முகிலூர்தி - பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. காறிக்கனன்று - ஒருபொருட்பன்மொழி. (325) 235.-அருச்சுனன் கர்ணன்பிராணவாயுவையொடுக்கப் பாணந்தொடுத்தல். குறையற்ற தன்வில்லை மகவற்கு மாரன்கு னித்தாசுகஞ் சிறையற்ற கிரிபோல நிற்கின்ற தினகாரி சிறுவன்றன்மெய் மறையத்தொ டுத்தானு யிர்க்கால விப்பான்ம யிர்க்காறொறுங் கறையற்ற மதிபோல நிலவீனு முத்தக்க ழற்காலினான். |
(இ-ள்.) கறை அற்ற-களங்கமில்லாத, மதிபோல - பூர்ணசந்திரன்போல, நிலவுஈனும்-வெண் காந்தியை வீசுகிற, முத்தம்கழல்-முத்துக்களாலாகிய வீரக்கழலையணிந்த, காலினான் - பாதத்தையுடையவனாகிய, மகவற்குமாரன் - இந்திரபுத்திரனான அருச்சுனன்,-குறை அற்ற - ஒருகுறையும் இல்லாத, தன் வில்லை-தனது காண்டீவத்தை, குனித்து-வளைத்து, சிறை அற்ற கிரி போல நிற்கின்ற-இறகுகளறுபட்ட மலைபோல (வலிகுறைந்து) நிற்கிற, தினகாரி சிறுவன் தன் -சூரியகுமாரனான கர்ணனது, மெய்-உடம்பு மறைய-மறையும்படி, மயிர் கால் தொறுஉம் - உரோமத்துவாரங்கள்தோறும், உயிர் கால் அவிப்பான் - பிராணவாயுவை யழிக்கும்பொருட்டு, ஆசுகம் - பாணங்களை, தொடுத்தான் - எய்தான்;( எ - று.) மகவத்குமாரன் - விகாரம். தினகாரி - நாளைச் செய்பவன். சிறையற்ற கிரி - கர்ணன்சாரதியாகிய சல்லியன் தன்னைவிட்டுப் போக இழந்ததற்கு உவமையாகவுமாம். (326) வேறு. 236.-உடம்பெல்லாங்குருதிவழியவும் கர்ணன்வில் அம்புகளை ஓவாதுபொழிதல் எத்தலங் களினு மீகையா லோகை வாகையா லெதிரிலா வீரன், மெய்த்தல முழுதுந் திறந்துகு குருதி வெயிலவன் கரங்கள்போ லுகுப்பக், கொத்தல ரலங்கன் மகுடமுங் கவச குண்டலங் களுமுருக் குலைந்துங் கைத்தல மறந்த தில்லைவிற் குனிப்புங் கடுங்கணை தொடுத்திடுங்கணக்கும். |
(இ-ள்.) ஈகையால் - தானத்தினாலும், ஓகை வாகையால் - களிப்புக்குக்காரணமான வெற்றியாலும் எ தலங்களின்உம் - எல்லாவிடங்களிலும், எதிர் இலா - (தனக்கு) ஒப்புப்பெறாத, வீரன் - வீரானாகிய கர்ணனது, மெய்தலம் முழுதும்உம் - உடம்பினிட முழுவதும், திறந்து - துளையுண்டாகி, உகு - (அத்துளைகளினின்றும்) பெருகுகிற, குருதி - இரத்தம், வெயிலவன் கரங்கள் போல்-சூரியனது கிரணங்கள்போல, உகுப்ப - சொரியவும், கொத்து அலர் - பூங்கொத்துகள்அலரப்பெற்ற, அலங்கல் - வெற்றிமாலையைச்சூடிய, மகுடம்உம் - கிரீடமும், கலசகுண்டலங்கள்உம் - கவசமுங் குண்டலங்களும், உரு குலைந்துஉம் - வடிவமழிந்தபின் |