பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்39

     (இ-ள்.) 'வெம் சிலை - கொடிய வில்லையுடைய, இமையோர் பதி மகன் -
தேவராஜனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன்,- சஞ்சத்தகர் - சம்சப்தகரும்,
கண்ணன் தரு தனயோர் - கிருஷ்ணன் பெற்ற பிள்ளைகளாகிய
நாராயணகோபாலர்களும், பலர் - எல்லாரும், அடைவே - ஒருங்கே, எஞ்ச -
அழியும்படி, பொருதனன் - போர்செய்தான்,' என்று - என்றகாரணத்தால்,-
கூடார் -பகைவர்கள்,- அஞ்சி - அச்சமுற்று, களம்முழுதுஉம்-, கழுது ஆட -
பேய்கள்கூத்தாடவும், குறை ஆட - உடற்குறைகள் கூத்தாடவும்,- குஞ்சத்தொடு -
குஞ்சங்களும், குடை - குடைகளும், வீழ்தர - விழும்படி (போகட்டு), முதுகு
இட்டனர்-; (எ - று.)-குஞ்சம் - அழகிய மயிராற்செய்யப்பட்ட ஓர்வகை
அலங்காரத்தூக்கு. இது,  ராஜசின்னம். பி - ம்: கழுகாட.             (69)

70.-துரியோதனன் பகைவர்மேல் வருதல்.

முதுகிட்டவர்துரியோதனன்முன்வீழ்தலுநூறைம்
பதுகற்கியுநாலாயிரம்விகடப்பொருபகடு
மதுகைப்படுதேராயிரமுங்கொண்டெதிர்வந்தா
னெதிர்கைப்படவொருமன்னருமில்லாவமர்வல்லான்.

     (இ -ள்.) முதுகு இட்டவர் - (அருச்சுனனுக்குப்) புறங்கொடுத்த வீரர்கள்,
துரியோதனன் முன் - துரியோதனனுக்கு எதிரில், வீழ்தலும் - விழுந்தவுடனே,-
எதிர்க்கை பட - (தன்னை) எதிர்த்தல் செய்தற்கு, ஒரு மன்னர்உம் இல்லா -
ஓரரசரையும் (இதுவரை) பெற்றிராத, அமர் வல்லான் - போரில்வல்லவனான
அத்துரியோதனன்,- நூறு ஐம்பது கற்கிஉம் - ஐயாயிரங் குதிரைகளையும்,
விகடம்பொரு நால் ஆயிரம்பகடுஉம் - விசேஷ மதத்தையுடைய போர்
செய்கின்றநாலாயிரம் யானைகளையும், மதுகை படு - வலிமைபொருந்திய, தேர்
ஆயிரமும்-,கொண்டு - உடன்கொண்டு, எதிர்வந்தான்-; (எ -று.) -
எதிர்கைப்பட - ஒப்பாகவென்றுமாம். விகடம் - பெருமையுமாம். பி -ம்:
முனைவீழ்தலும்                                               (70)

71.- தருமன் துரியோதனனை எதிர்த்தல்.

குருமித்துந டக்கின்றன னிவனோடுகொ டுங்கா
குருமிற்பொரு குவமென்றுள முகளித்தெழ முனைமேல்
நிருமித்துந டந்தான்மனு நீதிகொரு நிலையான்
றருமத்தின துயிரென்றுரை தக்கோர்சொல மிக்கோன்.

     (இ-ள்.) 'குருமித்து - ஆரவாரித்து, நடக்கின்றனன்- (போர்க்கு) வருகின்றான்:
(ஆதலால்), இவனோடு - இத்துரியோதனனோடு, கார் கொடு உருமின் - மேகத்தில்
தோன்றுகிற கொடிய இடிபோல, பொருகுவம் - போர்செய்வோம்,' என்று - என்று
எண்ணி, உளம் - மனம், உகளித்து எழ - (உற்சாகத்தாற்) குதித்துக் கிளர, மனு
நீதிக்கு ஒரு நிலையான் - மனு(வினால் தருமசாஸ்திரத்திற்சொல்லப்பட்ட நல்ல)
நீதிகட்கெல்லலாம் ஓர் இருப்பிடமாக வுள்ளவனும், தருமத்தினது உயிர் என்று
தக்கோர் உரை சொல மிக்கோன் - தருமத்