211.-போர்க்களத்தில் பலவகையோசை யுண்டாதல். வெங்கோதைநெடுஞ்சிலையின்சிறுநாண்விசையோரதையும் வெவ்விருதோதையும்வெண், சங்கோதையும்வண்பணையோதையுநால்வகையாகியதானை நெடுங்கடலின், பொங்கோதையுமண்டமுடைந்திடவப்புறமுற்றகலாதுசெவிப் படமற் றிங்கோதையெழுந்ததறிந்திலராலிமையாவிழியோர்முதல் யாவருமே. |
(இ-ள்.) வெம் - கொடிய - வெற்றிமாலையையுடைய, நெடு சிலையின் - நீண்டவில்லின், சிறு நாண் - சிறிய நாணியினது, விசை ஓதைஉம் - வேகத்தாலுண்டாகியஒலியும், வெம் விருது ஓதைஉம் - கொடிய வெற்றிற்கு அடையாளமானசின்னங்களின் ஒலியும், வெண் சங்கு ஓதைஉம் - வெண்மையான சங்கத்தின்ஒலியும், வண் பணை ஓதைஉம் - பெரிய பறைகளின் ஒலியும், நால் வகை ஆகியதானை நெடு கடலின்-பெரியகடல்போன்ற சதுரங்கசேனையின், பொங்கு ஓதைஉம்- மிகுந்த ஒலியும், அண்டம் உடைந்திட - அண்ட கோளம் (அதிர்ச்சியால்)உடைந்துவிடும்படி அப்புறம் உற்று-அப்பாலுள்ள பகிரண்டங்களிலுஞ் சென்று,அகலாது - நீங்காமல், செவி பட - காதுகளிற் கேட்கப்பட, இமையா விழியோர்முதல் யாவர்உம் - இமையாத கண்களையுடைய தேவர் முதலில் எல்லோரும், இங்குஓதை எழுந்தது - இப்போர்க்களத்தில் உண்டான ஒலியென்று. அறிந்திலர் -தெரிந்தாரில்லை; (எ-று.)-வேறு என்ன பேரொலியோவென்று சங்கித்து அஞ்சினர்என்றபடி விருதோதை - விருதுகூறுகிற ஓசையுமாம், மற்று - அசை. (302) 212.- மாயாசரகூடத்தையத்துக் கர்ணன் வீமனோடு பொருவதுகண்டு அருச்சுனன் அங்குச் சேர்தல் தாமங்களின் வைப்பருள்காளையுமச்சரகூடமறுத்தணி தானையொடும் வீமன்றனொடும்பொருகின்றமைதன்விழிகண்டுகளித் திடவில்விசயன் காமன்றனை நீறெழவென்றநுதற்கண்போலெரிகின்ற கருத்துடனே மாமந்தரவெற்பனதேர்கடவும் வலவன்றனொடாகவ மன்னினனே. |
(இ - ள்.) வில்விசயன் - காண்டீவத்தையுடைய அருச்சுனன்,- தாமங்களின் வைப்பு - ஒளிகளுக்கு இருப்பிடமான சூரியன், அருள் - பெற்றருளிய, காளைஉம் -கர்ணனும், அசர கூடம் அறுத்து - (கண்ணன்மாயையாலாகிய) அந்தஅம்புக்கூட்டை அறுத்துத் தள்ளிவிட்டு, அணி தானையொடுஉம் - அழகிய சேனையுடனும், வீமன் தனொடுஉம் - வீமசேனனுடனும், பொருகின்றமை - போர் செய்கிறதை. தன் விழி - தனது கண்கள், கண்டு - பார்த்து, களித்திட - மகிழா நிற்ககாமன்தனைநீறு எழ வென்ற - மன்மதனைச் சாம்பராம்படியெரித்து வெற்றி கொண்ட, நுதல் கண்போல் - (பரமசிவனது) நெற்றிக்கண்போக, எரிகின்ற- (கோபத்தால்) தபிக்கிற, கருத்துடனே- மனத்துடனே, மா மந்தர வெற்பு அன - பெரிய மந்தரமலையைப் போன்ற, தேர் - தேரை, கடவும்-செலுத்துகிற, வலவன்தனொடு-சாரதியாகிய கண்ணனோடு, ஆகவம்-போர்க்களத்தை, மன்னினன்- அடைந்தான்;(எ - று.) |