பக்கம் எண் :

146பாரதம்கன்ன பருவம்

நடக்க - இரண்டு பக்கங்களிலுஞ் செல்லவும், கிளைஞர் யாவர்உம்-பந்துக்கள்
எல்லாரும், நேமி அம் கிரி என - அழகிய சக்கரவாளமலைபோல, சூழ -
சுற்றிலும்வரவும், விளையும் வெம் சினம் - மேன்மேற்பொங்குகிற கொடிய
கோபத்தையுடைய, வீமன்-, முன் போதரா - முன்னே செல்லவும், வளை நெடு
சிலை - வளைந்த நீண்ட வில், கணை மழை பொழிந்திட - அம்பு  மழையைச்
சொரியவும், வந்தான்-;

     இதுமுதல் மூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும்
மாச்சீர்களும், மற்ற மூன்றும் விளச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள்.     (282)

192.-கர்ணனும் அசுவத்தாமாமுதலோர்சூழ எதிர்செல்லுதல்.

கிரிசன்மைந்தனுங்கிருபனுகிங்கிருதவன்மாவும்
வரிபொலங்கழற்சகுனியுமுதலியமறவோ
ரெரியும்வெங்கனற்கண்ணினரெயிலெனச்சூழத்
தெரியும்வாளிவன்சினையுடைக்கன்னனுஞ்சென்றான்.

     (இ-ள்.) கிரிசன்மைந்தன்உம் - சிவகுமாரனான அசுவத்தாமனும், கிருபனும்-,
கிருதவன்மாவும்-, வரி பொலம்கழல் - கட்டப்பட்ட பொன்னாலாகிய
வீரக்கழலையுடைய, சகுனியும்-, முதலிய-, மறவோர்-, வீரர்கள், எரியும் வெம் கனல்
- எரிகின்ற கொடிய நெருப்புப்போலக் கோபத்தாற் சிவந்த, கண்ணினர் -
கண்களையுடையவர்களாய், எயில் என - மதில்போல,  சூழ - சுற்றிலும் வரும்படி,
வாளிதெரியும் - அம்புகளை ஆராய்ந்து தொடுக்கின்ற, வல்சிலை உடை - வலிய
வில்லையுடைய, கன்னனும்,- சென்றான் - (எதிரிற்) போனான்: (எ - று.)-கண்ணினர்
- குறிப்பு முற்றெச்சம், கிரிஸன் என்பது போல், கிரிஸன் என்றும் வடசொல்உண்டு.
                                                              (283)

193.-ஏழுகவிகள் - அருச்சுனனும் கர்ணனும் மிகக்கடுமை
யாகப் பொருதமை கூறும்.

மல்வ ளைத்ததோள் வலியர்கள் வலனுறத் தத்தம்
வில்வ ளைத்தனர் விசையுடன் சிலீமுகத் திகிரிக்
கல்வ ளைத்தபார் தனக்கிடு காவணம் போலச்
சொல்வ ளைத்திலர் தொடுத்தனர் தும்பையந் தொடையார்.

     (இ-ள்.) தும்பை அம் தொடையார்-அழகிய தும்பைப்பூ
மாலையையுடையவர்களாகிய, மல் வளைத்த தோள் வலியர்கள் -மற்போரை மிகப்
பயின்றதோள்களின் வலிமையையுடைய அருச்சுனனும் கர்ணனும்,-வலன் உற -
பலம்பொருந்த, தத்தம் வில் வளைத்தனர் - தந்தமது வில்லை வளைத்து, சொல்
வளைத்திலர் - சொல்லொன்றுஞ் சொல்லாமல், திகிரி கல்வளைத்த-சக்கரவாள
கிரியாற்சூழப்பட்டுள்ள, பார் தனக்கு - பூமி முழுவதுக்கும், இடு காவணம்
போல - மேலேபோட்ட பந்தலை யொக்கும்படி, சிலீமுகம் - அம்புகளை,
விசையுடன் -வேகத்தோடு, தொடுத்தனர்-; (எ - று.)                 (284)