வேறு. 228.-நாகாஸ்திரத்துக்கு அருச்சுனன்தப்பினமைக்குப் பாண்டவபக்கத்துமன்னர் பெருமகிழ்வுறல். நாகாயு தந்தப்பி நரனுய்ந்த பொழுதத்து நாகக்கொடிச் சேகான நெஞ்சத்த வன்சேனை யிற்றன்செ ருச்சேனையிற் பாகார்க டாயானை நரபாலர் மகிழ்வோடு பரிவெய்தினா ரேகாத சந்தன்னி லெக்கோளு நிகரென்ன விகலின்றியே. |
(இ -ள்.) நாகாயுதம் தப்பி - நாகாஸ்திரந் தவறி, நரன் உய்ந்த பொழுதத்து - அருச்சுனன் பிழைத்தபொழுதில், நாகம் கொடி - சர்ப்பத்துவசத்தையுடைய, சேரு ஆன நெஞ்சத்தவன் - (சிறிதும் இரக்கமில்லாமல்) வயிரம் பொருந்திய மனத்தையுடைய துரியோதனனது, சேனையில் - சேனையிலும், தன் - அருச்சுனனது, செரு சேனையில் -போர்வல்ல சேனையிலுமுள்ள, பாகு ஆர் கடாம் யானை - பாகன் பொருந்திய மதயானைக்கு ஒப்பான, நரபாலர் - அரசர்களெல்லாம், ஏகாதசந்தன்னில் - பதினோராமிடத்தில், எகோள்உம் - எல்லாக்கிரகங்களும், நிகர் என்ன - ஒத்திருப்பதுபோல, இகல்இன்றி - மாறுபாடில்லாமல், மகிழ்வோடு - களிப்போடு, பரிவு - துன்பத்தை, எய்தினார் - அடைந்தார்கள்; (எ-று.) துரியோதனன்சேனையில் நரபாலர்பரிவும் அருச்சுனன் செருச் சேனையில் நரபாலர் மகிழ்வும் ஒருநிகராக எய்தினாரென்று எதிர்நிரனிறை, பரிவெய்தினார் - ஆச்சரியப்பட்டாரென்பாருமுளர். கடா - ஆண் பெயராகவுமாம், ஏகாதசம் - ஒன்றோடுகூடிய பத்து, எல்லாக்கிரகங்கட்கும் பதினோராமிடம் மிக்க பயனைக் கொடுக்கக்கூடிய இடமென்பது, சோதிட நூற்கொள்கை. இது முதல் எட்டுக் கவிகள் - ஈற்றுச்சீ ரொன்று மாங்கனிச் சீரும், மற்றை நான்குங்காய்ச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள், (319) 229,- சல்லியன் மனம்நொந்து கர்ணனைச் சில கூறலுறுதல். அருமார்பிலக்காகவெய்யென்னவெய்யாவகங்காரமும் வருமாசுணந்தன்னைமறுகாலுமேவாமன்மறைசெய்ததும் பொருமாறுநினைவற்றதுங்கண்டுநரனொத்தபோர்மீளியைத் திருமாலொடொப்பானுமுளநொந்துநொந்தம்மசிலகூறுவான். |
(இ -ள்.) திருமாலொடு ஒப்பான்உம் - கண்ணனோடு ஒத்த சல்லியனும்,- அருமார்பு இலக்கு ஆக - (அழித்தற்கு) அரிய (அருச்சுனன்) மார்புலட்சியமாக, எய் -(அம்பு) எய்வாய், என்ன - என்று (தான்) சொல்ல, எய்யா - (அவ்வாறு கர்ணன்அம்பு) தொடுக்காத, அகங்காரம்உம் - நான்என்னுஞ்செருக்கையும், வரு மாசுணந்தன்னை - மீண்டுவந்த நாகத்தை, மறு கால்உம் ஏவாமல் - மற்றொருதரமுந்தொடுக்காமல், மறை செய்ததுஉம் - மறுத்தல் செய்ததையும், பொரும்ஆறு - போர்செய்யும்படி, நினைவு அற்றது உம் - (கர்ணன்) நினைப்பில்லாமற்போனதையும், கண்டு - பார்த்து, |