யினது, நாணம்உம் - வெட்கத்தையும், துகில்உம் - ஆடையையும் நோக்கினை - (போகாதபடி) கடாட்சித்தருளினாய்; (எ -று.) சேர்ந்த இடத்தைச் சுட்டு அழித்தல்பற்றி, கோபத்தை அழலென்றார். 'நுங்கழலனையாள்' என்றதனால், அவமதிக்கத்தக்கவளல்ல ளென்றபடி; இனி, நும்கழல் அனையாள் என்று பிரித்து - உமது திருவடிபோன்றவ ளெனினுமாம்; என்றது,பக்திமிகுதிபற்றி. அலமர, அலமா - பகுதி. (100) 10. | கானகமருங்கின்மேவலன்பணியாற்கடும்பசியுடன்வருங் கடவுண், மானவமுனிவன்றாபமுஞ்சாபவருத்தமுமுறாவகை யொழித்தாய், யானொருபொருளாத்தூதுசென்றருளியெதிரிலாவிதுரன் வெஞ்சிலையும், பானுவின்மதலைகவசமுமகற்றிப்பரிந்துபல்வினைகளும் புரிந்தாய். |
(இ-ள்.) கானகம் மருங்கில் - காட்டினிடத்தில், மேவலன் பணியால் - பகைவனாகிய துரியோதனனது சொல்லினால், கடு பசியுடன் - மிகுந்த பசியுடனே, வரும் - வந்த, கடவுள் - தெய்வத்தன்னையையுடைய, மானவ முனிவன் - மனிதவிருடியாகிய துருவாசரது, தாபம் உம் - பசித்துன்பமும், சாபம் வருத்தம்உம் - சபித்தலாலுண்டாகுந் துன்பமும், உறா வகை - உள்ளனவாகாதபடி, ஒழித்தாய் - போக்கினாய்; யான் ஒரு பொருள் ஆ -(பொருளல்லாத) என்னை ஒரு பொருளாக (மதித்து), தூது சென்று அருளி -(எங்களுக்காகத்துரியோதனனிடந்) தூதனாகப்போயருளி, எதிர் இலா - ஒப்பில்லாத, விதுரன் - விதுரனது வெம் சிலைஉம்- கொடிய வில்லையும், பானுவின் மதலை - சூரியகுமாரனது, கவசம்உம் - கவசத்தையும், அகற்றி - ஒழித்து, பரிந்து - இரங்கி, பல் வினைகள்உம் - (இன்னும்)பல தொழில்களையும், புரிந்தாய்-; (எ - று.) துருவாசருக்குத்தெய்வத்தன்மை - சபிக்கச்சபிக்கத் தவங் குறைவுபடாமல் மேன்மேல்வளரப்பெறுவதொருவரம். முன்னிரண்டடிகளிற்குறித்தவரலாறு:- பாண்டவர்கள் வனவாசஞ்செய்கையில் துருவாசமுனிகர் ஒருநாள் பலமுனிவர்களோடுந்துரியோதனன் அரண்மனைக்குச் சென்று, அறுசுவை யமைந்த அருவிருந்துண்டு, 'உனக்கு வேண்டும் வரம் பெறுவாய்' என்ன, அவன் செல்வச் செருக்கினாலும் பாண்டவரை இம்முனிவர் சாபத்துக்கு உட்படுத்த வேண்டு மென்னுங் கருத்தினாலும் 'இன்றைக்கு எமதுமனையில் அமுதுசெய்தது போலவே நாளைக்குப் பாண்டவர்பக்கல் சென்று அமுது செய்ய வேண்டுவதே எனக்குத் தரும்வரம்' என்ன, அப்படியே அம்முனிவர் பல முனிவர்களோடும் மற்றைநாள் மத்தியானபொழுது பாண்டவரிருந்த ஆச்சிரமத்தில் வந்து சேர்ந்து, 'இன்றைக்கு எங்களுக்கு நல்லுணவு இடவேண்டும்' என்று சொல்ல, அதற்குமுன்னமே பலமுனிவர்களோடும் வேண்டியவாறு உண்டு சூரியனருளின அக்ஷயபாண்டத்தைக் கழுவிக் கவிழ்த்துவிட்ட பாண்டவர்களை அம்முனிவர்களை நீராடி வரச் சொல்லி அனுப்பிவிட்டு இரதற்கு என்செய்வதென்று எல்லோரும் மனங்கலங்கிக் கிருஷ்ணபகவானைத் தியானிக்க, அவர் உடனே |