படி ஆளும் செங்கோன்மை - பூமியை ஆளுகிற அரசாட்கிமுறையின் தன்மையையுடைய, பார்த்திவருக்கு எல்லாம் - அரசர்களிடத்தெல்லாம், என் எண்ணம் முற்றினன் என்று - எனது நினைப்பை நிறை வேற்றினனென்று சொல்லி, கொடி ஆர்மடங்கல் என - (தன்) கொடியிற் பொருந்திய சிங்கம்போல, கூத்தாடி நின்று ஆர்த்தான் - கூத்தாடிக்கொண்டு ஆரவாரித்து நின்றான். (எ - று.) (252) 162.- துச்சாதனன் ஒன்பதுதம்பிமாரோடும் இறந்தமையை வீமன் கூறிச்செருக்குதல். துன்பமுறுந்துன்னீதித்துச்சாதனன்போர்செய் தொன்பதின்மர்தம்பியரோடும்பரூர்புக்கானென் றன்புடையதம்முனடிவீழ்ந்தகங்கரித்தான் வன்புடையதாதையினுமிக்கவலியோனே. |
(இ-ள்.) வன்பு உடைய - வலிமையையுடைய, தாதையின்உம் - தன் தந்தையாகிய வாயுவைப்பார்க்கிலும், மிக்க வலியோன் - மிகுந்த வலிமையையுடையவீமன், 'துன்பம் உறும் - (பிறர்க்குத்) துன்பத்தைத் தருகிற, துன் னீதி - கெட்டநியாயங்களையுடைய, துச்சாதனன்-,போர்செய்து-,ஒன்பதின்பர் தம்பியரோடு -ஒன்பது பேர்தம்பிமாருடனே, உம்பர் ஊர்புக்கான் -தேவலோகத்தை அடைந்தான், 'என்று - என்றுசொல்லி, அன்பு உடைய தம்முன்-அன்பையுடைய தமையனாகிதருமனது, அடி வீழ்ந்து-திருவடிகளில் (வந்து) விழுந்து (நமஸ்கரித்து), அகங்கரித்தான் - செருக்குக்கொண்டுகளித்தான்; (எ - று.)-துன்னீதி - அநியாயம்: துர்நீதி யென்பதன் விகாரம்; சுநீதிஎன்பதன் எதிர்மொழி. (253) 163.-பாண்டவசேனை தருக்கியிருப்பதுகண்டும் கர்ணன் தன்சேனையோடு எதிர்க்காமல் வாளாவிருத்தல். பாண்டவர்கள்சேனைமதிகண்டபௌவமெனக் காண்டவமன்றுண்டகனல்போனனிதருக்கி மூண்டநிலைகண்டுமுதுகிடுதன்சேனையுடன் மீண்டுமெதிரூன்றாமல்வெய்யோன்மகனின்றான். |
(இ-ள்.) வெய்யோன் மகன் - வெப்பத்தையுடைய சூரியனது குமாரனான கர்ணன், பாண்டவர்கள் சேனை-, மதி கண்ட பௌவம் என - பூர்ணசந்திரனைப் பார்த்த கடல்போலவும், அன்று காண்டவம் உண்ட கனல்போல் - அந்நாளிற் காண்டவவனத்தை உணவாகக் கொண்ட அக்கினிபோலவும், நனிதருக்கி-மிகவுஞ் செருக்குக்கொண்டு, மூண்ட நிலை - மேல்வந்த விதத்தை, கண்டுஉம் - பார்த்தும், முதுகு இடு - புறங்கொடுத்துப்போகிற, தன் சேனையுடன் - தனது சேனையுடனே, மீண்டுஉம் எதிர் ஊன்றாமல் - மீளவும் எதிரே சென்று போர்செய்யாமல், நின்றான் -வாளாவிருந்தான்; (எ-று.) (254) |