராயி ரத்தோனு முதயஞ்செய்தான். |
(இ-ள்.) நிலைஆன வய வீரர்உம்- (போரிற்பின்னிடாமல்) நிலைபெற்ற வலிமையையுடைய வீரர்கள் பலரும், தேவர் ஆய்நின்ற- இறந்து தேவர்களாகி நின்ற, நிலை- நிலைமையை, கண்டு - பார்த்து, வெள் கலையால் நிரம்பும் செழு திங்கள்- வெண்ணிறமான அமிருத கிரணங்களால் நிறைந்துள்ள செழிப்பான சந்திரன், ஏக - அப்பாற் செல்ல [அஸ்தமிக்க],- கடை கங்குல் வாய் - அவ்விரவின்முடிவில், உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோன்உம் - அழியாதபிரகாசத்தைக் கொண்ட ஆயிரங்கிரணங்களையுடைய சூரியனும், அலை ஆழி முழுநீலம் உறைநின்று- அலைகளையுடைய கருங்கடலாகிய பெரிய நீலநிறமுள்ளஉறையினின்று, மாணிக்கம் மணி ஆழி போல்- மாணிக்க ரத்தினமயமானசக்கரம்போல, உதயம் செய்தான்- உதித்தலைச்செய்தான் [உதித்தான்]; ( எ -று.) சந்திரன் தேவர்களுக்குத் தன்கலைகளாகிய அமிருதத்தை உணவாகக் கொடுக்குந்தன்மைய னாதலால், போரிலிறந்து தேவசரீரம் பெற்று வீரசுவர்க்கம்புக்கவர்க்கு விருந்திடும்பொருட்டுச் சென்றானென்று சந்திராஸ்தமநத்தை வருணித்தார்; பயன்தற்குறிப்பேற்றவணி. ஆழி- மோதிரமென்பாருமுளர். உறை - இங்கே, ஆபரணம் வைக்கும்கூடு. மாணிக்கம்- வடசொல்லின் திரிபு; செந்நிறமுள்ள இரத்தினம். (கருமாணிக்கம் என நூல்களில் வருவது, இல்பொருளுவமை.) பின் இரண்டடி - உவமையணி. கதிர் ஆயிரத்தோன் - ஸஹஸ்ரகிரணன். 'உறையின்று' என்ற பாடத்துக்கு- உறையில்லாமல் என்க. பி -ம்: அணியாழிபோல் , மணியாடி போல். (138) பன்னிரண்டாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. |