மூவகையானை- கிரிசரம், நதிசரம், வனசரம் என்பன: "கிரிசரம் வனசரம் நதிசர மென்றிவை, நிலைபெறு நிலமென நிறுத்திசினோரே" என்ற பன்னிருபாட்டியலாலும், "கிரிசரம் வனசரம் நதிசரமடுத்துப், பெறுமே யானை பிறந்த நிலப்பெயர்" என்ற பிங்கலந்தை திவாகரங்களாலும் இலக்கண விளக்கவுரையாலும் அறிக; இவற்றுள், கிரிசரம் - மலையிற்பிறந்தது; நதிசரம்- யாற்றுச் சார்பிற் பிறந்தது; வனச்சரம்-காட்டிற்பிறந்தது. இனி, வேறும் யானையின் மூன்று வகை- பத்ரம், மந்த்ரம், ம்ருகம் என்பன: "இவற்றின் இலக்கணம் வருமாறு:- தேனின்நிறம் போன்றநிறமுள்ள தந்தமும் மிக்க வலிமையும் ஒத்தஅவயமும் வட்டமானவடிவமும் அழகியமுகமும் அவயவச்சிறப்பு முடையது, பத்ரம். பருத்தவயிறும் சிங்கநோக்கும் பருத்ததோலுள்ள கழுத்து துதிக்கைகளும் நடுத்தரமான அவயமும் நீண்ட உடம்புமுடையது, மந்த்ரம். பருத்ததல்லாத கழுத்தும் பருத்த காது துதிக்கைகளும் பருத்தகண்களும் குறுகியஉதடு குறிகளும் குள்ள வுடம்பு முடையது, ம்ருகம். பத்ரத்துக்கு உயரம் ஏழு முழமும், நீளம் எட்டு முழமும், வயிற்றின் சுற்றளவு பத்து முழமுமாம்; மந்தரத்துக்கு இவ்வளவினும் ஒவ்வொரு முழம் குறைவும், ம்ருகத்துக்கு அதனளவினும் ஒவ்வொருமுழம் குறைவு மாகும்: பத்ரத்துக்கும் மந்த்ரத்துக்கும் நீளம் ஓரள வென்பதும் உண்டு. பத்ரத்தின் மதநீர் பசுமையாகவும், மந்த்ரத்தின் மதநீர் மஞ்சளாகவும், ம்ருகத்தின் மதநீர் கருமையாகவும் இருக்கும். இனி, 'எண்இருமா' என்ற பாடத்துக்கு - "மங்காளன் சாரங்கன் கங்காநீலம் மௌவழகன் கொங்காளன் சன்ன சம்பான், குங்குமச்சோரன் கரியான் நீலன் சாரன் குலவுமள்ளான் உரஞ்சிவந்தான் நல்லான் பொல்லான், தங்குகருங்காற்செம்பான் என்று கூறும் தன்மையுள்ள பன்னிறமும்புனைந்த சாதித், துங்கமிகும் பரியிவை" என்று திருவாதவூரர்புராணத்துக் கூறிய பதினைந்துவகையும், சீவகசிந்தாமணியுரையிலும் வைஷ்ணவசம்பிரதாயத்திலும் வழங்குகிற ' நம்பிரான்' என்னும் வகையும் என்ப. ஓரிருநாலுடை யையிரு பூமி- எட்டு என்னும் எண்ணை இறுதியிலுடைய பத்தாகிய நாடுகள்; சிங்களம், சோனகம், சாவகம், சீனம் துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம், குசலம் , திரவிடம் என்பன - பதினெட்டுப் பாஷைவழங்குத் தேயங்களாம். அன்றி, 'ஓரிருநாலுடை பையிருபூமி' என்பதற்கு - எட்டோடு பெருக்கியஏழாகிய ஐம்பத்தாறு தேசங்கள் என்றும் உரைக்கலாம். கீழ்ப்படை யெழுச்சிச்சருக்கத்தில் "ஐயிரண்டெண்பூமி" என்றது இங்ஙனமே இருபொருள்படும். இனி, பதினெட்டுதீவுக ளெனினுமாம். இப் பாட்டு - எண்ணுவண்ணம்; அது - எண்பயின்றுவருவது: "எண்ணுவண்ணமெண்ணுப்பயிலும்" பி-ம்: பதாதியுடன். (144) 7.- பாண்டவசேனை மகரவியூகமாக வகுக்கப்படுதல். வருபடைதன்னைநிறுத்திவிதம்படமகரவியூகம்வகுத் தொருபகல்யூகமுமிப்பகலுக்கினியாப்பலவென்றிடவே |
|