(இ-ள்.) 'முந்தி - முன்னேநின்று, எதிர் பொரும் - எதிர்த்துப் போர்செய்கிற, விசயன் - அருச்சுனன், தொடுத்த - எய்த கோலால்,- அம்பினால், ஐவருக்குஉம் முன்னோன் - பஞ்சபாண்டவர்க்குந் தமையனான கர்ணன், இன்று - இன்றைக்கு, முடிசாய்ந்து - தலைசாய்ந்து, வீழ்ந்தான்-; 'அந்திபடுவதன் முன்னே - மாலைப்பொழுது கழிவதற்கு முன்பே, ஆவி போம் - உயிர் நீங்கும்,' என்று-, அசரீரி - உடம்பில்லாத (தெய்வத்தன்மையையுடைய) ஆகாசவாணி, எடுத்து உரைப்ப - உரத்துச்சொல்ல,-அன்னை ஆன - அவன் தாயாகிய, குந்தி-, தனது உளம் உருக - தன்மனங் கரையவும், கண் நீர் சோர - கண்களினின்று நீர் பெருகவும், குழல் சரிய - கூந்தல் அவிழவும், கோ கோ என்று - கோகோவென்று அரற்றிக்கொண்டு, போர்க்களத்து - யுத்தகளத்தில், வந்து-, இரு கை தலை புடைத்து- இரண்டுகைகளாலுந்தலையிலே அடித்துக்கொண்டு, தலை நாள் ஈன்ற மகவின்மேல் - முன்னாளில் (கன்னிகையாயிருக்கும்பொழுது) பெற்ற பிள்ளையாகிய கர்ணன்மேல், வீழ்ந்து அழுதாள்-; (எ- று.)-கோ கோ வெனல் - சோகக் குறிப்பு. மன்னோமன்னோ ஈற்றசை: இதுவும் சோகக்குறிப் பென்னலாம். (348) 255.-இதுவும் மேலைக்கவியும் - குந்திவார்த்தை. என்றேயென்றாதையுழைக்கன்னிமாடத் தெழிலிரவிதிருவருளா லீன்றேனீன்ற, வன்றேபொற்பெட்டகத்திற்கங்கையாற்றி லாமுறை யாலுனைவிடுத்தேனருளிலாதேன், வென்றேமணகவர்தருமன்மதலைக்காவிமித்திரனானது கேட்டுன்வீரங்கேட்டு, நன்றேயென்றவப்பயனென்றுன்னிவாழ்ந்தேனாகமுநீயரசாள நடக்கின்றாயோ. |
மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) என்றே - எப்பொழுதே, என் தாதை உழை - எனது தந்தையின் மனையில், கன்னிமாடத்து - கன்னிகாமடத்தில், எழில் இரவி திரு அருளால்- அழகையுடைய சூரியனது மேலான கருணையினால், ஈன்றேன் - (உன்னைப்) பெற்றேனோ, ஈன்ற அன்றே-பெற்ற அப்பொழுதே, உனை - உன்னை, அருள் இலாதேன் - தயையில்லாதயான், பொன் பெட்டகத்தில் - அழகினையுடைய பெட்டியில் (வைத்து), கங்கை ஆற்றில் - கங்காநதியில். ஆம்முறையால் - செல்லும்படி, விடுத்தேன் - விட்டுவிட்டேன்; (பின்பு) வென்று ஏ - (பாண்டவரைச்சூதினாற்) சயித்தே, மண் கவர் தரு - அவர்களிராச்சியத்தைப் பறித்துக்கொண்ட, மன் மதலைக்கு - இராசபுத்திரனான துரியோதனனுக்கு, ஆவி மித்திரன் ஆனது - (நீ) பிராணசிநேகிதனானதை, கேட்டு - கேள்விப்பட்டும் உன் வீரம் - உனது வீரத்தனத்தை, கேட்டு - கேள்விப்பட்டும், என் தவம் பயன் - எனது(முற்பிறப்பிற்செய்த) தவத்தின்பலன், நன்றே என்று நல்லதே யென்று, உன்னி-எண்ணி, வாழ்ந்தேன் - மகிழ்ச்சியோடிருந்தேன், நீ-,(இப்பொழுது), நாகம்உம்அரசாள - (இவ்வுலகத்தில் அரசாண்டதேயன்றிச்) சுவர்க்கலோகத்திலும் அரசர்களும்பொருட்டு, நடக்கின்றாய்ஓ-செல்லுகிறாயோ- (எ - று.) |