கூடாதென்று கர்ணனிடம் கூறினது, இது. தேற்றா னென்னும் பிறவினை, இங்குத் தேறானென்னத் தன்வினைப்பொருள்பட்டு நின்றது. 52. | இதயமும் வலியுந் தேயத் தியற்கையும் வினையும் பற்பல கதிகளு முணர்ந்து பூணுங் கவனமாத் தெரிந்து பூட்டி யெதிரிதன் விசயங் கூற லிடிக்குநண் பாதல் வெம்போர் முதிரிடங் கால மெண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய். |
(இ-ள்.) இதயம்உம் - (குதிரைகளின்) மனத்தையும், வலிஉம் - வலிமையையும், தேயத்து இயற்கைஉம் - (அவை பிறந்த) நாடுகளின் தன்மையையும், வினைஉம் - (அவற்றிற்கு ஏற்ற) தொழில்களையும், பற் பல் கதிகள் உம் - பலவகைப்பட்ட நடைகளையும், உணர்ந்து - அறிந்து, பூணும் - பூட்டுதற்குரிய, கவனம் மா - விரைந்தோடுதலையுடைய குதிரைகளை, தெரிந்து - ஆராய்ந்து, பூட்டி -(தேரில்) அணைத்து,- எதிரி தன் விசயம் கூறல் - பகைவனது விசேஷஜயத்தைச் சொல்லுதலும், இடிக்கும் நண்பு ஆதல் - (சொல்லவேண்டிய நன்மைகளை) நெருக்கிச்சொல்லுகின்ற சிநேகிதனாதலும், வெம் போர் - கொடிய போர்த் தொழிலுக்கு,முதிர் - சிறந்து, இடம் - இடத்தையும், காலம் - காலத்தையும், எண்ணல் -ஆலோசித்தலும், சூதர்க்கு - சாரதிகளுக்கு, முறைமை - கடமையாம்: கண்டாய் -அறிவாய்; (எ -று.)- என்றது, அருச்சுனன் வெற்றியைச் சல்லியன் சிறப்பித்துச்சொன்னதற்கு நீ கோபங்கொள்ளுதல் முறைமையன்றென்று குறிப்பித்தபடி. (143) வேறு. 53.- இங்ஙன் துரியோதனன் பேசிநிற்கையில், பாண்டவர் பக்கத்தார் தம்தேரைக் கர்ணன்நின்றவிடத்துச் செலுத்தல். என்ன மன்னர்மன் னவன்மு கம்புகுந் திருவ ருக்குநல் லுரையெடுத்துரைத், தந்நி லத்திலே நிற்க வல்விரைத் தறன்ம கன்படைக் கதிப னென்றுமுன், சொன்ன திண்டிறற் றுருபதேயனுஞ் சோம கேசரா யுள்ள சூரருங், கன்ன னின்றவம் முனையி னெஞ்சினுங் கடுகு தங்கடேர் கடவினார்களே. |
(இ - ள்.) என்ன - என்று, மன்னர் மன்னவன் - இராசராசனான துரியோதனன், முகம் புகுந்து - எதிரிற் சென்று, இருவருக்கும்-, நல் உரை எடுத்து உரைத்து - நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லி, அ நிலத்திலே நிற்க - அந்த இடத்திலே நின்று கொண்டிருக்க,- (அப்பொழுது), அறன் மகன் படைக்கு அதிபன் என்று - தருமபுத்திரனது சேனைக்குத் தலைவனென்று, முன் சொன்ன - முன்னே சொல்லப்பட்ட, திண் திறல் - மிகுந்தவலிமையையுடைய, துருபதேயன்உம் - துருபதராஜகுமாரனான திட்டத்துய்மனும், சோமக ஈசர் ஆய் உள்ள சூரர்உம் - சோமககுலத்துக்குத் தலைவராயுள்ள வீரர்களும், கன்னன் நின்ற அ முனையில் - கர்ணன் நின்ற அப்போர்களத்தினிடத்தில், நெஞ்சின்உம் கடுகு - மனோவேகத்தைக்காட்டிலும் விரைந்துசெல்கிற, தங்கள் தேர் - தங்களது தேர்களை, வல் விரைந்து - மிகவும் வேகமாக, கடவினார்கள் - செலுத்தினார்கள்; |